பெண்களின் கர்ப்பப்பையிலும் சினைப்பையிலும் கட்டிகள் ஏற்படுவதை அறிவீர்கள். பெண்கள் பருவமடைந்த பின் மாதவிலக்கு முழுமையாக நின்றுபோகும் மெனப்போஸ் காலம் வரை கணிசமான பெண்களில் இவ்வாறான கட்டிகள் ஏற்படுகின்றது. கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகளை FIBROIDS பைப்ரோயிட் கட்டிகள் என்றும் சினைப்பையில் ஏற்படும் கட்டிகளை OVABIAN TUMOURS என்றும் அழைப்பர். இவ்வாறான கட்டிகள் ஏற்படாமல் தடுக்க முடியுமா-?
இந்த வினாவுக்கு விடையளிக்குமுன்னர் பைப்ரோயிட் கட்டிகள் தோன்றுவதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி பார்ப்போமானால் இதற்கான காரணம் எதையும் அறுதியிட்டு கூறமுடியாதுள்ளது. பெரும்பாலும் குறிப்பிட்டவர்களின் பரம்பரை தொடர்பே காரணமாக இருக்கின்றது. எனினும் இவற்றின் தோற்றத்திற்கு பால் ஓமோன்கள் எந்தளவு பங்காற்றுகின்றன என்பதைப்பற்றி நிறுவ முடியவில்லை. எனினும் பைப்ரோயிட் கட்டிகள் மணம் முடிக்க தாமதமாகின்றவர்களிலும் மணம் முடித்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களிலும் ஏற்படுவது அவதானிக்கப்படுகின்றது. இதிலிருந்து இவ்வாறான கட்டிகள் தோன்றுவதற்கும் ஓமோன்களின் தூண்டுதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தோன்றுகின்றது.
பெண்களின் இனவிருத்தி தொகுதியில் பைப்ரோயிட் கட்டிகளோ சூலகக்கட்டிகளோ தோன்றுவதைத் தடுப்பதற்கு இன்றுவரை மருத்துவ உலகம் எதையும் கண்டறியவில்லை. இதனால் இற்றைவரை இக்கட்டிகள் தோன்றுவதை தடுக்க முடியவில்லை. எனவே ஒழுங்கான பரிசோதனைகள் மூலம் கட்டிகள் தோற்றம் பெறுவதைக் கண்டறிந்து அவசியமெனின் உரிய சிகிச்சை பெறவேண்டும்.
இந்த கட்டிகளை மருந்துகளால் குணமாக்க முடியாதுள்ளது. அவசியம் ஏற்படின் சத்திர சிகிச்சை மூலமே அகற்ற வேண்டும். கட்டிகளை சுருங்கவைக்கும் மருந்துகள் முன்னர் பாவிக்கப்பட்ட போதிலும் சுருங்கிய கட்டிகள் மீண்டும் வேகமாக வளர்வது தெரிய வந்தமையால் மருந்துமூலமான சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை.
சத்திர சிகிச்சையே தீர்வு, எனினும் அவசரப்பட்டு மேற்கொள்ளப்படுவதில்லை. பெரும்பாலான பைப்ரோயிட் கட்டிகள் மெனப்போஸுடன் சுருங்கிவிடும்.மிகப்பெரிய கட்டிகளை அவசியமெனின் அகற்றலாம். சினைப்பை கட்டிகளைப் பொறுத்தவரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. மோசமாக பரவினால் கருப்பை சினைப்பையுடன் சேர்த்து அகற்றப்படுகின்றது.


0 Comments