முதலமைச்சர் பதவி
என்பது மிக முக்கியமான பதவியாகும்.கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி இன்று மு.கா
வசமாகியுள்ளது.எதிர்வரும் காலங்களில் மு.கா இவ் வாய்ப்பை பெற்றுக்கொள்ளுமா என்பது
சந்தேகமே.எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்களின் கையில் கூட கிழக்கு மாகாண
முதலமைச்சர் பதவி கிடைக்குமா என்பதும் சந்தேகமே.மு.கா இயன்றவரை முயற்சி செய்து இப்
பதவி கொண்டு கிழக்கு மக்களுக்கு எது எதுவெல்லாம் செய்ய முடியுமா அத்தனையையும் இக்
காலப்பகுதியினுள் செய்ய வேண்டும்.
அண்மையில்
கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியாவில் பாரிய தனியார் வைத்தியசாலைகளை இயக்கும்
ருக்மணி மெமொரியல் மருத்துவமனை மற்றும் ருக்மணி தாதிப்பயிற்சிக் கல்லூரியின்
இயக்குனர் மோகன் குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.இதன் போது கிழக்கு
முதலமைச்சர் கிழக்கில் சகல வசதிகளுடன் கூடியதொரு தனியார் மருத்துவமனையை அமைக்க கோரிக்கையும்
விடுத்திருந்தார்.
இலங்கையில் மருத்துவ,சுகாதார
சேவைகள் இலவசமாக வழங்கப்படுபவையாகும்.இதனை தனியார் மயப்படுத்தல் இலங்கை ஏழை
மக்களுக்கு மிகவும் ஆபத்தானதொரு செயல்.அதற்காக தனியார் மருத்துவமனைகள் தேவையில்லை
எனக் கூறவில்லை.அதன் மூலம் வசதி படைத்தோர் சிறந்த பயன்பெற்றுக்கொள்ள முடியும்.இதற்கு
முதலமைச்சர் வழி காட்ட வேண்டிய அவசியமில்லை.சில விடயங்களுக்கு முதலமைச்சரின் உதவி
அவர்களுக்கு தேவைப்படலாம்.இது மக்களுக்கான சேவையாக சித்தரித்து மக்களை கவர முனைவதை
ஒரு போதும் ஏற்க முடியாது.இது தனிப்பட்ட நபர்களின் இலாப நோக்கம்
கொண்டது.இருப்பினும் இவ்வாறான வைத்தியசாலைகள் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு
பெரும் பங்களிப்புச் செய்யும் என்பதை மறுக்கவில்லை.
முதலில் கிழக்கு
முதலமைச்சர் ஏழை மக்களை பார்க்க வேண்டும்.அதற்காகத்தான் மக்கள் இவர்களுக்கு
அரசியல் அதிகாரங்களை வழங்குகிறார்கள்.தற்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மு.கா
வசமுள்ளது.மத்திய சுகாதார பிரதி அமைச்சும் மு.காவிடமுள்ளது.கடந்த முறை சுகாதார
இராஜாங்க அமைச்சும் மு.காவிடமே இருந்தது.இவ் அதிகாரப் பலத்தைக் கொண்டு மு.கா
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு வைத்தியசாலையையாவது
திட்டமிட்டு சகல வசதிகளுடன் கூடியதாக அபிவிருத்தி செய்திருக்கலாம்.இன்று அம்பாறை
மாவட்டத்தில் பூரண வசதிகளுடன் கூடிய ஒரு வைத்திய சாலை கூட இல்லை.குறித்த அபிவிருத்தியுடன்
கூடிய இத்தனை அதிகாரப் பலத்தைக் மு.கா கொண்டிருந்தும் மு.காவினரால் இதனை செய்ய
முடியாதென்றால் எப்போது செய்யப்போகிறார்கள்.
இன்று அம்பாறை
மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் உள்ள வைத்தியசாலை தரத்தின்
அடிப்படையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை,அன்வர் இஸ்மாயில் ஆதார
வைத்தியசாலை,அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஆகிய மூன்று பிரபலமான வைத்தியசாலைகள்
உள்ளன.இவற்றில் மிகவும் பிரபலமாகக் காணப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை
அண்மைக்காலமாக மிகவும் பின்தங்கிச் சென்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.சம்மாந்துறை
வைத்தியசாலையில் குறித்த ஒரு வைத்தியர் மூலம் பிரபலமான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதன்
மூலம் அதன் பெயர் வெளிப்பட்டாலும்,அவ்வாறான செயல்கள் இடம்பெறாவிட்டால் மக்கள்
சம்மாந்துறையில் ஒரு வைத்தியசாலை இருப்பதை எப்போதே மறந்திருப்பார்கள்.
முஸ்லிம்களின்
ஆளுகையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனக் கோருவது
இனவாதமல்ல.இன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பகுதிகளில் காணப்படுகின்ற வைத்தியசாலைகளில்
வசதியின்மை காரணமாக பல விடயங்களுக்கு அம்பாறை வைத்தியசாலைக்கு முஸ்லிம்கள் செல்ல
வேண்டிய நிலை உள்ளது.அங்கு மொழிப்
பிரச்சினை காரணமாக முஸ்லிம் பொது மக்கள் மிகப் பெரும் சவாலை
எதிர்நோக்குகின்றனர்.கல்முனையில் ஆதார வைத்திய சாலை தமிழர் பகுதியில் உள்ளது.இங்கும்
முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.இப்படி இருக்கையில் ஏன் மு.கா
முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு வைத்தியசாலையாவது திட்டமிட்டு அபிவிருத்தி
செய்ய முடியாது.இதற்கான அதிகாரப் பலமும் மு.காவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.பல்லாயிரம்
மக்கள் பயன் பெறும் மூதூர் வைத்தியசாலையின் நிலை மிகவும் பின்தங்கிக்
காணப்படுகின்றமை குறிப்பிடத்தகது.அம்பாறை வைத்தியசாலை மிகக் குறுகிய
காலப்பகுதியிலேயே மிகப் பெரும் வளர்ச்சியைக் கண்டமையை மு.கா முன்னுதாரனமாக கொள்ள
வேண்டும்.
துறையூர் ஏ.கே
மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
0 Comments