ஜெர்மனியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இரகசியமாக சந்தித்துப் பேசியதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் G20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற ட்ரம்பும் புதினும் கடந்த 7 ஆம் திகதி சுமார் 2 மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசியதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.
இந்நிலையில், அதே நாளில் இரவு விருந்தின்போது இருவரும் 2 ஆவது முறையாக, சுமார் 1 மணி நேரம் சந்தித்துப் பேசியதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
விருந்தின்போது தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்ற ட்ரம்ப், புதினின் இருக்கைக்கு அருகில் உட்கார்ந்து அவருடன் பேசியுள்ளார்.
அதேநேரம், புதினின் மொழிபெயர்ப்பாளர் மட்டும் அங்கு இருந்துள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ட்ரம்பும் புதினும் 2 ஆவது முறையாக சந்தித்துப் பேசவில்லை. இரவு விருந்து முடியும் போது இருவரும் சுருக்கமாகப் பேசினர். இந்த சந்திப்பை மறைத்துவிட்டதாகக் கூறுவது தவறு” என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஹிலாரியை தோற்கடிப்பதற்காக ட்ரம்பின் பிரசாரக் குழுவும் ரஷ்யாவும் இணைந்து செயற்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments