Subscribe Us

header ads

அவலக்குரல் கேட்கவில்லையா? சிரியாவில் தாக்குதல் மீண்டும் தொடர்கிறது. ஏன் என்று கேட்க ஆளில்லை.

– முஹம்மத் பகீஹுத்தீன் –

சிரியாவில் மீண்டும் நச்சு வாயு குண்டு வீச்சு. 100 பேர் மரணம் 400 காயம் என பாதிப்பு ஆரம்பம். தாக்குதல் மீண்டும் தொடர்கிறது. ஏன் என்று கேட்க ஆளில்லை.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நிர்வான நிலையில் புழுக்களைப் போல் துடிப்பதை பார்த்த கண்கள் நிம்மதியாக தூங்கும் என்றிருந்தால் நிச்சயம் மனிதம் மறந்த படைப்புக்கள் அவை. மனட்சாட்சியற்ற ஜடங்கள். உயிருடன் வாழும் பிணங்கள்.
விச வாயுவின் தாக்கம் உயிரை பறிக்கிறது. வாய் பிதற்றும் குழந்தைகள் வளைந்து நெலிந்து மடிகின்றார்கள். அப்புறம் உயிர் பிரியும் ஒசை காதில் கேட்கிறது. நெஞ்சு வெடிக்கப் பார்க்கிறது.
முஸ்லிம் உலகம் வழமைபோல் காகிதத்தல் கிறுக்கிய எழுத்துக்களை பறக்கவிட்டு விட்டு அமைதியடைகிறது. ஐயோ பாவம்! பாவமறியா சிசுக்களையும் பால்மறவா குழந்தைகளையும் அபலைப் பெண்களையும் மரணத்தின் ஓசையை வெளிப்படுத்தும் பாலகர்களையும் காப்பாற்ற யாரும் இல்லையே! ஆனால் உலக முஸ்லிம் சனத்தொகை 200 கோடி என பெருமையாக கூறுவதற்கு எல்லோரும் உண்டு.?
எழுபதுகளின் நடுப்பகுயில் ஒரு நிர்வான படம் வியட்நாம் போரையே நிறுத்தியது. எழுபது வருடங்களாக முஸ்லிம் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. ஏன் என்று கேட்க ஒரு ஈ, காக்கா கூட இல்லை.
1972ம் ஆண்டில் வியட்நாம் யுத்தத்தின் போது சர்வதேசிய ரீதியாக தடுக்கப்பட்ட நேபாம் விச வாயு குண்டுகளை அமரிக்கா வீசியபோது ஒரு கிராமம் பற்றியெரிந்தது. அங்கே ஒரு வியட்நாம் சிறுமி எரிகாயங்களுடன் நிர்வானமாக பாதையில் ‘சுடூது.. சுடூது’ என்று கண்ணீர் மல்க அழுது கொண்டு ஓடினாள். அப்போது அவளுக்கு வயது ஒன்பது.
நிர்வானமாக பாதைவழியே ஓடிச் சென்ற வியட்நாம் சிறுமியின் படம் உலகை உலுக்கியது. போர் தொடுத்த அமரிக்காவிற்கு சங்கடத்தை கொடுத்தது. போரை நிறுத்துவதற்கு அந்தப் படம் பிரதானமான காரணமாக அமைந்தது.
அந்தப் புகைப்படத்தை எடுத்த ‘நிக்வூட்’ எனும் புகைப்படக் கலைஞர் உலக அரங்கில் ஒரு நட்சத்திரமாக மதிக்கப்பட்டார். உலகப் புகழ் பெற்ற பல விருதுகள் அவருக்கு கிடைத்தன. மேற்குலகம் நிக்வுட்டை பாராட்டியது.
ஆனால்…
பலஸ்தீன் சிறுவன் ‘திர்ரா’ தந்தையின்; மடியில் தஞ்சம் புகுந்தும் கூட சுட்டுக் கொள்ளப்பட்டதை உலகம் கண்டது.
உலகை அழவைத்த சிரியாவின் அந்தச் சிறுவன் இம்ரானின் புகைப்படம் நினைக்கும் போதே நெஞ்சு வலிக்கிறது. இடிபாடுகின் இடுக்குகளிலிருந்து மீட்டெடுத்த அந்த சிறுவனின் காட்சியை ஒளிபரப்பிய அமரிக்க செய்தித் தொகுப்பாளர் அந்த புகைபடத்தின்மீது அழுது புரண்ட காட்சியை உலகம் கண்டது.
துருக்கிய கடக்கரையில் சடலமாக ஒதுங்கிய மூன்று வயது பாலகன் ‘ஈலான் குர்தி’ யின் பரிதாபத் தோற்றம் இன்னும் கண்களை விட்டு அகலவில்லை.
அன்று ஒரு புகைப்படம் போரை நிறுத்தியது. இன்று பல நூறு புகைப்படங்கள் அறபுலகத்தின் உணர்வுகளை இன்னும் உசுப்பவில்லை. மேற்குலகம் அந்தப் புகைப்படங்களை பார்த்தும் பார்க்காமலே போகிறது.
உயிர் பிரியும் வேiயில் சிரியா நாட்டின் ஒரு குழந்தை ‘நான் எல்லாவற்றைம் அல்லாஹ்வடம் போய் சொல்வேன்’ என உரத்துக் கூறிவிட்டு சென்றது. பூமியின் நீதியில் நம்பிக்கை இழந்த குழந்தை வானத்தின் நீதியின் பக்கம் திரும்பியது. நிச்சியமாக வானத்தின் நீதி ஒரு கை பார்க்கும். அப்போது புரியாத பல உண்மைகள் புரியும். நிச்சயமாக வேடிக்கை பார்த்த மௌனங்களுக்கு தண்டனை கிடைக்கும்.
இனியும் இந்த உள்ளங்கள் கோபம் கொண்டு பொங்கி வராவிட்டால் மனிதம் இழந்த ஜடங்கள் என்பதில் சந்தேகமில்லை. உயிரை இழந்தோம் உடமை இழந்தோம் உணர்வை இழக்க முடியுமா?
சிரியா துகில் உரியப்பட்ட நிலையில் கதறுகிறது. அதன் குழந்தைகள் ஆடைகள் இழந்த நிலையில் மரணத்தை தழுவுகிறார்கள்.
அங்கே மரணம் வாழுகிறது. இங்கே ஏன் மனிதம் சாகவேண்டும்.?!

Post a Comment

0 Comments