கட்டாருக்கான இலங்கை தூதரகத்தின் அனுசரணையின் கீழ் அந்நாட்டில் பராமரிக்கப்படும் பாடசாலை தொடர்பில் விசேட அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
கட்டார் இராச்சியத்தில் இலாபம் ஈட்டாத பாடசாலையாக பராமரித்துச் செல்ல குறித்த பாடசாலைக்கு இலங்கை தூதரகம் அனுசரணை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்காமல் வெளியில் நிதி சேகரித்தல், பாடசாலை நிதியை முறைகேடாக பயன்படுத்தல், பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமை, ஆசிரியர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு உரிய முறையில் வேதனம் செலுத்தாமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பெற்றோரினால் பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டாருக்கான இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, இலங்கை வெளிவிவகார அமைச்சிக்கு அனுப்பவுள்ள அறிக்கைக்கு அமைய, விசாரணைகள் நிறைவடையும் வரை பாடசாலை கணக்கில் இருந்து பணம் எடுத்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கட்டாருக்கான இலங்கை தூதுவரின் கையொப்பத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விசாரணையின் பின்னர் தூதரகம் எதிர்ப்பார்க்கும் விடயங்கள் தொடர்பிலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கட்டாருக்கான உத்தியோகபூர்ப விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது குறித்த பாடசாலைக்கு அவர்களை அழைத்து செல்ல எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments