(ஹபீல் எம்.சுஹைர்)
எடுத்த எடுப்பில் பிறந்த குழந்தை ஓடி விளையாட முடியாது. அதன் வளர்ச்சிப்படிகளில் ஒரு நிலையை அடையும் போதே, அக் குழந்தை எழும்பி நடக்கத் தொடங்கும். இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன் முதலாக, இலங்கை பூராகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொண்டிருந்தது. இத் தேர்தலில் இலங்கை பூராகவும், அக் கட்சி 160 அளவான உறுப்பினர்களை பெற்றுள்ளது. இது அ.இ.ம.காவானது 15 மாவட்டங்களில் போட்டியிட்டு பெற்றுக்கொண்ட ஆசனங்கள். முஸ்லிம் காங்கிரஸானது 19 மாவட்டங்களில் போட்டியிட்டு 171 உறுப்பினர்களை பெற்றுள்ளது. இதில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் மு.கா செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில், இவர்கள் பெற்றுக்கொண்ட விகிதாசார ஆசனங்களில் இருந்து, ஐக்கிய தேசிய கட்சிக்கு குறித்த எண்ணிக்கையான ஆசனங்களை வழங்க வேண்டும். இதனை அவர்கள் விகிதாசார ஆசனங்களை பகிரும்போது தெளிவாக காணக்கூடியதாக இருக்கும். அவற்றையும் உள்ளடக்கியே இந்த உறுப்பினர் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றை வைத்துக்கொண்டு, இத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பெற்றுக்கொண்டுள்ள ஆசனங்களை நோக்குகின்ற போது, இரு கட்சிகளும் தேசிய ரீதியில் முஸ்லிம்களிடத்தில் சம பலத்தில் இருப்பதை அறிந்துகொள்ளலாம். இது சாதாரணமாக நோக்கத்தக்க ஒரு விடயமல்ல. மு.காவுக்கு இலங்கை பூராகவும் பலமான கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. அது அண்ணளவான மூன்று தசாப்தகால வயதுடையது. இந்த வயதுக்கு, அது கொண்டிருக்கும் கட்டமைப்பின் ஆழத்தை நினைத்து கூட பார்க்க முடியாது. இதுபோன்ற பல தேர்தல்களை மு.காவானது களம் கண்டுள்ளது. இப்படி அனுபவம் நிறைந்த மு.காவுடன், எந்தவித அனுபவமும் இல்லாமல், முதன் முறையாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மோதி, பெருமளவானதும் மு.காவுக்கு சமனானதுமான உறுப்பினர்களை பெறுவது, எதிர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம் மக்களின் முதற் தெரிவாக அமையும் என்ற செய்தியை எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல விதமான புதிய படிப்பினைகளையும், தேர்தல் நுட்பங்களையும் பெற்றிருக்கும். அதனை எதிர்கால தேர்தல்களில் பயன்படுத்துகின்ற போது, இதனை விட பெரிய வெற்றிகளை சுவைக்க கூடியதாக அமையும்.
அது மாத்திரமல்ல, இத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்டுள்ள ஆசன எண்ணிக்கையானது, எதிர்காலத்தில் அது ஏனைய தேர்தலை எதிர்கொள்ள பலமான அடித்தளமாக அமையும் என்பதில் யாரும் சந்தேகம் இருக்காது. எடுத்த எடுப்பில் ஒரு புதிய கட்சியுடன் மக்கள் அவ்வளவு இலகுவிடன் இணைந்து செயற்பட விரும்பமாட்டார்கள். இத் தேர்தலில் இக் கட்சி பெற்றுள்ள வெற்றியை பார்த்து, எதிர்காலத்தில் பலமிக்கவர்கள் சிறிதேனும் அச்சமின்றி போட்டியிடும் நிலைமை உருவாகும்.
இதுவரை மு.கா தவிர்ந்த எந்த ஒரு முஸ்லிம் கட்சியும், இப்படியான நாடு தழுவிய ஒரு வரவேற்பை, எச் சந்தர்ப்பத்திலும் பெற்றிருக்கவில்லை. இப்படியான ஒரு பரந்துபட்ட ஆதரவுடைய முஸ்லிம் கட்சி இலங்கை நாட்டில் இல்லாமையே, இதுவரை மு.காவின் மிகப் பெரும் பலமாக அமைந்திருந்தது. அவைகளை பயன்படுத்தியே தேசிய கட்சிகளிடம் பேரம் பேசல்களிலும் ஈடுபட்டிருந்தது. அது இத் தேர்தலோடு சுக்கு நூறாகியுள்ளது. இனி தேசிய கட்சிகளிடம் சென்று, நான் தன் இலங்கை முஸ்லிம்களின் ஏக கட்சி என கூற முடியாது. எதிர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சிகளின் பெரு வரவேற்பை பெறும். தேசிய கட்சிகளின் பங்களிப்பும், சிறுய கட்சிகளின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும். எவ் வகையில் நோக்கினாலும், எதிர்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த தெரிவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழும் என்பதையே, தேசிய ரீதியில் அது பெற்றுள்ள ஆசன எண்ணிக்கை கூறி நிற்கின்றது.
0 Comments