சமீப காலமாக சர்ச்சைக்குள்ளாகி உள்ள முத்தலாக் மற்றும் நிக்காஹ் ஹலாலா முறைகள் ரத்தாக வேண்டி, வாரணாசி ஹனுமன் கோயிலில் முஸ்லிம் பெண்கள் பிரார்த்தனை செய்தனர்.
உத்தரபிரதேசத்தின் தெய்வீக நகரமான வாரணாசி, காசி அல்லது பனாரஸ் என்றும் அழைக் கப்படுகிறது. இங்குள்ள தாராநகர் பகுதியில் சங்கட்மோர்ச்சன் கோயில் உள்ளது. ஹனுமனின் புனிதத்தலமான இங்கு முன் வைக்கப்படும் வேண்டுதல்கள் தவறாமல் நிறைவேறும் என்பது பொதுமக்களின் (இந்துக்கள்) நம்பிக்கை.
இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் பர்தா மற்றும் முக்காடு அணிந்தபடி நேற்று முன்தினம் சங்கட்மோர்ச்சன் கோயிலில் உள்ள ஹனுமன் சிலை முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கையில் துளசிதாசர் எழுதிய ஹனுமன் துதிப்பாடல் களும் உருது மற்றும் இந்தியில் எழுதப்பட்ட நூல்களும் இருந்தன. இவற்றை பயபக்தியுடன் பாடிய அவர்களின் வேண்டுதலும் வித்தியாசமாக இருந்தது.
இதுகுறித்து முஸ்லிம் பெண் கள் அமைப்பின் நிறுவனத்தலை வர் நாஸ்னீன் அன்சாரி ‘தி இந்து’ விடம் கூறும்போது, “வெறும் மனித உயிர்களாக பூமியில் பிறந்த நாம் அனைவரும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் பார்சி என மதங்களால் பிளவுபட்டுள்ளோம். நம் அனைவருக்கும் பல உருவில் இருக்கும் கடவுள் ஒருவரே.
நிக்காஹ் ஹலாலா மற்றும் முத்தலாக் முறைகளால் முஸ்லிம் பெண்கள் பல நூறு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை ரத்து செய்யக் கோரும் வழக்கு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி உள்ளது. இதில் முஸ்லிம் பெண்களுக்கு சாதகமான தீர்ப்பு வர வேண்டி 100 முறை ஹனுமன் துதியைப் பாடி பிரார்த்தனை செய்தோம்” என்றார்.
ஹனுமனிடம் பிரார்த்தனை செய்த பெண்களில் சிலர் அல்லது அவர்களது உறவினர்கள், நிக்காஹ் ஹலாலா மற்றும் முத்தலாக் முறையால் பாதிக்கப் பட்டவர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரையும் சங்கட் மோர்ச்சன் கோயிலின் அர்ச்சகர்கள் வரவேற்று பிரார்த்தனைக்கான வசதிகளைச் செய்து கொடுத்தனர். எனினும், இந்த பிரார்த்தனைக்கு முஸ்லிம் சமூகத்தினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, ஆண்கள் ‘தலாக்’ என மூன்று முறை கூறி மனைவியை விவாகரத்து செய்து விடுகிறார்கள். இவ்வாறு விவகாரத்து செய்த பின் மீண்டும் இணைய விரும்பும் தம்பதிகளுக்கு நிக்காஹ் ஹலாலா என்ற முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்படி, விவாகரத்தான முஸ்லிம் பெண் வேறு ஒருவரை மணம் புரிந்து ஒருநாள் இல்லற வாழ்க்கைக்குப் பிறகு அவரை விவாகரத்துப் செய்துவிட்டு, தனது முன்னாள் கணவரை மீண்டும் மணம் புரிகிறார்.
இந்த இருமுறைகளையும் தடை செய்யக் கோரி, சில முஸ்லிம் பெண்கள் மற்றும் மத அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. இந்த வழக்கில் மத்திய அரசு மனுதாரர்களுக்கு சாதகமாக பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய் துள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற கோடை விடுமுறை கால அமர்வு விசாரித்து வருகிறது.
0 Comments