ஊர் பிரதேசங்களில் சந்திக்கு சந்தி தேநீர்க் கடைகளைத் திறப்பது
போன்று தேர்தல் காலங்களில் மட்டும் இந்தப் பகுதிகளுக்கு வந்து முச்சந்திகளிலே கட்சிக்
கிளைகளைத் திறந்து, அரசியல் வியாபாரம் செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையாகவும்,
அவதானமாகாவும் இருக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
வவுனியா ஆனைவிழுந்தான்
முஸ்லிம் வித்தியாலயத்தில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை
கௌரவிக்கும் விழாவில் (13/ 11/ 2017) பிரதம
விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.
அவர் மேலும்
கூறியதாவது,
அரசியல் பரம்பரையிலும்,
செல்வக் குடும்பத்திலும் வழிவந்தவர்களே தேர்தல்களில் ஈடுபட முடியும் என்ற ஓர்
எழுதாத சட்டம் முன்னொரு காலத்தில் நடைமுறையில் இருந்தது. இவர்களையே மக்கள் தமது
பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வதும் வாடிக்கையாக இருந்தது. எனினும், அந்த கோட்பாடு
தற்போது உடைத்தெறியப்பட்டு, மக்கள் பணி செய்யக் கூடியவர்களையும், மனிதாபிமானம்
கொண்டோரையும் தேர்தலில் வெற்றிபெறச் செய்யும் நிலைஅண்மைக் காலங்களில் உருவாகி
விட்டது.
இந்தப்பின்னணியிலேதான்
நானும் அரசியலில் களம் இறங்கினேன். அகதி முகாமில் மக்கள் படுகின்ற அல்லோல கல்லோலங்களையும்,
அவஸ்தைகளையும் நேரில் கண்டும், நேரடியாக அனுபவித்ததனாலும் அரசியலுக்குள்
உந்தப்பட்டு தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன். வவுனியாவிலுள்ள பல
கிராமங்களுக்கு நாங்கள் சென்ற போது, எம்மை வேடிக்கையுடன் பார்த்த காலத்தை நினைத்துப்
பார்க்கின்றேன். “தம்பி நீங்களுமா தேர்தல் கேட்கப் போகின்றீர்கள்?”, “யாருமே இந்த
ஊருக்கு வரக் கூடாது” “எங்கள்வோட்டு உங்களுக்குக் கிடைக்காது”என்றெல்லாம்முகத்துக்கு
முன்னே சில பெரியவர்கள் எங்களுக்குக் கதை சொன்னதையும் இப்போது நினைக்கின்றோம்.
அடிமட்டத்தில்
இருந்து ஒருவர் அரசியலுக்குள் வரும்போது, அவருக்கெதிரான செயற்பாடுகளும்,அவ்வாறானவரை
ஏளனமாகப் பார்க்கும் நிலையும் இருப்பது நமது சமூகத்தின்வழமையாகிவிட்டது. அந்த வகையில்
கரடு முரடான பாதைகளை கடந்து வந்த நான், இன்னும் பல தடைகளையும்,
முட்டுக்கட்டைகளையும் தாண்டியே தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றேன். நேர்மையாகவும்,
இதய சுத்தியாகவும் இந்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்ற போதும், சிலர்எம்மைத் தூற்றுவதையும்,
விமர்சிப்பதையும்தமதுவாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
மஹிந்தவின்
இரும்புக் கோட்டையில் இருந்து வெளியேறி மைத்திரிக்கு ஆதரவளிக்க நாம் வந்தபோது,
எமதுஅரசியல் வாழ்வு இத்தோடுஅழிந்து போய்விடும் என சிலர் கனவு கண்டனர். எனினும்,
இறைவனின் உதவியால் நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க
முடிந்திருக்கின்றது. தற்போதைய பயணத்திலும் சமூகத்துக்கு ஏற்பட்டு வரும்
பாதிப்புக்களையும், துன்பங்களையும் தட்டிக்கேட்டு தீர்வைப் பெறுவதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். நீங்கள்
என்னை வன்னியிலிருந்து பிரதிநிதியாகப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய
போதும்,சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும்,
ஏனைய இடங்களிலும் குரல் கொடுப்பதற்கும், செயற்படுவதற்குமானசக்தியை இறைவன்
தந்துள்ளான்.
இறைவனின்
உதவியினாலும், நீங்கள் வழங்கிய வாக்குகளாலும், உங்களின் பிரார்த்தனைகளினாலும் பாராளுமன்ற
உறுப்பினராகி பின்னர் அமைச்சராகி தொடர்ந்தும் உங்களுக்கும், இந்த மண்ணுக்கும் பணியாற்ற
முடிந்துள்ளது. காடுகளாகவும், சகதிகளாகவும், மக்கள் வாழக்கூடிய சூழல்இல்லாத
நிலையிலும், நாம் மேற்கொண்ட முயற்சிகளினால் இந்தப் பிரதேசத்தில் மீண்டும் வாழக்கூடிய
நிலையைஇறைவன் ஏற்படுத்தித்தந்துள்ளான்.
வடமாகாண சபையின்
ஆட்சி வருவதற்கு முன்னர் இந்தப் பிரதேசத்தில் பல்வேறு பாரிய திட்டங்களையும்,
வாழ்வாதார உதவிகளையும் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தினோம். நாங்கள் விடாப்பிடியாக
மேற்கொண்ட முயற்சிகளினாலேய மீள்குடியேற்றத்துக்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு,
அதற்கான ஒருதொகைப் பணமும்தற்போதுஒதுக்கப்பட்டிருக்கின்றதுஎன்றும் அமைச்சர்
கூறினார்.
ஆனைவிழுந்தான்முஸ்லிம்
வித்தியாலயத்தின் 47 வருடகால வரலாற்றில் முதன் முதலாக, தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவி பாத்திமா
சல்ஹா அஸ்வர் இந்த விழாவின் போது கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலை அதிபர் கே.எம்.எம்.அனீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,
மாகாணசபை
உறுப்பினர்களான வி.ஜயதிலக்க, அலிகான்
ஷரீப், பிரதிக் கல்விப் பணிப்பாளர்
திருமதி.சகாயநாதன், கோட்டக்கல்விப்
பணிப்பாளர் யேசுதாஸ், அமைச்சரின்
இணைப்பாளர்களான முத்து முஹம்மது, அப்துல்
பாரி மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு





0 Comments