Mohamed Nizous
OPD போலினிலே
ஒவ்வொன்றாய் நகர
கூப்பிடும் கங்காணி
கோமகனாய் மாற
நாட்பட்ட நோய்காரர்
நர்ஸ் கண்டு நெளிய
சாப்பாடு தண்ணியின்றி
சனம் வாடி நிற்பார்.
இடையிலே கங்காணி
கடை நோக்கிப் போக
நடையிலே பின்னாலே
நாலு பேர் சென்று
உடனடியாய் நட்பாகி
உள் கையில் பொத்த
அடடா அவர்களை
அவசரமாய் அழைப்பார்.
உள்ளே வைத்தியர்
உட்கார்ந்து இருப்பார்
சொல்லுகின்ற நோய்களை
சுவையின்றிக் கேட்பார்
பொல்லாத கையெழுத்தில்
புத்தகத்தில் கிறுக்கி
செல்லுமாறு சொல்வார்
சிரிக்க ஊசி போடனும்.
அப்பாலே கங்காணி
ஆடர்கள் போடுவார்
அப்பாவி எனத் தெரிந்தால்
அதட்டலுடன் பேசுவார்
எப்படியோ வெளிவந்து
இன்னுமொரு போலினில்
அப்படியே நிற்கணும்
அது மருந்துக் கவுண்டர்.
குளிக்காத நபர் போன்று
கூண்டுக்குள் நிற்பவர்
குளிசைகள் தருவார்
குனிந்த தலை நிமிரார்
பழசான பக்கட்களில்
பரபரண்ணு எழுதியது
களிசணுக்கே விளங்காது
கச்சைக்கு விளங்குமா?
எல்லா இடங்களிலும்
இந்த நிலையல்ல
நல்ல வைத்தியர்கள்
நட்பான கங்காணிகள்
உள்ளத்தால் சேவை செய்யும்
உண்மையான மற்றவர்கள்
உள்ளனர் என்கின்ற
உண்மையை மறுப்பதற்கில்லை.


0 Comments