Subscribe Us

header ads

மத்திய கிழக்கின் சுற்றுலா விசா எனப்படும் மூன்றுமாத கால எல்லையை கொண்ட குறுகிய விசா


இப்போதெல்லாம் மத்தியகிழக்கிற்கு வேலைக்கு வருவது என்று இளைஞர்கள் முடிவெடுத்தாலே அவர்களின் தெரிவாக இருப்பது சுற்றுலா விசா எனப்படும் மூன்றுமாத கால எல்லையை கொண்ட குறுகிய விசாக்களே. இந்த விசாக்களை தெரிவு செய்வதற்கு அவர்களுக்கு இரண்டு காரணங்கள் முன் நிற்கின்றது.

ஒன்று, இலங்கையில் உள்ள முகவர் நிலையங்களுக்கு சென்று பலமாத காத்திருப்புகளை மேற்கொண்டு அல்லது அவர்களுக்கு பின்னால் அலைந்து தொழிலாளர் விசாவை பெற விரும்பாமை.

இரண்டாவது, மத்திய கிழக்கிற்கு வந்து இறங்கி அடுத்த வாரமே தொழில் கிடைக்க கூடிய அளவிற்கு மத்திய கிழக்கு தொழிற்சந்தைகள் தொழிலாளர்களின் வரவுக்காக ஏங்கிகொண்டிருக்கின்றது என்பது போன்ற தப்பான கற்பிதம்.

வெளிநாட்டு தொழிலொன்றை பெறுவதற்காக இலங்கையில் உள்ள முகவர் நிலையங்களை நாம் நாடும்போது அங்கு பல்வேறுபட்ட அலைகழிப்புகளை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் சந்தித்தே ஆகவேண்டும் என்பது எழுதப்படாத நியதி. சில வேளைகளில் முகவர் நிலையங்களினால் ஏமாற்றப்படும் அப்பாவிகளும் நிறையப்பேர் இருக்கிறார்கள், மத்திய கிழக்கில் நல்ல தொழில் வழங்கப்படும் என்று முகவர் நிலையங்களினால் வாக்குறுதி அளிக்கப்பட்டு ஆசைகள் காட்டப்பட்டு அவர்களை அள்ளி வந்து பாலை வன மண்ணில் ஆடு மேய்ப்பதற்கும், ஒட்டகங்கள் மேய்ப்பதற்கும், கட்டிட வேலைகளுக்கும், தெருவில் குப்பை பொறுக்குவதற்கும், வீதியோரத்தில் புற்கள் வெட்டுவதற்கும், எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கும், அலுவலகங்களில் கழிவறைகள் கழுவுவதற்கும் என பல்வேறுபட்ட வேலைகளில் அமர்த்தி விடுகின்றார்கள், நாட்டில் இருக்கும்போது கஷ்டப்பட்டு வேலை செய்து பழக்கப்பட்டவனாக இருந்தால் இதையெல்லாம் சமாளித்து பயணித்துக்கொள்வான்.

ஆனால், உடம்பு நோகாமல் வளர்ந்தவன் என்ன செய்வான் பாவம் அடுத்த இரண்டு மாதங்களில் பெட்டியை கட்ட தயாராகி விடுவான், ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிக்கோளை நமது மனதில் நிறுத்தியே இந்த மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கிறோம், தேவைகள் இல்லாத எவரும் சந்தோசங்களை தொலைத்து இங்கு வந்து பிரம்மச்சாரியாக வாழ்ந்து விட்டு போக விரும்புவதில்லை, ஆக எதிர்பார்த்து வந்த வேலை கிடைக்காமல் நாம் திரும்பி போக நேரிடும்போது நமது குறிக்கோள் உடைந்து விடுகின்றது, நம்மை சார்ந்திருக்கும் பலபேரின் சந்தோசங்களுக்கு அது சாவு மணி அடித்த கதையாகி விடும் அதனால்தான் முகவர் நிலையங்களை நம்பாமல் தாமே நேரடியாக வந்து தமக்கு பிடித்த வேலைகளை தேடி அதில் சேர்ந்து உழைத்து தமது வாழ்க்கையை வளமாக்கி கொள்ள முடிவெடுத்து இந்த விசிட் விசாவை தெரிவு செய்கிறார்கள்.

இவ்வாறான விசிட் விசா தெரிவினால் இவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் என்ன என்பதை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

-ரஷானா மனாப்-

தொடரும்...

Post a Comment

0 Comments