முசலி பிரதேசத்தில் காணிகளை
மீட்டெடுப்பதற்காக கடந்த பல வாரங்களாக போராட்டம் ஒன்றுக்காக மக்கள் என்ற
போர்வையில் ஒரு குழுவினர் தூண்டப்பட்டு போராட்டம் நடாத்தினார்கள்.
இதற்கு பின்னால் ஒரு சுயநல
அரசியல் இருக்கின்றது என்று பல உண்மைகளை நாங்கள் கட்டுரை வாயிலாக
விபரித்திருந்தும் அதனை அந்த குழுவினர் கண்டுகொள்ளாது போராட்டத்தினை
தொடர்ந்தார்கள்.
இந்த போராட்டம் ஒரு
காலவரையறை அற்றது என்றும், தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரைக்கும் இப்போராட்டம்
தொடரும் என்றெல்லாம் வீர வசனங்கள் பேசப்பட்டது. ஆனால் எந்தவித தீர்வுகளோ, அல்லது
தீர்வுகளுக்கான உத்தரவாதங்களோ வழங்காத நிலையில் இவர்களாகவே முன்வந்து திடீரென தங்களது
போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
அதாவது யாருக்கு எதிராக
போராடினார்களோ அவர்களிடம் சரணடைந்துள்ளார்கள் என்பதுதான் அதன் பொருளாகும். அப்படியென்றால்
இவ்வளவு காலமும் போராடியது எதற்காக? ஒரு அரசியல்வாதிக்காகவா அல்லது மக்களின்
உரிமைகளை மீட்டெடுப்பதுக்காகவா?
அமைச்சர் ரிசாட்
தலைமையில் ஒரு குழு ஜனாதிபதியை சந்தித்ததாகவும், அதனால் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும்
கூறி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அமைச்சர் ரிசாட் அறிவித்திருந்தார்.
ஆனால் ஜனாதிபதி செயலகமோ
அல்லது ஜனாதிபதி சார்ந்த எந்தவொரு ஊடகங்களுமோ முசலி மக்களுக்கு எந்தவொரு
வாக்குறுதிகளும் வழங்கியதாக அறிவிக்கவில்லை. மாறாக அமைச்சர் ரிசாத் அவர்களும், அன்மைக்காலமாக
அமைச்சரின் பேச்சாளராக செயல்பட்டுவருகின்ற ஆசாத்சாலி அவர்களுமே இவ்வாறு அறிக்கை
விட்டுள்ளார்கள்.
சர்வதேச வெசாக் தினத்தை
ஆரம்பித்துவைக்கும் முகமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகின்ற நிலையில்,
நாட்டில் மக்கள் போராட்டம் ஒன்று நடைபெற்றால் அது ராஜதந்திர சிக்கலை ஏற்படுத்துவதுடன்,
அந்த போராட்டம் இந்திய பிரதமருக்கு எதிரானது என்று ஊடகங்கள் செய்திகளை
வெளியிட்டுவிடும் என்ற காரணத்தினாலேயே அப்போராட்டத்தினை கைவிடுமாறு ஆட்சியாளர்கள்
கோரியதும் உடனடியாக அதனை கைவிட்டுள்ளார்கள்.
ஒரு மக்கள் போராட்டம்
வெற்றி பெறுவது என்றால் அந்த போராட்டம் சர்வதேச கவனத்தினை பெறவேண்டும். அப்படியொரு
அரிதான சந்தர்ப்பம் முசலி மக்களுக்கு ஏற்பட்டது.
அதாவது இந்திய பிரதமரின்
வருகையின்போது முசலியின் போராட்ட குழுவினர் தனது போராட்டத்தினை இன்னும்
வீரியத்துடன் போராடி சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்தியிருந்தால், இது
சர்வதேசத்தின் கவனத்தினை பெற்றிருக்கும். அப்படியான பொன்னான வாய்ப்பை ஒரு
அரசியல்வாதியின் சுயநலத்துக்காக முசலி மக்கள் இழந்துள்ளார்கள்.
தங்களது பிரச்சினைகள்
சர்வதேசத்தின் கவனத்தினை பெறவேண்டும் என்பதற்காக வெளிநாட்டு தலைவர்கள் இலங்கை
வருகின்ற நேரங்களில் இங்குள்ள தமிழர்களும், அதேபோல் இலங்கை தலைவர்கள்
ஐரோப்பாவுக்கு செல்கின்ற நேரங்களில் அங்குள்ள புலம்பெயர் தமிழர்களும் தங்களது
போராட்டத்தினை மேற்கொண்டு சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்தார்கள்.
இங்கே தமிழர்களினதும்,
முஸ்லிம்களினதும் போராட்டங்கள் வெவ்வேறுபட்டதாகும். அதாவது தமது உரிமைகளை
எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இதய சுத்தியுடன் தமிழ் மக்கள் போராடுகின்றார்கள்.
ஆனால் தங்களது அரசியல்
எஜமானர்களை வாழவைக்க வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் குழுவினர்கள் முஸலியில்
போராடினார்கள். இந்திய பிரதமர் நாடு திரும்பியுள்ளதனால் அடுத்த தேர்தலை
இலக்காகக்கொண்டு மீண்டும் இந்த போராட்டம் வேறுகோணத்தில் தொடரலாம் என்று
எதிர்பார்க்கப்படுகின்றது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 Comments