Subscribe Us

header ads

முதியோர் இல்லங்கள்; அவசியமா? அனாவசியமா?


இன்றைய சமூகப் பொதுவெளியின் ஒரு பகுதியில் பேசுபொருளாக உருவெடுத்துள்ள விடயங்களில் இந்த முதியோர் இல்லங்களும் ஒன்றாகும். இற்றைக்கு சுமார் இருபது, இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்னர் இந்த முதியோர் இல்லங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும் காலவோட்டத்தில் உருவாகிய நவீனமயப்படுத்தப்பட்ட குடும்பக்கட்டமைப்பு, தானும் தனக்கும் மட்டுமே என்ற மனப்பாங்கு, பிறர் நலம் நாடுதலின் மீதுள்ள வெறுப்புணர்வு மற்றும் இறைவனின் நியதி போன்ற காரணிகளால் இந்த முதியோர் இல்லங்களின் தேவை சமூகத்தால் உணரப்பட்டதுடன் அவை உருவாக்கமும் பெற்றன.

முதியோர் இல்லங்கள் உருவாக்கப்பட்டதையோ அவற்றை உருவாக்கியவர்களையோ நாம் ஒருபோதும் குறை கூறமுடியாது. ஆனால் தமது தாய் தந்தையர்களை, பாட்டன், பாட்டிகளை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவைக்கின்ற பிள்ளைகளை பற்றியே இங்கு நாம் விவாதிக்கவேண்டியுள்ளது.

இன்று அவர்கள், நாளை நாங்கள் என்பது காலச்சக்கரம் காலாதிகாலமாக உணர்த்தி வருகின்ற நியதிகளில் ஒன்று. பெற்றோர்களின் வலிகளை உணர்வதற்கு ஒரேவழி நாம் பெற்றோர்களாவதுதான். அதுதவிரவுள்ள வேறு எந்தவொரு வர்ணனைகளாலும் அதை விளக்கிவிடமுடியாது. இன்று நாம் நமது பிள்ளைகளுடன் அனுபவிக்கின்ற இதே சுகமும் சோகமும்தான் அன்று நம்மோடு நமது பெற்றோர்கள் அனுபவித்தது.

இருந்தும் நம்மை பெற்று வளர்த்து ஆளாக்குவதற்காக அவர்கள் பட்ட பாடுகள் அனைத்தையும் ஆளான மறுநாளே நாம் மறந்துவிடுவது எப்பேர்ப்பட்ட ஒரு நன்றிகெட்டத்தனமாக இருக்கவேண்டும்? நிச்சயமாகவே தமது பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதற்காக பிள்ளைகள் கூறுகின்ற காரணங்கள் எதுவாக இருந்தாலும் அவையனைத்துமே தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கின்ற வகையிலான வெற்றுக் காரணங்கள்தான் என்பது வெள்ளிடை மலையான உண்மையாகும்.

அதேவேளை, இதை நாம் அந்த முதியோர்களின் இடத்திலிருந்து சிந்திக்கும்போது;

தன்னுடைய பிள்ளைகளை தான் வளர்த்த விதத்தின் யதார்த்த நிலையினை உணர்த்தும் ஒரு செயற்பாடாகவே இதை நோக்கவேண்டியுள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளைகளை உயர்ந்த இடத்தில் வைத்து அழகுபார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பானது. அதேநேரம் தன்னுடைய குழந்தைகளை இறையச்சம் உள்ள குழந்தைகளாக வளர்க்கவேண்டும் என்றும் அவர்கள் வளர்ந்ததும் மார்க்கம் காட்டிய வழியில் வாழவேண்டும் என்றோ எதிர்பார்க்கின்ற, அதற்காக தமது குழந்தைகளை தயார்படுத்துகின்ற பெற்றோர்கள் எத்தனைபேர்?


இவ்வாறு மார்க்கத்தையும் இறையச்சத்தையும் பெற்றோர்கள் பற்றிய இறை விதியின் யதார்த்தத்தையும் உரிய வயதில் தமது பிள்ளைகளுக்கு ஊட்டத்தவறியதன் விளைவுதான் இன்று அப்பெற்றோர்கள் பிள்ளைகளுடைய சுகபோக வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்டு முதியோர் இல்லங்களில் இறக்கி விடப்படுகின்ற நிலைமைக்குள் தள்ளியுள்ளது என்பதை ஏற்பதற்கு பலருக்கும் கசப்பாக இருந்தாலும் கணிசமான விகிதாசாரம் இதில்தான் உண்மையுள்ளது.

(யாசகம் கேட்டு வந்த முதியோர் ஒருவருடய அனுபவப் பகிர்வின் சில துளிகள்)

தாஹிரா நஸீர்
04/07/2018

Post a Comment

0 Comments