அநுராதபுரம் பிரதேசத்தின் பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரான எஸ்.எப். லொகு என்பவர் பிரபல ஆடைக்காட்சியறையொன்றின் விளம்பரத்தூதுவராக செயற்படத் தொடங்கியுள்ளார்.
கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் அநுராதபுரம் பிரதேசத்தில் செயற்பட்டு வந்த நைட் கிளப் ஒன்றின் உரிமையாளரான கராட்டே வசந்த என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டு, கொடூரமானமுறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இக்கொலைச் சம்பவத்தின் சூத்திரதாரியாக எஸ்.எப். லொகு எனப்படும் ஆர்.ஏ. இரோன் ரணசிங்க என்பவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர், அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த தமிழ்-சிங்கள புத்தாண்டு காலப்பகுதி தொடக்கம் அநுராதபுர நகரில் அமைந்துள்ள பாரிய ஆடைக்காட்சியறை ஒன்றின் விளம்பரத்தூதுவராக செயற்படத் தொடங்கியுள்ளார்.
குறித்த காட்சியறையில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி குறைந்த விலையில் தரமான துணி வகைகள் விற்பனை செய்யப்படுவதாக நகர் முழுவதும் வலம்வந்து எஸ்.எப்.லொகு பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
இவரது பிரச்சாரம் காரணமாக தமது வர்த்தக நிலையங்களுக்கு வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துள்ளதாக அநுராதபுரம் நகரில் உள்ள ஏனைய வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
0 Comments