சந்தையில் பலநூற்றுக்கணக்கான ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்குள்ளன. அதே போல் அடிக்கடி புதுப்புது மாதிரிகள் வாராந்தம் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஆனால் அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் வரிசை ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தும் போது பலரிடையே ஒரு வித ஆர்வம் தொற்றிக்கொள்கின்றமை வழமை.
மற்றைய ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களைப் போல அடிக்கடி ஸ்மார்ட் போன்களை அப்பிள் அறிமுகப்படுத்தாமை, நிறுவனம் என்ற ரீதியில் அப்பிள் கட்டியெழுப்பியுள்ள நற்பெயர், புத்துருவாக்கம் மற்றும் பாவனையாளர்களிடையே அப்பிள் உருவாக்கியுள்ள நம்பிக்கை போன்றன இதன் பிரதான காரணங்களாகும்.
பொதுவாக அப்பிளின் ஐபோன்கள் கொண்டிருக்கும் தொழில்நுட்ப அம்சங்களில் பலவற்றை மற்றைய நிறுவனங்கள் முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தாலும், அப்பிள் என்றவுடன் அனைவரும் வாயைப் பிளக்க வைப்பது மேலே கூறப்பட்டுள்ள காரணங்கள் மற்றும் அந்நிறுவனம் சந்தையில் நிலை நிறுத்தி வைத்துள்ள இடமுமாகும்.
இந்நிலையில் ஐபோன் வரிசையின் அடுத்த வெளியீடுகளான ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகியன நேற்று சென் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னரே எதிர்ப்பார்க்கப்பட்ட தைப் போல பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியவாறு வெளியாகியுள்ளது ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்.
வேகமான புரசசர் , நீண்ட நேரம் நிலைக்கும் மின்கலம் மற்றும் சிறப்பான கெமரா என பல்வேறு அம்சங்களைப் கொண்டுள்ளதாக அப்பிள் கூறுகின்றது.
ஐபோன்7 ஆனது 4.70 அங்குல (750x1334 pixels) திரையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஐபோன்7 பிளஸ் 5.50 அங்குல (1080x1920 pixels) திரையைக் கொண்டுள்ளது.
இவை இரண்டும் முறையே 12 மெகாபிக்ஸல் பின்புற கெமரா மற்றும் 7 மெகாபிக்ஸல் முன் கெமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
நீர் , தூசியிலிருந்து பாதுகாப்பு , அழுத்தத்தின் அளவிற்கு ஏற்ப மாறுபட்ட செயற்பாடுகளைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட ‘ஹோம் பட்டன்’ , ஸ்டீரியோ ஸ்பீக்கர் ஆகியன முதற்தடவையாக ஐபோன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் ஐபோன் 7 இல் ஹெட்போன்களுக்கான 3.5mm ஜெக் ஐ கொண்டிருக்காது மாறாக முன்னைய மாதிரி சார்ஜிங் வசதிக்காக கொண்டிருந்த லைட்னிங் போர்ட்டை பயன்படுத்தி ஒரு எடப்டர் உதவியுடன் உங்களுக்கு பிடித்த ஹெட்போன்களை பொருத்தி உபயோகிக்க முடியும்.
இதற்கான அடப்படரை அப்பிளே வழங்குகின்றது. அதேபோல் லைட்னிங் இயர்பொட் ஒன்றையும் அப்பிள் , ஐபோன்7 உடன் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை லைட்னிங் போர்ட்டில் பொருத்தி உபயோகித்துக்கொள்ள முடியும். இதை நீங்கள் விரும்பாவிடின் வயர் அற்ற புளூடூத் ஹெட்போன்கள் அல்லது வயர் அற்ற இலகுவாக காதில் பொருத்திக்கொள்ளக்கூடிய ‘எயார் பொட்’ ஐ அப்பிள் வழங்கவுள்ளது ஆனால் இலவசமாகவல்ல , அதன் விலை 159 அமெரிக்க டொலர்களாகும்.
‘எயார் பொட்’ நேற்றைய நிகழ்விலேயே அறிமுகப்படுத்தப்பட்ட து.
இதேபோல் ஐபோன் 7 பிளஸ் ஆனது 12 மெகாபிக்ஸல் இரட்டைக் கெமராக்களைக் கொண்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று வைட்-ஏங்கல் லென்ஸையும் மற்றையும் டெலிபோடோ லென்ஸையும் கொண்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
2x ஒப்டிகள் ஸூம், 10x டிஜிட்டல் ஸூம், தெளிவான நிறங்கள் , வேகமான செயற்பாடு ஆகியன இக்கெமராவின் சிறப்பம்சங்கள் என அப்பிள் தெரிவிக்கின்றன. இரட்டைக் கெமராவைக் கொண்ட ஸ்மார்ட் போன்கள் ஏற்கனவே சந்தையில் உள்ளன என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்றாகும்.
அதுபோல இது 7 மெகாபிக்ஸல் பேஸ்டைம் எச்.டி கெமரா (செல்பி) வையும் கொண்டுள்ளது. இது சிறப்பான செல்பிகளுக்காக இது auto image stabilisation ஐ கொண்ட தென அப்பிள் தெரிவிக்கின்றது.
ஐபோன் 7 ஆனது புதிய வைடர் லென்ஸுடன் கூடிய கெமராவைக் கொண்டுள்ளது.
ஐபோன் 7 இன் ஆரம்ப விலை 649 அமெரிக்க டொலர்களாகும் சில்வர், கோல்ட், ரோஸ் கோல்ட், பிளக் மற்றும் ‘ஜெட்’ பிளக் நிறங்களில் கிடைக்கவுள்ளது. மேலும் ஐபோன்7 பிளஸ் இன் விலை 769 அமெரிக்க டொலர்களாகும்.
இவை இரண்டும் 256 ஜிபி வரையான மெமரி வசதிகளுடன் கிடைக்கவுள்ளது.
நேற்றைய நிகழ்வில் அப்பிளின் இயங்குதளமான ஐஓஎஸ் இன் அடுத்த தொகுப்பான ‘iOS 10’ , அப்பிளின் ஸ்மார்ட் கடிகாரங்களின் அடுத்த வெளியீடு, அப்பிள் பே உட்பட பலவற்றை அறிமுகப்படுத்தியிருந்தது.
0 Comments