Subscribe Us

மும்பையை கலக்கும் அதிசய ஆட்டோ



ரஞ்சித் சிங்கின் ‘வண்டி’யில் சவாரி செல்பவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. வை–பை வசதி, செல்போன்– லேப்டாப்பை ‘சார்ஜ்’ செய்ய ‘பின்’கள், ஒரு சிறு பெட்டியில் மிட்டாய்– சூயிங்கம்கள், பிளாஸ்க்கில் குளிர்ந்த தண்ணீர், பாடல்கள்– படங்களுடன் ஒளிரும் பிளாட் ஸ்கிரீன் டி.வி., டிஸ்யூ பேப்பர்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள், சிறு நோட் பேடு, பேனா... கொஞ்சம் பொறுங்கள், மற்றவற்றையும் சொல்லிவிடுகிறோம். மூன்று சிறுவிசிறிகள், ஒரு தீயணைப்பான், பல் குத்தும் குச்சிகள், காதடைப்பான்கள், ஒரு குப்பைக் கூடை... இவ்வளவு வசதியும் அதில் இருக்கிறது. ஆனால் அது ஒரு ஆட்டோதான்.

இந்த வசதிகளுக்காக அவர் கூடுதல் கட்டணம் எதுவும் வாங்குவது இல்லை. ரஞ்சித் சிங்கின் ஆட்டோவில் ஏறும் அனைவரும் இந்த வசதிகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மும்பை புறநகர்ப் பகுதியில் இந்த அதிசய ஆட்டோவுடன் வலம் வரும் ரஞ்சித் சிங், ‘‘ஆம், இவையெல்லாம் பயணிகளுக்காகத்தான்’’ என்கிறார் புன்னகை முகமாய்.

30 வயது ரஞ்சித் சிங்கின் பேச்சில் கொஞ்சம் பீகார் வாடை அடிக்கிறது. இவர் பீகாரைச் சேர்ந்தவர்தான்.

ஆட்டோவில் இவ்வளவு வசதிகள் இருந்தாலும் தான் எதையும் பயன்படுத்துவதில்லை, பயணிகளை ஏற்றி இறக்குவதிலேயே தனக்கு சந்தோஷம். அதில் பசி, தாகம் கூட எடுப்பதில்லை என்கிறார் ரஞ்சித் சிங்.

இவரது பேச்சில் சினிமாத் தனம் வீசுகிறது. அதற்கும் ஒரு பின்னணி இருக்கவே செய்கிறது.

பீகார் மாநிலம் சமஷ்டிப்பூரைச் சேர்ந்த ரஞ்சித் சிங், தனது அண்ணனைப் பின்பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வந்தார். அங்கு டெலி விஷன் நிகழ்ச்சி தயாரிப்பு குழுவில் இணைந்த  அவர், உடையலங்காரம் மற்றும் ஒப்பனை உதவியாளராக சில காலம் வேலை பார்த்தார்.

பின்னர்தான் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார். ஆனால் அது வாடகை ஆட்டோதான். குறிப்பிட்ட நேரம் வரைதான் இவர் அந்த ஆட்டோவை ஓட்ட முடியும். பின்னர் வேறொரு டிரைவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

‘‘பயணிகளை ஏற்ற மறுப்பதே எனக்குப் பிடிக்காது. ஆனால் எனது ‘ஷிப்ட்’ முடியும் நேரத்தில் ஆட்டோவை அழைப்பவர்களை மறுக்க வேண்டியிருந்தது எனக்கு வருத்தம் அளித்தது’’ என்று கூறும் ரஞ்சித் சிங், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சொந்த ஆட்டோ வாங்கியிருக்கிறார். அன்று முதல் இன்று வரை ஒரு பயணியைக் கூட ஏற்ற மறுத்ததில்லையாம்.

‘அதிநவீன சொகுசு ஆட்டோ’ என்று தனது ஆட்டோவைப் பற்றிக் கூறும் ரஞ்சித் சிங், வாரத்தின் ஏழு நாட்களும் ஆட்டோ ஓட்டு கிறார். மாலை 4 மணிக்கு தனது ஜூகு வீட்டில் இருந்து புறப்படும் ரஞ்சித் சிங், விடியவிடிய ஆட்டோ ராஜாவாய் வலம் வருகிறார். 

‘‘எனது ஆட்டோவுக்குள் அழகழகாய் விளக்குகளையும் பொருத்தியிருக்கிறேன். இரவு நேரங்களில் என் ஆட்டோ ரதம்போல் ஜொலிக்கும்’’ என்று பெருமிதத்தோடு சொல்கிறார்.

இவரது ஆட்டோ அலங்காரம், ஆடம்பரமாகத் தெரிந்தாலும், பயணிகளுக்கான ஒவ்வொரு வசதியையும் பார்த்துப் பார்த்துத்தான் செய்திருக்கிறார் என்பது புரிகிறது.

உதாரணத்துக்கு, தனது ஆட்டோவில் பயணிக்கும் ஒரு பயணி, செல்போனில் பேசும்போது ஒரு முகவரியையோ, போன் எண்ணையோ குறித்துக்கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் போனை ‘ஹோல்டில்’ போட்டுவிட்டு அவற்றைப் பதிவு செய்வதைவிட, நோட் பேடில் குறித்துக்கொள்வது எளிதாக இருக்கும் அல்லவா என்கிறார்.

பயணிகளுக்கு போரடிக்கக் கூடாது என்பதற்காகத்தான் டி.வி., நாளிதழ்கள், பத்திரிகைகளை வைத்திருப்பதாகக் கூறும் ரஞ்சித் சிங், இரவில் நேரந்தாழ்ந்து ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு தனது ஆட்டோவில் உள்ள செல்போன் சார்ஜ் வசதி பெரிதும் கைகொடுப்பதாகச் சொல்கிறார்.

ஆட்டோவில் இவ்வளவு வசதிகளை ஏற்படுத்துவதற்கு தனக்கு ஒரு லட்ச ரூபாய் செலவானதாகக் கூறும் ரஞ்சித் சிங், ஆனால் அதையும் விடப் பெரிய விஷயம் இவற்றைப் பராமரிப்பதும், பாதுகாப்பதும்தான் என்கிறார். 

‘‘எனது ஆட்டோவில் உள்ள மிட்டாய் டப்பாவை நிரப்ப மட்டும் நான் தினமும் 50 ரூபாய் செலவு செய்கிறேன. சிறு சிறு பொருட்களை சில பயணிகள் தங்கள் பாக்கெட்டுகளில் போட்டுச் சென்றுவிடுவதும் நடக்கிறது’’ என்கிறார்.

ஆனால் இதனால் எல்லாம் ரஞ்சித் சிங் தனது தனி வழியில் இருந்து தடம் மாறுவதாயில்லை. அதனால்தான் இவர் பலருக்கு ‘குடும்ப ஆட்டோக்காரராகவே’ ஆகிவிட்டார். 

பல டி.வி. நடிகர், நடிகையரும் ரஞ்சித் சிங்குக்கு நட்பாக இருக்கிறார்கள். இவரது ஆட்டோவைக் கடந்து செல்லும் பி.எம்டபிள்யூக்கள், மெர்சிடிஸ் பென்ஸ்களின் டிரைவர்கள், ஜன்னல் கண்ணாடியை இறக்கி கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்துச் செல்கிறார்கள்.

ரஞ்சித் சிங் குறித்துப் பெருமைப்படும் ஆட்டோக்காரர்கள் இருக்கிறார்கள், பொறாமைப்படும் ஆட்டோக்காரர்கள் இருக்கிறார்கள், இவ்வளவு வசதிகளை கொடுக்கிறார் என்றால் இவர் நிச்சயம் மீட்டரில் ‘சூடு’ வைத்திருப்பார் என்று சந்தேகப் படும் பயணிகளும் இருக்கிறார்கள்.

‘‘சத்தியமாக நான் மீட்டரில் எந்த தில்லுமுல்லுவும் செய்யவில்லை. வழக்கமான கட்டணத்தைத்தான் வசூலிக்கிறேன். ஆனால் எனது ஆட்டோ பயணத்தில் மகிழ்ந்தவர்கள் நூறு ரூபாய் வரை அதிகம் தருவதும் உண்டு’’ என்பது ரஞ்சித் சிங் சொல்லும் தகவல்.

ரஞ்சித் சிங்கின் ஆட்டோவில் புதிதாக ஏறுபவர்கள் இந்த சவுகரியங்களை பற்றி அவரிடம் புகழ்ந்து பேசுகிறார்கள்.

‘‘நான் எல்லா வகையான ஆட் களையும் சந்தித்து இருக்கிறேன். ‘உன்னோட ஆட்டோவில உட்கார்ந்தவுடனே எல்லா கவலையும் பறந்து போயிடுச்சுப்பா’ என்று சொன்னவர்களும் உண்டு. சிலர் நான் வண்டி ஓட்டிக்கொண்டு போகும்போது நிறுத்தி, செல்பி அல்லது வீடியோ மட்டும் எடுத்துக்கொண்டு அனுப்புவார்கள். சிக்னல்களிலும் நான் கவனிக்கப்படுவேன். மற்ற ஆட்டோ டிரைவர்கள் குறுகுறுவென்று பார்ப்பார்கள், சிலர் விசாரிப்பார்கள், சிலர் பாராட்டிச் செல்வார்கள், சிலர் இறங்கிவந்து கைகொடுப்பார்கள். இதனால் எல்லாம் நான் ஒரு நட்சத்திர டிரைவர் போல நினைத்துக்கொள்வதில்லை. சில சமயங்களில் கூச்சமாகக் கூட இருக்கும். எனவே, அக்கம்பக்கம் திரும்பாமல் நேரே பார்த்தபடி இருப்பேன்.’’

தனது அட்டகாச ஆட்டோவால் ரஞ்சித் சிங் எந்த அளவு புகழ்பெற்றிருக்கிறார் என்றால், சமீபத்தில் பிரபல கல்வி நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் பேச இவர் அழைக்கப்பட்டிருக்கிறார். அங்கும் அலட்டிக்கொள்ளாமல் சென்று பேசிவிட்டு வந்திருக்கிறார்.

Post a Comment

0 Comments