வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவேண்டுமென்ற அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் சுமார் ஒரு மணிநேர இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவிவிலக வேண்டுமென்ற கோரிக்கைகள், அதிகரித்து வருகின்ற நிலையில் ஜனா திபதியும் பிரதமரும் அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை முக்கியவிட யமாக கருதப்படுகிறது. இதன் போது அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள நிலைமைகள் அரசாங்கம் தொடர்பான மக்களின் விமர்சனங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேடமாக ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் ரவி கருணாநாயக்க தொடர்பாக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments