ஸ்ரீலங்காவின் உள்ளக நிர்வாகம் மற்றும் நீதிக் கட்டமைப்புக்குள் எந்தவொரு வெளிநாட்டு நீதிமன்றகளையோ நீதிபதிகளையோ அல்லது நிறுவனங்களையோ அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
70 ஆவது தேசிய உபசம்பத விநாயகர்ம நிகழ்வு பாணந்துறையிலுள்ள நகர மண்டப விளையாட்டரங்கில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
யுத்த காலப்பகுதியில் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக வெளிநாட்டு இராணுவ நீதிமன்றங்களை அமைத்தல் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவருதல் தொடர்பில் பல்வேறு இடங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எனினும் நாட்டின் சுதந்திரம், சுயாதீனம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு சவால்விடுக்கும் எந்தவொரு தேசிய அல்லது சர்வதேச செயற்பாடுகளை தாம் அனுமதிக்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு செயற்பாடுகளிலும் மதிப்பிற்குரிய மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் படியே செயற்படுவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தன் என்ற வகையிலும் நாட்டின் தலைவர் என்ற வகையிலும் பெருமைமிக்க வரலாறு மதிப்பளிப்பதன் ஊடாக ஸ்ரீலங்கா சமூகத்தினரை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு மதிப்புக்குரிய இடத்தை வழங்குவதாகவும் அதனை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் மகா சங்கத்தினருக்கு உறுதி அளிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளடங்கலாக பௌத்த மதத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments