Subscribe Us

மத்திய கிழக்கின் சுற்றுலா விசா எனப்படும் மூன்றுமாத கால எல்லையை கொண்ட குறுகிய விசா (பகுதி-1)


விசிட் விசாவில் ஒருவர் தொழில் தேடி மத்தியகிழக்கு நாடுகளுக்கு வருகின்றார் என்று சொன்னாலே அவருக்கு பின்புலத்தில் ஏதோ ஒரு ஆதரவு இருக்கின்றது என்றே அர்த்தம், குடும்ப உறவினர்கள், அல்லது நண்பர்கள், அல்லது நண்பர்களின் நண்பர்கள், அல்லது தமக்கு நன்கு பழக்கப்பட்ட ஊரவர்கள் போன்றோர்களின் ஆதரவினாலும், அனுசரணையாலும்தான் அதிகமானவர்கள் விமானமேறுகிறார்கள். இலவச செலவில் யாரும் இவர்களை சுற்றுலா விசாவில் இங்கு அழைத்து வந்து அவர்களுக்கு பொருத்தமான வேலைகளை பெற்றுக்கொடுத்து விடுவதில்லை அதற்கு காரணம் விசிட் விசாவிற்கு ஏற்படும் செலவுகள். ஆக விசிட் விசா மூலம் மத்தியகிழக்கிற்கு வந்து தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முனைகின்ற ஒருவரே ஏற்படும் செலவுகள் அனைத்துக்கும் பொறுப்பாக வேண்டும்.


விசிட் விசாவில் பலவகை உண்டு 15 – நாள் விசா, ஒரு மாத விசா, மூன்று மாத விசா, ஆறு மாத விசா, ஒரு வருட விசா, மல்டி என்ரி விசா, என இவை ஒவ்வொன்றுக்குமான கட்டணம் வித்தியாசப்படுகின்றது. பொதுவாக ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு தொழில் தேடி வருகின்றவர்கள் மூன்றுமாத கால எல்லையை கொண்ட விசிட் விசாக்களையே தெரிவு செய்கின்றார்கள் ஏனெனில் அந்த காலப்பகுதிக்குள் தொழில் கிடைத்து விடும் என்கின்ற நம்பிக்கை, இன்னும் சிலர் ஒரு மாத விசிட் விசாவிலும் வருவதுண்டு அதற்கு காரணம் ஒரு மாதம் சென்று முயற்சி செய்து பார்ப்போம் வேலை கிடைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்காவிட்டால் நாட்டை சுற்றிப்பார்த்த திருப்தியுடன் திரும்பி வந்து விடலாம் என்கின்ற எண்ணம். இவ்வாறான எண்ணத்துடன் வருகின்றவர்களுக்கு சிலவேளை இறைவன் கை கொடுப்பதுமுண்டு.

மூன்று மாத விசிட் விசாவில் வருகை தருகின்ற ஒருவர், விசா கட்டணம், இருவழி விமான பயண சீட்டு, தங்குமிடம், உணவு, போக்குவரத்து, இதர செலவுகள் என குறைந்த பட்சம் மூன்று லட்சங்கள் முதல் மூன்றரை லட்சங்கள் வரை செலவு செய்யவேண்டும், அது மட்டுமின்றி நாள்தோறும் பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் நிறுவனங்கள் தோறும் நடையாய் நடந்து படி படியாய் ஏறி இறங்க வேண்டும், இரவு நேரங்களில் நள்ளிரவு வரை கண்விழித்து குந்தியிருந்து கிடைத்த ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் மின்னஞ்ஞல் மூலம் சுய விபரக்கோவை அனுப்ப வேண்டும். கிராமிய வழக்கில் சுருக்கமாக சொன்னால் நாய் படா பாடு படவேண்டும், மாறாக காலடிக்கு எந்தவொரு தொழிலும் வந்து சேராது. ஆரம்பத்தில் இந்த தொழில்தான் வேண்டும் இந்த தொழிலை தான் நான் செய்வேன் என்று மிக பிடிவாதமாக வரும் அத்தனை பேரும் மூன்று மாத கால விசா முடிவுற போகும் தருணத்தில் தமது தகமை, அனுபவம், சுய கௌரவம் எல்லாவற்றையும் தூக்கி தூர வீசிவிட்டு கிடைக்கும் ஏதோ ஒரு வேலைக்கு உடன்பட்டு ஏற்றுக்கொள்கிறார்கள். வேறு சிலரோ செலவழித்த தொகை காணாமல் போய் விட்டது என்று எண்ணி கனத்த இதயத்துடனும் கண்ணீர் சிந்தும் விழிகளுடனும் மீண்டும் தாய் நாட்டுக்கு விமானமேறி விடுகிறார்கள், மூன்றரை லட்சம் காசை செலவு செய்துவிட்டு வீசிய கையும் வெறுங்கையுமாக நாட்டுக்கு செல்தல் என்பது மிகவும் வேதனையுடன் கூடிய அவமானமான ஒரு செயல் என்பது திரும்பி செல்லும் அவர்களுக்கே புரிந்த ஒரு விடயம்.
இவ்வாறு அதிகமான காசை வீணாக்காமல் வேறு எப்படி தொழில் பெறலாம் என்பதை இன்னுமொரு பதிவில் சொல்கிறேன்.

-ரஷானா மனாப்-

தொடரும்..

Post a Comment

0 Comments