அமெரிக்காவில் ஏடிஎம் மெஷின் அறைக்குள் மாட்டிக் கொண்ட காண்ட்ராக்டர், ரசீது வரும் துளை வழியாக உதவி என்று எழுதி போட்டு தப்பித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கார்பஸ் கிறிஸ்டி என்ற இடத்தில் மெஸ்குயிட் தெரு உள்ளது. இந்த தெருவில் பாங்க் ஆப் அமெரிக்காவிற்கு சொந்தமான ஏடிம் மெஷின் உள்ளது.
இந்த ஏடிஎம் மெஷின் அறைக்குள் கான்டிராக்டர் ஒருவர் பூட்டு ஒன்றை மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த அறை பூட்டிக்கொண்டது. அவர் உள்பக்கம் மாட்டிக்கொண்டார். தனது போனை வாகனத்தில் விட்டுச் சென்றிருந்ததால், செல்போனில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வெளியே வரவும் முடியவில்லை.
இதனால் என்ன செய்வது தெரியாமல் திணறிய அவருக்கு இறுதியாக ஒரு யோசனை வந்தது. அங்கிருந்து பேப்பரை துண்டு துண்டாக கிழித்து அதில் ‘‘ப்ளீஸ் ஹெல்ப், நான் உள்ளே மாட்டிக் கொண்டேன். என்னிடம் போன் இல்லை. தயது செய்து என்னுடைய முதலாளிக்கு போன் செய்யுங்கள்’’ என்று எழுதி, மெஷினில் ரசீது வரும் வழியாக வெளியே வருமாறு ஏற்பாடு செய்தார்.
பணம் எடுக்க வந்தவர்கள் பலர் இந்த ரசீது வருவதை கண்டு, நகைச்சுவைக்காக எழுதி வைத்திருப்பார்கள் என்று கண்டு கொள்ளாமல் சென்றனர். ஆனால், ஒரு வாடிக்கையாளர் மட்டும் அதை அக்கறையாக எடுத்துக் கொண்டு போலீசாருக்கு போன் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஏடிஎம் மெஷின் அருகே வந்து குரல் கொடுத்தனர். அப்போது கான்டிராக்டர் உள்ளே இருந்து பதில் குரல் கொடுத்தார். பின்னர் இரண்டு மணி நேரம் மாட்டிக் கொண்டிருந்த கான்டிராக்டரை கதவை உடைத்து போலீசார் மீட்டனர்.


0 Comments