Subscribe Us

header ads

முஸ்லிம்களாகிய நாங்கள் நாட்டுக்காகவும், பிரதேசத்துக்காகவும் போராடலாமா ? அதில் மரணிப்பவர்களின் நிலை என்ன ?

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


பல்வேறுபட்ட இன, மொழி, கலாச்சாரத்தையுடைய மக்கள் வாழ்கின்ற நாட்டில் இன, மொழி, கலாச்சார ரீதியாக நாடு பிளவுபடுவதனை தடுத்து தூரநோக்கில் அதன் ஒருமைப்பாட்டினை பேனும் பொருட்டு நாட்டுப்பற்று என்னும் போலி தேசபக்தி மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றது.

அவ்வாறான தேசபக்தியை மக்கள் மத்தியில் தொடர்ந்து சூடேற்றி வைத்துக்கொள்வதற்காக அயல் நாடுகளுடன் முறன்படுவதனையும், பனிப்போரில் ஈடுபடுவதனையும், கனரக ஆயுத தளபாடங்களை காட்சிப்படுத்துவதனையும் நாங்கள் அவ்வப்போது காண்கிறோம்.

அதுபோல் உள்ளூர் அரசியல்வாதிகள் தங்களது ஊரில் உள்ள ஒட்டுமொத்த வாக்குகளையும் கவரும்பொருட்டு, பிரதேசவாத சிந்தனைகளான ஊருக்கு பிரதிநிதித்துவம் என்ற பிரச்சாரத்தினை ஊர்மக்கள் மத்தியில் விதைப்பதும், அதற்காக மக்களை உசுப்பேத்துவதனையும் நாங்கள் அவதானிக்கின்றோம்.    
  
பதவி என்னும் சுயநலத்துக்காக இவ்வாறான அரசியல்வாதிகளின் திருகுதாளங்களை முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்றுக்கொள்ளலாமா ? அறியாதவர்கள் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டாலும், அறிந்தவர்கள் அதனை மக்களுக்கு எத்திவைக்காதது குற்றமாகாதா ?

காபீர்களின் ஆட்சியின்கீழ் வாழ்கின்ற நாங்கள், பிரதேசரீதியாக பிளவுபடுகின்றபோது ஒற்றுமையை இழந்து பலயீனமான சமூகமாக வாழவேண்டிவரும் என்ற அச்சஉணர்வு எங்களிடமில்லை.   

அன்னியப்படைகள் தங்களது பிரதேசங்களை அல்லது நிலங்களை ஆக்கிரமித்தால், அவ்வாக்கிரமிப்புக்கு எதிராக போரிடுவது எங்கள் மீது கடமையாகும். ஆனால் தேசம் மற்றும் பிரதேசம் என்ற குறுகிய வரையறைக்குள் முஸ்லிம்களாகிய நங்கள் எங்களுக்குள் பிரிந்து சண்டையிடுவதனை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமையில் உஹது யுத்தம் முடிவடைந்து காபீர்கள் சென்றதன்பின்பு போர்க்களத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த சஹாபாக்களின் உடல்களை தேடும்பணி நடைபெற்றது.

அதில் மதீனாவிலிருந்து வந்த நபி தோழர் ஒருவர் மக்கா காபீர்களுக்கு எதிராக ஆவேசமாக போரிட்டு அதில் கடுமையாக காயமடைந்த நிலையில் காணப்பட்டார். தான் இனவெறிக்காகவும், மதீனாவை காப்பதற்காக மக்காவாசிகளுக்கு எதிராக போரிட்டதாகவும் தனது இறுதித்தருவாயில் கூறினார்.

இவரது நிலை பற்றி எத்திவைக்கப்பட்ட போது, “இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று ரசூலுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

எவர் இனவெறி, தேசப்பற்று மற்றும் பிரதேசத்துக்காக போரிட்டு அதில் மரணிக்கின்றாரோ, அவர் இஸ்லாமிய கொடியின்கீழ் அல்லது அதற்குமேலான ரசூலுல்லாஹ்வின் படையிலிருந்து போரிட்டாலும், அவர் செல்லுமிடம் நரகம் என்று ரசூலுல்லாஹ் அவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள்.        
     
இவ்வாறன இஸ்லாமிய வரையறையினை அறிந்துகொள்ளாமல் நாங்கள் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட சுயநல நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டுக்கொண்டு பிரதேசரீதியாக அற்ப விடயங்களுக்காக பிரிந்து நிற்கின்றோம்.  

எனவே கலிமா சொன்ன முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்ற அடிப்படையில் எமது ஒற்றுமையை பேணும்போதுதான் எங்களுக்கு பலத்தினை அதிகரிக்க முடியும். இல்லாவிட்டால் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நங்கள் பலமிழந்து சிதறிவிடுவோம். இதனால் நாங்கள் மட்டுமல்ல எங்களது எதிர்கால சந்ததியினர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.   

Post a Comment

0 Comments