பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ. வரீஸ் பதான், ‘‘என் தலையில் துப்பாக்கியை வைத்தாலும் பாட மாட்டேன்’’ என்றார்.
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை மராட்டியத்திலும் கட்டாயப்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவரும், சட்டசபை தலைமை கொறடாவுமான ராஜ் புரோகித் தெரிவித்தார்.
இதுபற்றி சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘இது தொடர்பாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசுவேன். எந்தவொரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முன்பு ‘வந்தே மாதரம்’ பாடலையும், முடிக்கும்போது ‘ஜன கண மன’ பாடலையும் கட்டாயமாக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்துவேன்’’ என்றார்.
எனினும், இதற்கு மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ. வரீஸ் பதான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் பேசும்போது, ‘‘நான் ‘வந்தே மாதரம்’ பாடலை பாட மாட்டேன். என்னுடைய மதமும், சட்டமும் இவற்றை பாட என்னை அனுமதிக்காது. என் தலையில் துப்பாக்கியை வைத்தாலும், நான் அதை பாட மாட்டேன். சட்டசபையில் இதன் மீதான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன்’’ என்றார்.
இதேபோல், சமாஜ்வாடி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி கூறுகையில், ‘‘நான் இஸ்லாமியத்தை உண்மையாக பின்பற்றுபவன். ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவது என்னுடைய மதத்துக்கும், அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் விரோதமானது. ஒரு உண்மையான முஸ்லிம், இந்த பாடலை ஒருபோதும் பாட மாட்டார். என்னை நாட்டை விட்டு வெளியே தூக்கிப்போட்டாலும், இந்த பாடலை என்னால் பாட முடியாது’’ என்றார்.
இந்த விவகாரத்தில் மஜ்லிஸ் கட்சிக்கும், சமாஜ்வாடிக்கும் சிவசேனா தலைவர் திவாகர் ராவ்தே கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘வந்தே மாதரம் பாடலை பாட மறுப்பவர்கள், துரோகிகள். இது தேசப்பற்று பாடல் என்பதையும், சுதந்திர போராட்டத்தின்போது, சுதந்திர போராட்ட வீரர்களால் பாடப்பட்டது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.
வந்தே மாதரம் பாடலை மஜ்லிஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாட மறுப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
0 Comments