நியூசிலாந்தின்,ஆக்லாந்தில் வசிக்கும் ராபர்ட், 3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் ஒரு காலை இழந்த பூனையைத் தத்தெடுத்தார். மூன்று கால்களுடன் சிமோன் இயல்பாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் பக்கத்துவீட்டு நாய், சிமோனை மிக மோசமாக தாக்கியது. அடிபட்ட சிமோனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் ராபர்ட். “மிக மோசமான பாதிப்பு. ஒரு காலை எடுத்தால்தான் சிமோன் பிழைக்கும் என்றார் மருத்துவர். வேறு வழியின்றி சம்மதித்தோம். நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு சிமோன் உடல் தேறியது. நடக்க ஆரம்பித்தபோது, தன்னுடைய காலைத் தேடும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு ஆச்சரியம். தனக்கு இன்னொரு கால் இல்லை என்ற எண்ணமே சிமோனுக்கு ஏற்படவில்லை. இரண்டு கால்களுடன் மெதுவாக நின்று பழகியது. பிறகு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தது. சிமோன் உயிர்ப் பிழைத்து, இரண்டு கால்களோடு வாழ்க்கையை அழகாக எதிர்க்கொண்ட விதத்துக்கு முன்னால் நாங்கள் சிகிச்சைக்காகச் செலவு செய்த 14.5 லட்சம் ரூபாய் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் இன்னும் இயல்பாக மாறிவிட்டது. வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் எதிர்கொள்கிறது. சிமோனைப் பார்த்து மனிதர்கள் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கிறது” என்கிறார் ராபர்ட்.
இரண்டு கால்களுடன் வலம் வரும் சூப்பர் சிமோன்!
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசித்து வருகிறார் ஹுவா யுன்கிங் (62). கடந்த 36 ஆண்டுகளாக தனது மகளுடன் சேர்ந்து ஜென்ஜியாங் ஏரியில் புகைப்படம் எடுத்து வருகிறார். ஒரு வயது ஹுவாஹுவாவை அழைத்துக்கொண்டு ஏரிக்கு வந்தபோது, தற்செயலாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அடுத்த ஆண்டும் அதே ஏரிக்கு மகளுடன் வந்து, ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகுதான் ஒவ்வோர் ஆண்டும் தன் மகளுடன் ஏரியில் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கடந்த 36 ஆண்டுகளாக அப்பாவும் மகளும் அதே ஏரியில் புகைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். 1998-ம் ஆண்டு மட்டும் ஹுவாஹுவா விடுமுறைக்காக வெளியூர் சென்றுவிட்டார். 36 ஆண்டுகளில் 35 புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை வரிசையாக வைத்துப் பார்க்கும்போது, ஹுவாஹுவாவின் வளர்ச்சி தெரிகிறது. இவர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கும் ஏரியும் பல மாற்றங்களைச் சந்தித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஹுவாஹுவாவுக்கு திருமணமாகி, குழந்தைகள் பிறந்தபோதும் பேரன், பேத்தியுடன் சேர்ந்து ஏரியில் புகைப்படம் எடுப்பதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ஹுவா யுன்கிங்.
கடந்த காலத்தை ஆவணப்படுத்தும் புகைப்படங்கள்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் வின்னி ஓ ஒப்பனைக் கலைஞராகவும் மாடலாகவும் இருக்கிறார். இதுவரை ரூ.34 லட்சம் செலவு செய்து, 110 அழகு சிகிச்சைகளை மேற்கொண்டு, வேற்று கிரகவாசியாகத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். “பல காரணங்களுக்காக அழகு சிகிச்சைகளைச் செய்து கொள்கிறார்கள். எனக்கு சின்ன வயதிலிருந்தே ஏலியன் மேல் ஆர்வம் அதிகம். 17 வயதிலிருந்து ஒவ்வொரு உறுப்பையும் சிகிச்சை மூலம் மாற்றிக்கொண்டு வருகிறேன். இந்த உலகத்திலிருக்கும் பாலினம், இனம், மொழி பாகுபாடெல்லாம் எனக்குக் கிடையாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். ஹாலிவுட்டில் என்னை ஏலியனாகப் பயன்படுத்த இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்கிறார் வின்னி ஓ.
0 Comments