Subscribe Us

header ads

’படுகுழிக்குள் பொருளாதாரம்’ விரைவில் இலங்கைக்கு ஏற்பட இருக்கும் ஆபத்து

க.கமல்


நாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில், இலங்கையால் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களைச் செலுத்த முடியாத நிலைமை ஏற்படுமென, இலங்கையின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. நாடுகளின் நிதி நிலைமை தொடர்பாக ஆராயும் மூடீஸ் நிறுவனம், இலங்கையின் கடன் தரப்படுத்தலைத் தரமிறக்கிய பின்னணியிலேயே, இக்கருத்தை, அக்கட்சி வெளிப்படுத்தியுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள, நிதியமைச்சருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட, முன்னாள் நிதியமைச்சரான மங்கள சமரவீரவே, இவ்வெச்சரிக்கையை வழங்கினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி, நாட்டை, பொருளாதாரப் படுகுழிக்குள் தள்ளும் ஆபத்து உள்ளது எனவும், அவர் எச்சரித்தார். குறிப்பாக, எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி, 1 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் மதிப்பிலான இறையாண்மைப் பிணைமுறியொன்று முதிர்ச்சியடைகின்ற நிலையில், தற்போதைய நெருக்கடி நீண்டு செல்லுமாயின், அக்கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்படாலாமென, அவர் இங்கு குறிப்பிட்டார்.
"அடுத்த சில வாரங்களுக்குள், பாதீட்டை (வரவு - செலவுத் திட்டம்) நாங்கள் அங்கிகரிக்காவிட்டால், ஜனவரி 1, 2019இலிருந்து, அரசாங்கத்தால் எந்தவிதப் பணத்தையும் செலவிட முடியாமல் இருக்கும்" என விளக்கமளித்தார்.
"இம்மாதம் 5ஆம் திகதி, வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க நாம் எதிர்பார்த்திருந்த நிலையில், மைத்திரி - மஹிந்த கூட்டால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக அது சாத்தியப்படவில்லை. இவை அனைத்தும், ஒரு நபரின் அதிகாரத் தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களே" என, அவர் விமர்சித்தார்.
பாதீடொன்று அங்கிகரிக்கப்படாவிட்டால், அரச துறையினருக்குச் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட, மக்கள் பணத்தை முகாமைத்துவம் செய்யும் அரச செயற்பாடுகள் அனைத்தும், முற்றாக முடங்கும் என எச்சரித்த அவர், எனவே 2019ஆம் ஆண்டுக்காகத் தாம் தயார் நிலையில் வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தைக் கொண்டுவர இடமளிக்க வேண்டும் என்றும், தமது தரப்புக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதால் மாத்திரமே, நாடு பொருளாதார ரீதியில் எதிர்கொள்ளவுள்ள பெரும் நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments