இலங்கை தொடர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் பிரபல வர்த்தகரான முகமது இப்ராஹிம் கைது செய்யப்பட்டிருப்பதில், கொழும்பு நகரின் வர்த்தக சமூகம் அதிர்ந்து போயிருக்கிறது. அவருடைய மகன்களின் கடும்போக்குவாதம் அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
கொழும்பு நகரில் சற்று வசதியானவர்கள் வசிக்கும் தெமதகொட பகுதியில் உள்ள அமைதியான மஹாவில கார்டன் வீதியில் அமைந்திருக்கிறது முஹமது இப்ராஹிமின் வீடு. பார்த்தவுடனேயே வசதியானவர்கள் வசிக்கும் வீடு எனச் சொல்லிவிடக்கூடியபடியான மிகப் பெரிய வீடு.
ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஷாங்ரி - லா ஹோட்டலிலும் கிங்ஸ்பரி ஹோட்டலிலும் காலை உணவு நேரத்தில் குண்டை வெடிக்கச் செய்த இன்ஸாஃப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிமின் தந்தைதான் முகமது இப்ராஹிம். பிறகு இவரது வீட்டிற்கு காவல்துறை வந்தபோது, குண்டைவெடிக்கச் செய்து அவரது கர்ப்பிணி மனைவி, இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதற்கு பிறகு முஹமது இப்ராஹிமின் குடும்பம் முழுவதையும் காவல்துறை கைது செய்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியை மட்டுமல்லாமல் கொழும்பு வர்த்தக வட்டாரங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
யார் இந்த முகமது இப்ராஹிம் ?
முகமது இப்ராஹிம் கண்டியின் தெல்தொட பகுதியைச் சேர்ந்தவர். 16-17 வயதில் வேலை தேடி கொழும்பு நகருக்குப் புலம் பெயர்ந்தவர், முதலில் ஒரு உணவகத்தில் சமையல் வேலை பார்த்தார். பிறகு தெருவோரக் கடை ஒன்றையும் வைத்திருந்தார். அதற்குப் பின் மிளகு, பட்டை, கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களுக்கான கமிஷன் ஏஜென்டாகவும் செயல்பட்டார். அதற்குப் பிறகு சிறிது சிறிதாக நேரடியாக வர்த்தகத்தில் இறங்கிய இப்ராஹிம், மிக வெற்றிகரமான வர்த்தகராகவும் உயர்ந்தார். 1986ல் கொழும்புவில் உள்ள பரபரப்பான பழைய மூர் தெருவில் இஷானா என்ற நிறுவனத்தைத் துவங்கினார். அதற்குப் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளோடு மசாலாப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் பணியில் இவரது இஷானா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இவரது நிறுவனத்தின் இணையதளம், "சர்வதேச வாடிக்கையாளர்களிடம் மட்டுமல்ல, விவசாயிகளிடமும் நம்பிக்கையைப் பெற்றவர்கள் தாங்கள்" எனக் குறிப்பிடுகிறது (இப்போது இணைய தளம் முடக்கப்பட்டிருக்கிறது).
கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டிருக்கும் முகமது இப்ராஹிம், பல முறை வர்த்தகச் செயல்பாட்டிற்காக அரச தலைவர்களிடம் விருதுகளைப் பெற்றிருக்கிறார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புதான் தற்போது வசிக்கும் தெமதகொட பகுதியில் குடியேறினார் இப்ராஹிம்.
தெமதகொட பகுதியில் வசிப்பவர்களைப் பொறுத்தவரை, இப்ராஹிமைப் பற்றியும் அவரது குடும்பத்தினரைப் பற்றியும் அதிகம் அறிந்திருக்கவில்லை. எதிர்ப்பட்டால் வணக்கம் சொல்வது, தொழுகையின்போது சந்திப்பது என்ற வகையில்தான் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
"எங்கள் தெருவில் வசிக்கும் ஒருவருக்கு பயங்கரவாதத் தொடர்பு இருக்குமென்பதை நம்பவே முடியவில்லை. ஆனால், நாங்கள் இப்ராஹிமை மட்டுமே பார்த்திருக்கிறோம். அவரது மகன்களைப் பார்த்ததில்லை பேசியதுமில்லை. அவர்கள் பின்னணியும் தெரியாது" என்கிறார் அவரது வீட்டிலிருந்து மூன்று நான்கு - வீடுகள் தள்ளி குடியிருக்கும் ருஸ்தம். அவர் தன்னைத் தேடி வந்தவர்களுக்கு உதவிசெய்வார் என்பது குறித்து கேள்விப்பட்டிருப்பதாகச் சொல்லும் ருஸ்தம், தன் மகன்களின் இப்படியான செயல்பாடுகள் குறித்து நிச்சயம் அறிந்திருக்க மாட்டார் என்கிறார்.
முஹமது இப்ராஹிமிற்கு இர்ஷான் அகமது, இன்சாஃப், இல்ஹாம், ஹிஜாஸ், இஃப்லால், இஸ்மாயில், இஷானா, இஜஷா, இபாதா என 9 குழந்தைகள். இதில் ஆறு பேர் ஆண்கள். மூன்று பேர் பெண்கள். இஸ்மாயிலைத் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
முகமது இப்ராஹிமின் முதல் மகனான இர்ஷான் அகமது பல இடங்களில் கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார். தாக்குதலில் நேரடியாகத் தொடர்புடைய இன்சாஃபும் (33) இல்ஹாமும் (31) இவருடைய தம்பிகள். இதில் இன்சாஃப் தாமிர வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். கொலாசஸ் காப்பர் என்ற இவரது நிறுவனத்தின் இணையதளம், இஷானா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களது தாய் நிறுவனம் எனக் குறிப்பிடுகிறது.
இன்சாஃபிற்கும் இல்ஹாமிற்கும் கடும்போக்குவாத இஸ்லாமிய இயக்கங்களுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது, அவர்கள் ஏன் அதனை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள் என்பது குறித்து பலருக்கும் ஆச்சரியம் இருக்கிறது.
இஷானா
"இந்தச் சம்பவம் எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டில் உள்ள பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும் என்பது உறைக்கிறது. எல்லாவிதத்திலும் வெற்றிகரமானவராக இருந்த இப்ராஹிமின் மகன்கள் ஏன் இந்த வழியில் இறங்கினார்கள் என்பது புரியவில்லை" என்கிறார் பழைய மூர் தெருவில் கடை வைத்திருக்கும் இப்ராஹிமின் உறவினர்களில் ஒருவர்.
பழைய மூர் தெருவில் முகமது இப்ராஹிமுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த கடைக்காரர்கள் பலரும், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் நேஷனல் தௌஹீத் ஜமாத் என்ற பெயரையே இப்போதுதான் கேள்விப்படுவதாகத் தெரிவித்தார்கள்.
"சகோதரர்களிடம் சில சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறேன். ஆனால், அவர்கள் ஒருபோதும் இம்மாதிரியான எண்ணத்தை வெளிப்படுத்தியதில்லை. எங்களை அதனை நோக்கி ஈர்க்கவும் முயற்சிக்கவில்லை" என்கிறார் இஷானாவுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கும் இளைஞர் ஒருவர்.
இலங்கையின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான ரிஷாத் பத்யுதீனுடன் முகமது இப்ராஹிம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை முன்வைத்து, அவரையும் இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், பிபிசியிடம் பேசிய ரிஷாத் பதியுதீன் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கடுமையாக மறுத்தார்.
"வர்த்தகத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் தினமும் பல வர்த்தகர்களைச் சந்திக்கிறேன். அவர்களோடு எல்லாம் எனக்கு தொடர்பு இருக்கிறது என்று அர்த்தமா? முகமது இப்ராஹிமிற்கு பல அரசு தலைவர்கள் விருதுகளை வழங்கும் படங்கள் இருக்கின்றன. அதற்காக அவர்களோடெல்லாம் தொடர்புபடுத்திப் பேசுவார்களா?" என்கிறார் ரிஷாத்.
தானோ, தன் குடும்பத்தினரோ எந்தவிதத்திலும் தற்கொலைதாரிகளுடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்கிறார் ரிஷாத்.
இப்ராஹிமின் வீட்டில் தற்போதும் காவல்துறையினர் தொடர் சோதனைகளைச் செய்துவருகிறார்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து அந்தப் பகுதி மீள்வதற்கு பல காலம் பிடிக்கலாம்.
- முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் -
0 Comments