ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து, கடந்த 6-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பு பூதாகரமாகி வருகிறது. அமெரிக்காவின் முடிவை உலக நாடுகள் பலவும் ஏற்கவில்லை.
இந்த நிலையில் அமெரிக்கா தனது முடிவை திரும்பப்பெறக்கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில், எகிப்து நாடு கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 14 நாடுகள் ஓட்டு போட்டன. ஆனால் அமெரிக்கா தனது ‘வீட்டோ’ உரிமையை பயன்படுத்தி அதை நிராகரித்து விட்டது.
இந்த நிலையில் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபை இன்று (வியாழக்கிழமை) நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் அவசரமாக கூடுகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற தவறிய ஒன்றை விவாதிப்பதற்கு, ஐ.நா. பொதுச்சபையின் அவசரக்கூட்டம் நடத்துவதற்கு 1950-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஐ.நா. சபை தீர்மானம் வழிவகுத்துள்ளது. அதன்படிதான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் ஜெருசலேம் விவகாரத்தில் தனது முடிவை அமெரிக்கா திரும்பப்பெறுமாறு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இது தொடர்பாக ஓட்டெடுப்பு நடைபெறும் என ஐ.நா. சபைக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகளின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
இந்த ஓட்டெடுப்பு வெற்றி பெற்றாலும், அது அமெரிக்காவின் முடிவைக் கட்டுப்படுத்தாது. ஆனாலும் அமெரிக்கா தனது முடிவை திரும்பப்பெறுமாறு உலகளாவிய அழுத்தம் அதிகரிக்கும்.
0 Comments