Subscribe Us

header ads

கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை பிழையானது

இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை பிழையானது என சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கும் அளவிற்கு இலங்கையில் எச்1என்1 நோய்த் தொற்று பரவவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு சர்வதேச சுகாதார நியமங்களுக்கு அமைய உறுப்பு நாடு ஒன்று மற்றுமொரு நாட்டின் மீது இவ்வாறு பயணத் தடை விதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அசேல வீரக்கோனுக்கு, இந்த நிலைமை குறித்து தெளிவு படுத்தும் நோக்கில் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்…
2009ம் ஆண்டின் பின்னர் உலகின் பல நாடுகளிலும் நிலவிய நிலைமையே இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது, பருவப் பெயர்ச்சி மழையுடன் இவ்வாறு நோய்த் தொற்று பரவுவது சாதாரண ஓர் நிலைமை.
கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மொனராகலை ஆகிய பகுதியில் அதிகளவில் இந்த நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னைய நிலையுடன் ஒப்பீடு செய்யும் போது தற்போது எச்1என்1 நோய்த் தாக்கம் குறைவடைந்துள்ளது.
2009ம் ஆண்டில் கடுமையாக இந்த நோய்த் தாக்கம் ஏற்பட்டிருந்த போது கூட உலகின் எந்தவொரு நாடும் பயணத்தடை விதிக்கவில்லை என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments