Subscribe Us

'நாங்கள் அனைவரும் ஒசாமா' அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் பின்லேடன் மகன் ஹம்ஸா பின்லேடன் சபதம்


'நாங்கள் அனைவரும் ஒசாமா' அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் என்று பின்லேடன் மகன் சபதமிட்டு உள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் 110-மாடி இரட்டை கோபுரத்தின் மீதும் விமானங்களை மோதி கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை மூளையாக இருந்து செயல்படுத்தியவர் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன். இந்த பின்லேடன் பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி, அமெரிக்க ராணுவம் ”ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்து கொன்றது.

அமெரிக்கா, ஒசாமா பின்லேடனை தேடியபோதே அவர் இருந்த இடம் பாகிஸ்தானுக்கு தெரியும், ஆனால் பயங்கரவாதத்தை வளர்த்து விடும் அந்நாடு பாதுகாப்பு அளித்தது தெரியவந்தது.

இந்நிலையில் ஒசாமா பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் என அவரது மகன் சபதமேற்கும் ஆடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.ஐ.டி.இ. புலனாய்வு குழு தகவலின்படி சுமார் 21 நிமிடங்கள் ஓடும் 'நாங்கள் அனைவரும் ஒசாமா' என்று தலைப்பிடப்பட்ட ஆடியோ செய்தியில் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்ஸா பின்லேடன் உலகத்தில் உள்ள பயங்கரவாத குழுக்கள் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக போராடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
 
சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஹம்ஸா பின்லேடன், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், ஏமன், சோமாலியா மற்றும் உங்களது (அமெரிக்கா) சித்தாந்தத்தை ஏற்கமறுக்கும் இதர முஸ்லிம் நாடுகள்மீது நீங்கள் செலுத்திவரும் அடக்குமுறைக்காக உங்களை (அமெரிக்க மக்கள்) அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் தாக்குதல் நடத்தி பேரழிவை உண்டாக்குவோம். இது, ஒசாமா என்ற தனிமனிதருக்காக நடத்தப்படும் தாக்குதல் அல்ல, இஸ்லாமை பாதுகாக்க நினைத்து உயிர்நீத்த அனைவரின் சார்பிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளான் என்று தாம்சன் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அப்போட்டாபாத்தில் மீட்கப்பட்ட ஆவணங்களை அமெரிக்கா வெளிட்டது. அதில் பின்லேடனின் உதவியாளர்கள் ஹம்ஸாவை கொண்டு பயங்கரவாத இயக்கத்தை ஒன்றிணைக்க முயற்சித்தனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் இப்போதைய தலைவர் அய்மன்-அல்-ஜவாஹிரியால் ஆடியோ செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதம் உலகம் அதிர்ச்சியில் உறைந்து உள்ளநிலையில், முதியவர்களை கொண்டு உள்ள பயங்கரவாத அமைப்பிற்கு ஹம்ஸாவை கொண்டு இளைய குரல் கொடுக்கப்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments