அகதி குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் கட்டிய 16 வயது சிறுவனுக்கு சர்வதேச கல்வி விருது வழங்கப்பட்டது.
ஆன்றோர்களும் சான்றோர்களும் வாழ்ந்த சிரியாவில் பஷார் அல் அசத் என்பவரின் காட்டாட்சி நடந்து வருகிறது. இங்கு கடந்த சுமார் 7 வருடங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 11 மில்லியன் மக்களுக்கு மேல் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த அகதிகளில் சுமார் 2.5 மில்லியன் பேர் குழந்தைகள், இவர்களில் சுமார் 5 லட்சம் குழந்தைகள் லெபனான் நாட்டில் அகதிகளாக முகாம்களில் வாடிவதங்கி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோருக்கு சத்தான உணவுகளோ, மருத்துவ வசதிகளோ கிடைப்பதில்லை. மேலும் 6 முதல் 14 வயதுடைய குழந்தைகள் பலருக்கு பள்ளிக்கல்வி கூட கிடைக்கவில்லை.
இந்த அகதி குழந்தைகளுக்கு போதுமான கல்வி கிடைக்காவிட்டால் அவர்கள் வாழ்ந்தும் காணாமல் போன தலைமுறையாக மாறிவிடுவர் என பயந்த அவர்களில் ஒரு குழந்தை அகதியான 12 வயது முஹமது அல் ஜவுந்தே (Mohamad Al Jounde) என்ற சிறுவன் தான் வாழ்ந்து வரும் பிகா பள்ளத்தாக்கில் (Bekaa Valley refugee camp) அமைந்துள்ள அகதிகள் முகாமில் தனது உறவினர் மற்றும் பிற ஆர்வலர்களுடன் இணைந்து பள்ளிக்கூடம் ஒன்றை எழுப்பி முன்னூறுக்கும் மேற்பட்ட அகதி குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணிதம், புகைப்படக் கலை உட்பட பல பாடங்களை நடத்திட ஏற்பாடு செய்துள்ளான், 5 வயது மாணக்கர்களுக்கு அவனும் ஓர் ஆசிரியர்.
கடந்த 3 வருடங்களுக்கு மேலாக பள்ளிக்கூடத்தை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன் இன்று 16 வயது பதின்மப்பருவ இளைஞனாகவும் உருவெடுத்துள்ள முஹமது அல் ஜவுந்தே நான் அவர்களின் ஒரு நண்பனாக, ஒரு குடும்ப உறுப்பினரைப் போல் எதிர்காலத்திற்கான பாதுகாப்பான வழியை காட்ட விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்தப் பள்ளிக்கூடத்தில் பல தன்னார்வ ஆசிரியர்கள் பாடம் நடத்துவதுடன் வயதான பெரியோர்களுக்கும் கூட கலாச்சார பாடங்கள் இன்னொரு புறம் நடந்து வருகிறது. நாளைய சிரியாவின் எதிர்காலம் இக்குழந்தைகளை சார்ந்துள்ள நிலையில் இக்குழந்தைகளின் எதிர்காலம் கல்வியை சார்ந்துள்ளது என லண்டனில் நடைபெற்ற விழாவில் இந்த ஆண்டிற்கான குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி விருதை முஹமது அல் ஜவுந்தேக்கு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments