Subscribe Us

header ads

கண்டி, தெல்தெனிய பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலையின் இன்றைய நிலை என்ன?

கண்டி, தெல்தெனிய பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் எதுவும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் அதிரடிப்படையினர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டி மாவட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதியில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊடரங்கு சட்டம் இன்று காலை ஆறு மணிக்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் எரிபொருள் நிலையம் ஒன்றுக்கு அருகில் ஏற்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதி கிரியை நேற்று மாலை அவிமாலை பிரதேசத்தில் இடம்பெறவிருந்த நிலையில், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

முஸ்லிம் இளைஞர்கள் சிலரினால் தாக்குதலுக்கு உள்ளான சிங்கள இளைஞன் 10 நாட்களின் பின்னர் உயிரிழந்தார். படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் மரணமடைந்திருந்தார்.

இளைஞனின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அது வன்முறையாக மாறியிருந்தது. இந்த சம்பவத்தில் அம்பாறை விகாரையின் தேரர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மற்றும் தம்மரத்ன தேரர் உட்பட பிரதேசத்தின் பல தேரர்கள் அங்கு சென்று அவர்களுடன் இணைந்துள்ளனர்.

குழப்பமடைந்த மக்கள் கண்டி, மஹியங்கனை வீதியை மறித்து திகன மற்றும் தெல்தெனிய பிரதேசத்தில் டயர் கொழுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கண்டி, மஹியங்கனை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சிலர் வாகனங்களின் காற்றை பிடிங்கி விட்டமையினால் அந்த வாகனங்கள் இடைநடுவில் நிறுப்பட்டுள்ளன. சிலர் திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் வெள்ளை கொடி உயர்த்தி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு வெளியிட்டு தெல்தெனிய, மெனிக்ஹின்ன, கென்கல்ல உட்பட பல பிரதேசங்களின் கடைகளை மூடி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் மேற்கொண்டமையின் காரணமாக கடைகள் பலவற்றிற்கு சேதம் ஏற்பட்டது.

எதிர்ப்பாளர்களின் செயற்பாடு அதிகரித்தமையினால் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டு அவர்களை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

எனினும் நிலைமை தீவிரமடைந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு அவர்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக கிளர்ச்சி கட்டுப்பாட்டு குழுக்கள், அந்த பகுதியின் பல இடங்களில் வீடு தடுப்புகளை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடைகளுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது அந்த பகுதியில் அமைதியான சூழல் நிலவி வருகின்ற போதிலும் தீவிர பாதுகாப்பு பணிகளில் அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவம் காரணமாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான 27 வர்த்தக நிலையங்கள், பல வீடுகள், ஒரு பள்ளிவாசல் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments