
அறவிடப்படும் இந்த வரி நாட்டின் அபிவிருத்திக்கு மட்டும் பயன்படுமாக இருந்தால் அந்த வரியை மனமுவந்து அளிப்பதில் மகிழ்ச்சி ஆனால்..,
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கை பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் மத்தியகிழக்கு நாடுகளிலேயே பணி புரிகின்றார்கள் அதிலும் குறைந்த மாதாந்த ஊதியங்களில் பணிபுரியும் ஆண், பெண், தொழிலாளர்களே அதிகம்.
வீட்டுப்பணிப்பெண்களாக, வீடுகளிலும் நிறுவனங்களிலும் சாரதிகளாக, துப்புரவு பணியாளர்களாக, கைக்குழந்தைகளை பராமரிப்பவர்களாக, தோட்டபராமரிப்பாளர்களாக, கட்டிட நிர்மாண தொழிலாளர்களாக, கால் நடை வளர்ப்பாலர்களாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வேலை செய்கின்றவர்களாக, பல்பொருள் அங்காடிகளில் கூடை சுமப்பவர்களாக, தள்ளுவண்டி தள்ளுபவர்களாக என பல்வேறு பட்ட கதாபாத்திரங்களை ஏற்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இன்னும் அதிகம்.
இவ்வாறு பணிபுரிகின்றவர்கள் ஒவ்வொரு நாளும் தமது எஜமானர்களால் ஏமாற்றப்படுக்கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை, இவர்களுக்கு மாதாந்த சம்பளம் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை, வேலை நேரம் ஒழுங்காக வரையறுக்கப்பட்டு கொடுக்கப்படுவதில்லை, ஒப்பந்த வேலை நேரத்திற்கு அதிகமான நேரம் வேலையில் ஈடுபடுத்துவது, தங்குமிட வசதிகள் ஒழுங்கான முறையில் வழங்கப்படுவதில்லை, விடுமுறைகள் முறையாக வழங்கப்படுவதில்லை, மருத்துவ விடுமுறைகளில் வேலை செய்ய கோருவது, அல்லது மருத்துவ விடுமுறையில் இருக்கும்போது அதற்கான ஊதியம் மறுக்கப்படுவது, போன்ற பல பிரச்சினைகளில் ஒவ்வொருவரும் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சில வீடுகளில் வீட்டுப்பணிப்பெண்கள் வீட்டுக்கைதிகளாக வைத்துக்கொண்டு நடத்தப்படும் அவலமும் நடந்தேறுகின்றது, மொத்தத்தில் மத்திய கிழக்கு வாழ்க்கை என்பது பஞ்சு மெத்தையில் படுத்து புரளும் ஒரு வாழ்க்கையல்ல அது முற்களின் மேல் தூங்குவதை போன்றது, கண்ணீருடனும், வலிகளுடனும், இழப்புகளுடன், துயரங்களுடனும் வாழ்ந்து ஒவ்வொரு ரூபாயாக சம்பாதிக்கும் அவர்களிடமிருந்து அறவிடப்படும் அந்த வரி மிகவும் பிரயோசனமுள்ளதாக மட்டுமே இருக்கவேண்டும் அப்போதுதான் அவர்களின் இழப்புகளுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.
வரி அறவிடுகிறோம் என்கின்ற பெயரில் அவர்களின் உழைப்புகளை திருடி ஒவ்வொரு அரசியல்வாதியும் தமது சட்டைப்பைகளை நிரப்பிக்கொண்டு தாம் மட்டும் சுகபோகமாக வாழ நினைத்தால் அந்த வரி அறவீடு அர்த்தமற்ற ஒன்றாகி விடும்.
அரசாங்கமே ஊர்ஜிதப்படுத்து தொழிலாளர்களின் வரி எவ்வாறு செலவு செய்யப்படுகின்றது என.
-Razana Manaf-
0 Comments