Subscribe Us

‘கவனமாக சென்று வாருங்கள்': வீதி பாதுகாப்பு நிகழ்ச்சி ஜனாதிபதி தலைமையில் (Photos)

போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்படாமல் பயணிக்கும் பிரமுகர்களின் வாகனங்கள் தொடர்பில் வாராந்தம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (01) முற்பகல் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற ‘கவனமாக சென்று வாருங்கள்’ தேசிய வீதி பாதுகாப்பு நிகழ்ச்சிக்கு இணைவாக நடைபெறும் தேசிய வீதிப் பாதுகாப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாத அச்சுறுத்தலில்லாத இந்த காலத்தில் முறையின்றி பயணிக்கும் வாகனங்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பிலும் அவ்வாறான வாகனங்களில் பயணிப்பவர்கள் பிரமுகர்கள்தானா என்பது தொடர்பாகவும் கவனித்து பார்க்கவேண்டும்.
குறித்த அறிக்கையை பொலிஸ் மா அதிபர் வழங்கியவுடன் அது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து உரிய தரப்பினரை வரவழைத்து தனிப்பட்டமுறையில் அவர்களுடன் கலந்துரையாடப் போவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
வீதி பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பில் மேல் மட்டத்திலிருந்தே கீழ் மட்டத்துக்கு முன்மாதிரி காட்டப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இவ்வாறான நிகழ்ச்சிகள் வெற்றியடைவதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
திடீர் விபத்துக்கள் காரணமாக சுகாதார துறைக்கு பாரிய செலவு செய்யப்படுவதனால், நாட்டின் அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படுவதாகவும் சட்டத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொதுப் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படாமையே நாட்டிலுள்ள போக்குவரத்து நெருக்கடிகளுக்கு காரணமென்றும் பொதுப் போக்குவரத்து சேவைகளை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பில் தெளிவு இருந்தபோதிலும் அது அமுல்படுத்தப்படாமை தொடர்பில் பிரச்சினையிருப்பதாகவும் பயணிகளும், சாரதிகளும் உரியவாறு சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் முழுமையான அனுசரணையுடன் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட தேசிய வீதி பாதுகாப்பு நிகழ்ச்சியை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் 10 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன தலைவரிடம் வழங்கப்பட்டது.
இத்தேபான தம்மாலங்கார தேரர், அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, கயந்த கருணாதிலக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உட்பட்ட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். 
நன்றி: Daily Ceylon

03 (1)
06
09
11
05

Post a Comment

0 Comments