‘‘விபத்து என்று பதறி ஓடாமல், ‘நமக்கென்ன’ என்று ஒதுங்கிப் போகாமல்.... நாம் அனைவரும் மனிதாபிமானத்துடனும், பொறுப்புடனும் செயல்பட்டால், விபத்து நடந்த இடத்தில் நடக்க இருக்கும் இரண்டாம் விபத்தைத் தடுக்கலாம். சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நபர்களுக்கு முறையான முதலுதவிகளைச் செய்யாததும், சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததுமே... இரண்டாம் விபத்து. இத்தகைய உயிர் காக்கும் பயிற்சிக்கான எங்களது முயற்சி தான், இந்த ‘அலர்ட்..!’’ என அலர்ட்டாக பேச ஆரம்பிக்கிறார், கலா பாலசுந்தரம்.
சென்னை வாசியான இவர், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் உயர் அதிகாரி. அலுவலகம் செல்லும் வழியில், இவர் பார்க்க நேர்ந்த சாலை விபத்துக்களும், அது ஏற்படுத்திய தாக்கமுமே, இவரை, ‘முதலுதவி’ பயிற்சி மேற்கொள்ள தூண்டியிருக்கின்றன.
‘‘விபத்தில் சிக்கியவருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மை, அனைவருக்குமே இருக் கிறது. ஆனால் எப்படி உதவவேண்டும்..? என்ற அணுகுமுறை தான் நம்மிடம் இல்லை. விபத்து நடந்தவுடன் என்ன செய்வது...?, ஏது செய்வது...? என்ற குழப்பம் என்னையும், வேடிக்கை பார்ப்பவர்களின் கூட்டத்தோடு ஒன்றவைத்தது. ஆனால் அடுத்த முறை, வேடிக்கை பார்க்கவில்லை. தைரியமாக களத்தில் இறங்கினேன்’’ என்று துணிச்சலாக பேசும் கலா, முறையான முதலுதவி பயிற்சிகளை கற்றுக்கொண்டதுடன், இன்று முதலுதவி பயிற்சியாளராகவும் திகழ்கிறார்.
‘‘ஆயிரக்கணக்கில் விரிந்திருக்கும் பெருநகர சாலைகளில்... தனி மனிதராக நம்மால் மட்டும் உதவ முடியுமா... என்ன..? அதற்காகவே ‘அலர்ட்’ என்னும் சமூக அமைப்பை உருவாக்கி... ஆயிரக்கணக்கான மக்களுக்கு, உயிர் காக்கும் பயிற்சிகளை வழங்கி வருகிறேன்...’’ என மனிதம் ததும்ப பேசும் கலாவிற்கு, இச்சேவையில் இது 10–வது ஆண்டு. உயிர்காக்கும் இதயமாக திகழ்ந்து வரும் கலாவிடம் விரிவாக பேசுவோம்...
* ‘அலர்ட்’ அமைப்பின் பணிகள் என்ன..?
‘‘விபத்தில் சிக்கியவரை, எப்படி கையாள வேண்டும் என்ற முதலுதவி பயிற்சியே, அலர்ட் அமைப்பின் முழு மூச்சு. வாகனத்தில் இருந்து தடுமாறி விழுபவர்களை கைதூக்கிவிட, நிறைய கைகள் இருக்கிறது. ஆனால் விபத்தில் சிக்கி, ரத்த வெள்ளத்தில் மிதப்பவருக்கு முதலுதவி செய்யத்தான் ஆட்கள் இல்லை. அதற்கான பயிற்சியை தான், நாங்கள் வழங்குகிறோம்.
எலும்பு முறிதல், மண்டை உடைதல், விலா எலும்பு களில் சிதைவு, விபத்துக்குள்ளான அதிர்ச்சியில் மூச்சு நின்றுவிடுதல், முதுகெலும்பு உடைபடுதல்... என விபத்தில் சிக்கியவர், எந்தநிலையில் இருந்தாலும் சரி... ஆம்புலன்ஸ் வரும் வரை அவர்களை எப்படி கையாளவேண்டும்..., எந்தமாதிரியான முதலுதவிகளை வழங்கவேண்டும் போன்ற பயிற்சிகளை முறையாக வழங்குகிறோம். இவைமட்டுமின்றி தீ விபத்து, வெள்ள பாதிப்பு... போன்ற ஆபத்து காலங்களுக்கான முதலுதவிகளையும் கற்றுக்கொடுக்கிறோம்’’
* விபத்தை வேடிக்கை பார்க்கும் மக் களின்மன நிலையை, முதலுதவி பயிற்சி களால் மாற்ற முடியுமா..?
* முதலுதவி பயிற்சிகள், விபத்தில் சிக்கியவரின் உயிரை காப்பாற்றுமா..?
‘‘முதலுதவி... மருத்துவம்... இவை இரண்டுமே, மனித உயிர்களை காப்பாற்றவே முயல்கின்றன. ஆம்புலன்ஸ் வரும் வரை, சூழ்நிலையை சமாளித்து, கிடைக்கும் பொருட்களில் மருத்துவம் கொடுப்பது தான் முதலுதவி. இதுவும் உயிர் காக்கும் முயற்சியே’’
*உங்களுடைய பயிற்சி முறைகள் எப்படி இருக்கும்..?
‘‘நாடகங்கள், செய்முறை விளக்கங்கள், விபத்து ஒத்திகைகள்... என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புரிந்துகொள்ளும் படியே பயிற்சி முறைகளை அமைத்திருக்கிறோம்.
1 மணி நேர பயிற்சி, 3 மணி நேர பயிற்சி, ஒரு நாள்–இருநாள்.... அட்வாண்ஸ்ட் பயிற்சி... என விபத்து சூழ்நிலையை சமாளிக்கும் முதலுதவி பயிற்சிகளுடன், வீட்டில் நடக்கும் எதார்த்தமான விபத்துகளை சமாளிக்கும் பயிற்சிகளையும் வழங்குகிறோம்.
சாலை விபத்து, தீ விபத்தை எதிர்கொள்வது எப்படி..?, வெள்ள பாதிப்பில் தப்பிப்பது எப்படி..?, குழந்தைகள் குண்டு ஊசி, சேப்டி பின், நாணயம்... போன்றவற்றை விழுங்கிவிட்டால் என்ன செய்வது, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி தேற்றுவது, மாரடைப்பு வந்தால் என்ன செய்வது... போன்றவற்றை நாடகங்களாக நடித்து காண்பிக்கிறோம். ஞாயிறு தோறும், சென்னை பெசன்ட் நகரில் நடக்கும் ‘வாகனம் இல்லா சாலை’ நிகழ்ச்சியில்... எங்களுடைய விழிப் புணர்வு நாடகங்களை பார்க்கலாம். கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் 100 பேருக்கு, சி.பி.ஆர்.சிகிச்சை முறைகளையும் கற்றுக்கொடுத்தோம். இவைமட்டுமின்றி தமிழகம், பெங்களூரு போன்ற இடங்களிலும் எங்களுடைய அமைப்பின் பயிற்சி நாடகங்கள் அரங்கேறுகின்றன’’
எப்படி முதலுதவி செய்யவேண்டும் என்பதைவிட... விபத்து காலத்தில் என்ன செய்யக்கூடாது என்பதையே அதிகமாக கற்றுக்கொடுக்கிறோம்.
* கண்ணால் பார்க்கும் விபத்தை, மிகச்சாதாரணமாக கடந்து செல்பவர்கள், குற்றவாளிகளா..?
‘‘மரண வலி(ழி)யில் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு மனித உயிரை, என்னால் காப்பாற்ற முடியாது; காப்பாற்றத் தெரியாது’ என்கிற அலட்சியமும், அறியாமையும் நிச்சயம் குற்றம் தான்..!’’ என சற்று ஆவேசமாய் பேசினாலும், உயிர் காக்கும் பயிற்சிகளை கற்றுக்கொள்வதன் அவசியத்தை அழுத்தமாக சொல்கிறார்.
மென்பொறியாளராக பணியாற்றும் கலா, தன் அலுவலக வேலை நேரம் போக பெரும்பாலான நேரங்களை, முதலுதவி பயிற்சிகளிலேயே கழிக்கிறார். ‘5 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே, இப்பயிற்சியில் தன்னிறைவு பெற வேண்டும்; அதுவே என் இலக்கு’ என, கம்பீரமாக சொல்கிறார்.
‘‘வெளிநாடுகளில் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குகூட முதலுதவிகள் பற்றித் தெரியும். ஆனால் இங்கு... விளையாட்டு மைதானத்தில் ஒரு சிறுவனுக்கு அடிப்பட்டுவிட்டால் கூட ‘உடனடியாக ஓடி வந்துவிடு’ என்று தான் நம் குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறோம். இந்த கண்ணோட்டத்தை மாற்றத்தான் அமைப்பினருடன், இணைந்து முதலுதவி பயிற்சிகளை கொடுத்து வருகிறோம்’’ என்று முடிக்கும் கலா, குடும்பத்தினருடன் அடையாரில் வசித்து வருகிறார். இவரது கணவர் பாலசுந்தரம் சொந்த தொழில் செய்கிறார். இவருக்கு சிவா என்ற மகனும், அஸ்வினி என்ற மகளும் உள்ளனர். அம்மாவின் சமூக பொறுப்பிற்கு, இவரது பிள்ளைகளும் துணை நிற்கின்றனர்.
விபத்தில் சிக்கியவரை எப்படி கையாள்வது..?
‘‘முதலில் நம்மை திடப்படுத்தி கொள்ளவேண்டும். இல்லையேல் மயங்கி விழுந்துவிடுவோம். அதனால் திடமான மனதுடன் விபத்துக்குள்ளானவரை அணுகவேண்டும். விபத்துக்குள்ளானவர், சுதாரித்து எழுந்துவிட்டால் பிரச்சினை இல்லை; ஆனால் அதற்கு மாறாக மயங்கிவிட்டால், அவரை ஒருகளித்து படுக்க வையுங்கள். இது...
ஆக்ஸிஜன்நிறைந்த காற்றைமூளைக்கு கொண்டு செல்லும். அதனால் மயக்கநிலையில் இருந்து எழுந்துவிடுவார். அதற்கு பின் தோள்களைத் தட்டி பேச்சுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும். ‘எங்கே வலிக்கிறது... என்ன செய்கிறது’ என்று கேட்டுக்கொண்டால், அதற்கு ஏற்றபடி அவரைக் கையாளலாம்.
இவை கைக்கொடுக்காத பட்சத்தில் பாதிக்கப்பட்ட வருக்கு மூச்சு இருக் கிறதா..? என்று பாருங்கள். வயிறு ஏறி இறங்குவதை பார்த்தும், நமது காதுகளை அவரின் நாசிக்கு அருகில் கொண்டு போவதன் மூலமும் இதை உணரலாம். ஒருவேளை மூச்சு இல்லை என்றால், விபத்து நடந்த அதிர்ச்சியில் இதயத் துடிப்பு நின்றிருக்கும். உடனே, ‘இறந்து விட்டார்’ என்று முடிவு செய்துவிட வேண்டாம். ‘‘கார்டியோ பல்மனரி ரிசஸ்சிடேஷன்’’ எனப்படும் சி.பி.ஆர் சிகிச்சையை உடனடியாகச் செய்தால் மீண்டும் இதயம் துடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து விடும்’’
சி.பி.ஆர். சிகிச்சை கொடுப்பது எப்படி..?
‘‘பாதிக்கப்பட்டவரின் மார்புக்கு நடுவே நமது வலது உள்ளங்கையை வைத்து அதற்கு மேல் இடது கையால் முட்டுக் கொடுத்து அழுத்தம் தருவதுதான் சி.பி.ஆர் சிகிச்சை. இரண்டு அங்குலம் வரை மார்பு இறங்கி ஏறும்படி தொடர்ந்து அழுத்தம் தர வேண்டியது அவசியம். இதுதான் முறையான சி.பி.ஆர் சிகிச்சை என்று சொல்ல முடியாது. ஆனாலும், இந்த அழுத்தங்களால் இதயம் மீண்டும் துடிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது..!’’
மாரடைப்பு, வலிப்பு நோய்க்கு...
முதலுதவியாக என்ன செய்யலாம்..?
‘‘மாரடைப்பிற்கு சிறந்த முதலுதவி... மருத்துவமனைக்கு விரைவது தான். இருப்பினும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சில வழிமுறைகள் இருக்கிறது. பாதிக்கப்பட்டவரை டபிள்யூ வடிவில் அமர வைத்து கொண்டு செல்ல வேண்டும். இப்படி செய்வதால் இதயத்தின் அழுத்தம் குறைந்து... வலி குறைய வாய்ப்பிருக்கிறது. அதற்கு முன் பாதிக்கப்பட்டவர் மயங்கிவிட்டால், சி.பி.ஆர்.சிகிச்சை கொடுக்கலாம்.
வலிப்பு நோய் அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்குள் நின்றுவிடும். அந்த சமயத்தில் இரும்பு பொருட்களை கையில் பிடிக்க கொடுப்பதும், அவர்களின் கை–கால்களை அழுத்தி பிடித்து கொள்வதும், தவறான அணுகுமுறை. இந்த இடைபட்ட நேரத்தில் பாதிக்கப்பட்டவர் கல், கம்பம், சுவரில் இடித்து கொள்ளாமல் பார்த்து கொள்வது தான் அதிகபட்ச முதலுதவி. அவர்களின் தாடையை பிடித்து கொண்டால், நாக்கை கடித்து கொள்ளாமல் இருப்பார்கள்’’


0 Comments