புத்தள நகரில் இன்று அதிகம் பேசுபொருள் ஆக மாறியிருக்கின்ற விடயம் எதிர்வரும் 14 ம் திகதி புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திண்மக்கழிவுகளை புத்தளத்தில் கொட்டுவதை தடைசெய்யும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகும் (வெற்றிபெற வாழ்த்துக்கள்) . உண்மையில் இப்போராட்டம் பாரிய இளைஞர் சக்தியின் பங்குபற்றுதலோடு இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. என்றாலும் எமது கண்ணோட்டத்தில் இளைஞர்கள் ஆகிய நாம் கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் விட்ட தவறே இன்று நாம் கழிவுகளுக்கெதிராகவும், கரன்டுக்காகவும (Powercut) வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை என்பதை யாரும் மறுத்துரைக்கமாட்டீர்கள் என கருதுகிறேன். ஒரு சிறந்த முதுகெலும்புள்ள அரசியல்வாதியினை பாராளுமன்றம் அனுப்பியிருந்தால் எமக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது. புத்தளம் தேர்தல் தொகுதி வெற்றிபெற்றதால் தான் ஐக்கிய தேசிய கட்சி புத்தளம் மாவட்டத்தை கைப்பற்றியது என மார்தட்டி பேசும் பச்சைக்கொடி சமூகமே அன்று புத்தளத்தொகுதிக்குள் மாத்திரம் 5 வேற்பாளர்களை இறக்கி வாக்கினை பிரித்து ஒரு முஸ்லிம் பிரதிநிதியயினை கூட வென்றெடுக்க முடியாமல் புத்தள சமூகத்திற்கு இழைக்கைப்பட்ட அநீதியினை அறிந்தும் அறியாதவர்களாக புத்தளம் வாழ் சமூகம் எப்போது இருந்ததோ அப்போதே புத்தளம் குப்பையாக்கப்பட்ட வரலாற்றினை மறந்துவிட்டீர்கள் போலும். அன்று நாம் எமக்கிருந்த வாக்குப்பலத்தினைக்கொண்டு எமது பிரதிநிதியினை பாராளுமன்றம் அனுப்பியிருந்தால் இன்று இப்பிரச்சினை தொடர்பாக தனியான முன்மொழிவு பாராளுமன்றில் கொண்டுவரப்பட்டு வாதப்பிரதிவாதங்கள் உருவாக்கப்பட்டு பாராளுமன்றம் ஒரு தீர்மானம் மேற்கொண்டிருக்கும். மாற்று வழியில்லை என அரசாங்கம் கைவிரித்திருந்தால் கழிவுகளை தந்தாலும் பரவாயில்லை வில்பத்துவை அண்டிய மக்களுக்கு இடையூரில்லாத பிரதேசம் ஒன்றில் கழிவு முகாமைத்துவ பல்கலைக்கழகம் ஒன்றினை புத்தளமண்ணில் நிர்மாணிப்பதற்கான பிரேரணையினை வழங்கியிருப்பார் (புத்தளமாவட்டம் எவ்வித உயர்கல்வி நிறுவனங்களுமற்ற மாவட்டம்). மாறாக இன்று இவ்விடயத்தினை வைத்து அரசியல் இலாபம் தேடப்படுகிறது. இப்போராட்டங்கள் எந்தளவு வெற்றியளிக்கும் என்ற வினாவிற்கான விடையினை நுரைச்சோலை அனல்மின் நிலைய நிர்மானத்தின் போது செய்யப்பட்ட போராட்டத்தையும் அதையும் மீறி நிர்மாணிக்கப்பட்ட மின்நிலைய நடவடிக்கையில் தேடிப்பாருங்கள். நல்லாட்சி அரசு புத்தளத்தை எத்தளமாக மாற்ற எத்தனிக்கின்றது என்ற கேள்வியினை கேட்டுப்பாருங்கள் வெறும் உப்புத்தளமாகவே வைத்திருக்க காத்திருக்கிறது என்ற விடையைத்தவிர வேறு ஒன்றும் மிஞ்சாது. சீமெந்து தொழிற்சாலை மூலம் தூய காற்றை இழந்தோம்,அனல் மின்நிலையம் மூலம் மழையிழந்து விவசாயம் துறந்தோம், நாளை வரும் குப்பைகள் மூலம் நாரடிக்கப்படவிருக்கிறோம் என்பதை மறக்காமல் இனிவருகின்ற தேர்தல்களிலேனும் கட்சி பேதம் துறந்து எமக்காகவில்லையானாலும் வருங்கால சந்ததிக்காகவாவது சிறந்த ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க முயற்சிப்போம். ஒரு சமூகம் தன் தலைவிதியை மாற்ற முயற்சிக்காத வரையில் இறைவன் மாற்றப்போவதில்லை என்ற இறைவசனத்தோடு மௌனிக்கிறது எனது பேனா..
-Sifas Nazar B.A, REDG LLB.
-Sifas Nazar B.A, REDG LLB.


0 Comments