Subscribe Us

இளம் மீன்களுக்கு சுறாக்கள் இணையத்தில் வலைவீசுகின்றன



ன்றைய இளந்தலைமுறையினர் வாய் திறந்துவிட்டால் வாட்ஸ்அப், பேஸ்புக் பற்றித்தான் பேசுகிறார்கள். ‘தான் பேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்துவதில்லை’ என்று யாராலும் துணிச்சலாக சொல்ல முடிவதில்லை. அப்படிச் சொன்னால் ‘பட்டிக்காடு, நீயெல்லாம் வேஸ்ட்டு’ என்று பரிகாசம் செய்யப்படுவார்கள். ‘உனக்கு ஒண்ணுமே தெரியாது’ என்று ஒதுக்கப்பட்டுவிடுவார்கள்.

அப்படி ஒதுக்கிவைத்துவிடக்கூடாது என்ற எண்ணத்திலும், அதில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்ற ஆசையிலும் சமூக வலைத்தளங்களுக்குள் சாரைசாரையாய் மக்கள் அடைக்கலமாகிக் கொண்டிருக் கிறார்கள். அதில் ‘எனக்கும் எல்லாம் தெரியும்’ என்று காட்டிக் கொள்ள நினைக்கும் மேதாவிகள் பலர். இளம் மீன்களுக்கு வலைவீசும் சுறாக்கள் சிலர்.

அரிப்பு எடுத்தால் சொறியாமல் இருக்க முடியாததை போல, கையில் போனை வைத்துக் கொண்டு இணையத்துக்குள் போகாமல் இருக்க முடியாது. அங்கே நம் நட்புகள் அனுபவிக்கும் ஜாலியை நாமும் கொஞ்சம் அனுபவிப்போமே என்று நுழைந்து, அதன் ஆட்டம் புரியாமல் ஆபத்தில் சிக்கிக்கொள்பவர்கள் அனேகம். இதற்கு ஏராளமான உதாரணங்கள் நம்முன் கொட்டிக் கிடக்கின்றன. 

ஆண்களை விட பெண்களுக்கு நேரடியான ஆபத்துகள் அதிகம். அதற்கு சரியான சமீபத்திய உதாரணம் சேலம் வினுப்பிரியா. பேஸ்புக்கில் பரவிய ஆபாச புனைவு படம் அவரது உயிரையே பறித்துவிட்டது.

இணையம் என்றால் இன்பம் மட்டுமல்ல, இன்னல்களும் மிகுந்தவை என்பதையே ஒவ்வொரு சம்பவங்களும் நினைவுபடுத்துகின்றன. காரணம் இணையத்தில் உலாவரும் எல்லோருக்கும், கணினி மற்றும் இணையம் பற்றிய பூரண தெளிவோ, பாதுகாப்பு அம்சங்களோ தெரியாததுதான். 

‘தெரிந்தவர்களுடன் நட்பு வைக்கப்போகிறோம், அரட்டையடிப்போம், ஜாலியாக டைம் பாஸ் பண்ணுவோம்... இதில் என்ன வந்து விடப்போகிறது’ என்ற அசட்டுத்தனம் கொண்டவர்கள் அதிகம். இந்த அலட்சியம் அவர்களை அறியாமலேயே இம்சைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. ஏனெனில் மேலோட்டமான புரிதலுடன் இணையத்தில் புகுந்துவிட்டு, அதில் காத்திருக்கும் ஆபத்துகளுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.

எனவே தேவை கருதியோ, பொழுதுபோக்கிற்காகவோ பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கான சில யோசனைகளை பார்க்கலாம்...

* பாஸ்வேர்டு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். பேஸ்புக் கணக்கு, கணினி என எல்லாவற்றுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* கணக்கு தொடங்கும்போதே நண்பர்களுக்கு மட்டுமே உங்கள் கணக்கு தெரியும்படி ‘செட்டிங்ஸ்’ செய்யலாம். பேஸ்புக் வழங்கும் நுணுக்கமான ‘செட்டிங்’ முறைகளை விவரமான தோழிகளிடம் கேட்டறிந்து பயன்படுத்தலாம்.

* அவசியம் இல்லாமல் முழுமையான வீட்டு முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட சொந்த விவரங்களை பதிய வேண்டாம்.

* மறக்காமல் கணக்கை ‘லாக் அவுட்’ செய்து வெளியேறவும். லாக் அவுட் செய்யாமல் வேறு பணிகளில் ஈடுபட்டால்கூட நீங்கள் செய்யும் பணிகளை பிரச்சினைக்குரியவர்கள் வேவு பார்க்கும் வாய்ப்பு உள்ளது.

*  நண்பர்களின் கணினியிலோ அல்லது பிரவுசிங் சென்டர் போன்ற வெளியிடங்களிலோ பேஸ்புக், ஜிமெயில் போன்ற இணைய கணக்குகளை பயன்படுத்தும் முன் ‘சேப் பிரவுசிங்’ உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த தெரிய வேண்டும்.

* பேஸ்புக் நட்புறவு ஏற்படுத்தும் தளமாக இருந்தாலும் முன்பின் தெரியாதவர்களை, ‘பிரண்ட்’ ஆக ஏற்கும் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஏனெனில் பெண் பெயரில் கணக்குத் தொடங்கி ஏமாற்றுபவர்கள்கூட இருக்கிறார்கள்.

* ஆபாச இணையங்கள், அறிமுகமற்ற இணையதளங்களின் லிங்குகள் ஆகியவற்றை கவனமின்றி கிளிக் செய்யக்கூடாது.

* பதிவுகளை வெளியிடும்போது மற்ற தனிநபர்களைப் பற்றிய விமர்சனங்கள், பொதுவான கருத்துகள் என கண்டவற்றையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் எல்லா கருத்துகளுக்கும் ஆதரவு மற்றும் எதிர் கருத்து உடையவர்களும் இருப்பார்கள், அவர்களால் சர்ச்சை ஏற்படவும், நட்பு ஏற்பட்டு பின்பு தொல்லைகள் வரவும் வாய்ப்பு உள்ளது.

*தேவையில்லாமல் யாராவது மெசேஜ் அனுப்பிக் கொண்டோ, உங்கள் பதிவுகளில் மூக்கை நுழைத்து வந்தாலோ அவர்களை தடுத்து நிறுத்த ‘பிளாக்’ (தீறீஷீநீளீ) ஆப்சனை பயன்படுத்தலாம். ‘அன்பிரண்ட்’ ஆப்சனை விட ‘பிளாக்’ ஆப்சன்தான் தொல்லை தருபவர்களை தடுக்கும் சரியான வழி.



* அழகு அழகாக புகைப்படங்களை எடுத்து அடிக்கடி பதிவு செய்ய வேண்டாம். குறிப்பாக முகம் மற்றும் அங்கங்கள் பளிச்சென்று தெரியும் தனி புகைப்படங்களை பதிவு செய்வதை தவிர்க்கலாம். தேவைப்பட்டால் தோழிகள், நண்பர்கள், உறவினர்களுடன் குழுவாக எடுத்துக் கொண்ட படங்களை வெளியிட்டு மகிழலாம். தனியாகவோ, ஜோடியாகவோ இருக்கும் படங்கள் எளிதில் மார்பிங் செய்து வெளியிடப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* போட்டோக்களை பதிவிடும்போது பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களைக் கையாண்டு உங்களுடைய நண்பர் குழுவுக்கு மட்டும் தெரியும்படி செய்யலாம்.

* கணக்கை நிரந்தரமாக மூட விரும்பினால் ‘ஹெல்ப்’ என்ற ஆப்சனில் சென்று ‘அக்கவுண்ட் டெலிட்’ என்பதை சொடுக்க வேண்டும். இப்படிச் செய்தபிறகு 15 நாட்களுக்கு நமது கணக்கை திறக்காமல் இருந்தால் கணக்கு நீக்கப் பட்டுவிடும்.

எல்லோரும் மகிழ்ச்சியென்று வலைத்தளங்களில் மூழ்கியிருக்கும்போது,  நீங்கள் மட்டும் கொஞ்சம் ஒதுங்கியிருப்பது சிரமமான காரியம்தான். ஆனால் கண்ணுக்குத் தெரியாத வலையாக விரிந்து கிடக்கும் வலைத்தளத்தில் நீங்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது. 

ஒருவேளை ஆபத்தை உணராமல் சிக்கிக்கொண்டாலும்,  அடுத்தவர்கள் பழிவாங்க உங்களை போலி ஆபாச படமாக புனைந்தாலும் அதற்கு உயிரை விலையாக கொடுக்கவேண்டியதில்லை. புகார் கொடுக்கலாம்! போராடலாம்!!  உண்மையை ஏற்றுக்கொள்ள இந்த உலகம் தயாராக இருக்கிறது. குற்றவாளிகளால் ஒருபோதும் தப்ப முடியாது.

ஒருதலைக் காதல் :   தப்பிக்க வழி சொல்லும் ஆய்வு

இளமையில் இனிமை தருவது காதல். இளம் பெண்களுக்கு எமனாய் அமைந்துவிடுவது ஒருதலைக் காதல். நிஜத்தில் காதலை ஏற்பதைவிட, காதலை மறுக்கத்தான் நிறைய துணிச்சல் தேவைப்படுகிறது. துணிச்சலுடன் சாதுரியமும், சாமர்த்தியமும் கலந்து செயல்படுவது அவசியம். அப்படி இல்லாமல், ‘அவன் நம் பின்னால் வரவே கூடாது’ என்று கண்மூடித்தனமாக பேசும் வார்த்தைகளை பெண்கள் தவிர்க்க வேண்டும்.

ஆணின், ‘ஈகோ’வைத் தூண்டும் வகையில் கடுமையாகப் பேசுவது, ‘உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்’ என்று சவால் விடுவது, தெரிந்த தோழன் அல்லது பெற்றோர் துணை கொண்டு மிரட்டுவது என்று செயல்படுவது காதல் மறுக்கப்பட்டவரின் கோபத்தை தூண்டுகிறது. பெண் புறக்   கணிக்கும்போதும், மிரட்டும்போதும் ‘எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்ற கொடூர எண்ணம் ஒரு சில ஆண்களிடம் தலைதூக்குகிறது.

எனவே காதலை மறுக்க துணிவுடன், கனிவு தேவை. சாதகமான சூழல் வரும்வரை கனிவுடன் காத்திருக்க வேண்டும். ‘உங்கள் அன்பை புரிந்து கொள்கிறேன், ஆனால் சூழல் ஒத்துழைக்குமா என தெரியவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என ஒத்திப் போடலாம். மாறாக, ‘ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்க மாட்ட’, ‘உன் தகுதி என்ன? என் தகுதி என்ன?’ ‘உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது’, ‘உன் மூஞ்சிக்கெல்லாம் லவ் கேட்குதா?’ என்பதுபோன்ற கடுஞ்சொற்களை வீசக்கூடாது.

ஆய்வு ஒன்றில், 26 சதவீதம் பெண்கள், ஒரே ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி காதலை முறித்துக் கொண்டதாக கூறி உள்ளார்கள். இப்படிச் செய்வது ஒரு சில ஆண்களை கோபமடைய வைக்கிறது என்றும் ஆய்வு சொல்கிறது. உடனே தொடர்ந்து போன் அழைப்பு செய்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள். பெண்கள் எதற்கும் சட்டை செய்யாமல் முற்றிலுமாக ஒதுக்கும்போது ஆணின் மனதில் பழிவாங்கும் எண்ணம் மேலிடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே எடுத்த எடுப்பிலேயே ஒருவரை முற்றிலும் புறக்கணிப்பதைவிட மெல்ல மெல்ல அவரை விட்டு விலகுவதே சரியான முடிவு. 

இதற்காக ஆணிடம் பேசும்போது, ‘என்மீது யாரும் இவ்வளவு அன்பைப் பொழிந்ததில்லை. காலம் கனிந்தால் உங்கள் அன்பை ஏற்கிறேன். இல்லையென்றால் நாம் என்றும் நட்புடனே இருக்கலாம். இதற்குமேல் என்னை வற்புறுத்த வேண்டாம்’ என நாசூக்காக மறுக்கலாம். 

பின்னர் அவரை புறக்கணிப்பது தெரியாமலே மெல்ல பேச்சு வழக்கை குறைக்க வேண்டும். சந்திப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கான காரணங்கள் அவர் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒதுக்குவதை உணர்ந்து உங்கள் மீது வெறுப்பும், வெறித்தனமும் காட்டக்கூடும்.

‘வீட்டில் உங்களுடன் பழகுவது தெரிந்ததால் அதிகம் கட்டுப்பாடு விதிக்கிறார்கள், எனவே பழகுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்வோம். பேச வாய்ப்பு கிடைத்தால் நானே அழைக்கிறேன்’ என்று மெல்ல விலக முயற்சிக்கலாம்.

காதலை தள்ளிப்போடுவதும், பக்குவமாக பேசிப் பயணிப்பதும் கல்யாணம் வரை சாத்தியமாகலாம். திருமணம் முடிவாகும் சமயத்தில், ‘எனக்கொரு முடிவு சொல்’ என்று ஆண் தீவிரமாகலாம். அப்போது அவரிடம் பேசிப் புரிய வைக்க முடியுமா? எனப் பாருங்கள். ‘தன்னைவிட சிறந்த துணை உங்களுக்கு கிடைப்பாள்’ என நம்பிக்கையூட்டும் விதமாக பேசுங்கள். ஆண் அதற்கு மசிபவராக இல்லாவிட்டால் பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியை நாடி, அவரிடம் இருந்து விலக முயற்சிக்க வேண்டும். தேவைப்பட்டால் காவல்துறையின் உதவியையும் நாடலாம்.

ஆணின் தீவிரத்தை நீங்கள் மனதால் எளிதில் எடை போட்டுவிட்டால், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். பெற்றோரிடம் சொல்லி வைப்பது, தோழியுடன் பாதுகாப்பாக சென்றுவருவது, தற்காப்பு நடவடிக்கைகளுடன் தயாராக இருப்பது என எச்சரிக்கையாய் செயல்படலாம். 

ஆக மொத்தத்தில் ஒருதலைக் காதலில் இருந்து ஆபத்தில்லாமல் தப்புவது உங்கள் சாமர்த்தியத்தில்தான் உள்ளது. அஜாக்கிரதையாய் இருந்தால் ஆபத்துதான்!

Post a Comment

0 Comments