பாகிஸ்தானில் முதன்முறையாக மதத்தை பழிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி சிறுபான்மை (ஷியா) பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல் துறையின் தீவிரவாத தடுப்புத் துறையினர் கூறும்போது, “லாகூரிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள ஒகாரா நகரைச் சேர்ந்தவர் தைமூர் ரசா (30). ஷியா பிரிவைச் சேர்ந்த இவர் இஸ்லாம் மதத்தை பழிக்கும் வகையில் முகநூலில் கருத்து தெரிவித்ததாக இவருடன் பணிபுரிந்தவர்கள் கடந்த ஆண்டு புகார் செய்தனர். இதன் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டார்” என்றனர்.
இதையடுத்து, தைமூர் ரசா மீது பஹவல்பூர் மாவட்ட தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை நடந்து முடிந்த நிலையில் தைமூருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஷபிர் அகமது கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் இணையதள-குற்றம் தொடர்பான வழக்குகளில் இதுவரை வழங்கப்பட்ட தண்டனைகளில் இது மிகவும் கடுமையானது ஆகும். மேலும் மத நம்பிக்கையை பழித்த குற்றத்துக்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
-Razana Manaf-
0 Comments