Subscribe Us

header ads

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்" வேண்டுகோளை ஏற்று “புங்குடுதீவு வைத்தியசாலையின் பெயர்ப்பலகை புனரமைப்பு"..- (படங்கள். வீடியோ)


புங்குடுதீவு வைத்தியசாலையின் பெயர்ப்பலகையானது மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக புங்குடுதீவு மக்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் சுவிஸிலிருந்து இலங்கை சென்றிருந்த புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர் திரு. வேலுப்பிள்ளை கிருஷ்ணகுமார் (குமார்) அவர்களை, அதனை நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதற்குரிய தீர்வுகள் குறித்து ஆராய்ந்து தருமாறு, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.

அவர் வழங்கிய தகவல்களைத் தொடர்ந்து, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், வடமாகாணசபை உறுப்பினர் திரு. பாலசந்திரன் கஜதீபன் அவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, “புங்குடுதீவின் வைத்தியசாலையின் பெயர்ப்பலகை” தொடர்பில் உள்ளிட்ட “புங்குடுதீவின் அபிவிருத்தி தொடர்பிலான” பல விடயங்களையும் சுட்டிக்காட்டி உரையாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இது குறித்து வடமாகாணசபை உறுப்பினர் திரு. பாலசந்திரன் கஜதீபன் அவர்கள், “தனக்கு அபிவிருத்திக்கென வடமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக”, உடனடியாக இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், மிகவிரைவில் இதனை திருத்தியமைத்து தருவதாகவும், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம்; உறுதியளிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதன் பிரதிபலனாக இன்றையதினம் புங்குடுதீவு வைத்தியசாலையின் பெயர்ப்பலகை திருத்தியமைத்து புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி திறப்பு விழாவில் வட மாகாணசபை உறுப்பினர்களாகிய திரு. விந்தன் கனகரத்தினம், திரு. பாலச்சந்திரன் கஜதீபன், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்திய ஒன்றியப் பொருளாளர் திருமதி சுலோசனாம்பிகை தனபாலன், புங்குடுதீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அத்தியட்சகர் திருமதி ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி பெயர்ப் பலகையினைத் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் புங்குடுதீவு வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைப் பணியாளர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியினால் உடனடித் தேவையாகவுள்ள முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தமது வைத்தியசாலையின் இரண்டு கிணறுகளும் பாழடைந்துள்ளதாகவும், அவற்றை தூர்வாரி புனரமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டதுடன், வைத்தியசாலையிலுள்ள மலசலகூடம் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதையும், வைத்தியசாலையின் சமையலறை மிகவும் பழுதடைந்து, சமையலறையில் அதற்கான உபகரணங்களும் இல்லாத நிலை பற்றியும், வைத்தியசாலையின் வாயிற்பகுதியை திருத்தியமைக்க வேண்டியது பற்றியும், வைத்தியசாலையின் ஆண்கள், பெண்கள் விடுதிகளுக்கிடையிலான இரும்புச் சட்டங்கள் துருப்பிடித்து காணப்படுவதையும் முறையிட்டதோடு, இது குறித்து தாம் பலரிடம் முறையிட்டும் எவரும் அக்கறை செலுத்தாதநிலையில் தற்போது சுவிஸ் ஒன்றியம் விடயமாக தாங்கள் அனைவரும் இங்கு நேரடியாக வருகைதந்திருப்பதனால் சுவிஸ் ஒன்றியத்திடமும், வட மாகாணசபை உறுப்பினர்களிடமும் இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் தெரிவித்தார். 

இது குறித்து கருத்துத் தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. விந்தன் கனகரத்தினம், திரு. பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் தாம் வட மாகாணசபையின் சுகாதார அமைச்சின் ஊடாக தம்மால் முடிந்த உதவிகளை மேற்கொள்வதற்காக இந்தக் கோரிக்கைகளை அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், இதேவேளை உடனடியாக செய்யக்கூடிய தேவைகளை சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுடன் நேரடியாக கதைத்து ஒன்றியத்தினூடாக செய்யக் கூடியவற்றை செய்ய தாம் முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இங்கு கருத்துத் தெரிவித்த புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி சுலோசனாம்பிகை தனபாலன் அவர்கள், "மேற்குறிப்பிட்ட தேவைகள் உடனடியாக செய்யக்கூடியவைகள் தான். ஏனெனில் மக்களுக்காகவே எல்லோரும் சேவையாற்றுகின்றார்கள். இது மக்களின் அத்தியாவசிய தேவையான ஒரு விடயமாகும். இது குறித்து நான் இன்றே சுவிஸ் ஒன்றியத்தின் தலைவருடனும், நிர்வாகத்தினருடனும் கதைத்து இதனை செய்து தருவதற்கு என்னால் முடிந்தளவுக்கு முயற்சிக்கின்றேன்" என்று கூறினார்.

இவை குறித்து சுவிஸ் ஒன்றியம் மிக விரைவில் வட மாகாணசபை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, ஒன்றிய நிர்வாக சபை கூடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமென அறியத்தருகின்றோம். "சுவிஸ் ஒன்றியத்தின்  நிர்வாகசபை தெரிவித்த தகவலின்படி அறிய  தருகின்றோம்"
நன்றி,

இவ்வண்ணம், 

திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து.
06.03.2017.














Post a Comment

0 Comments