Subscribe Us

header ads

அமெரிக்காவில் நடந்த பேரணியில் தாக்குதல் 5 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை 6 பேர் படுகாயம்



அமெரிக்காவில் போலீஸ் வன்செயலுக்கு எதிராக நடந்த பேரணியில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 5 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

2 கருப்பர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்க நாட்டில் கருப்பினத்தை சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், வெள்ளை இன போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்படும் சம்பவங்களும், சுட்டுக்கொல்லப்படும் சம்பவங் களும் அதிகரித்து வருகின்றன.

கடந்த 5–ந் தேதி லூசியானா மாகாணத்தில் பேட்டன்ரூஜ் நகரில் ஆல்டன் ஸ்டெர்லிங் (வயது 37) என்ற கருப்பர், வெள்ளை இன போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மறுநாள் (6–ந் தேதி) மின்னசோட்டா மாகாணத்தில் செயிண்ட் பால் என்ற இடத்தில் பிலாந்தோ காஸ்டைல் என்ற கருப்பரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்விரு சம்பவங்களும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகள் தேசிய அளவில் விவாதங்களுக்கு வழிவகுத்து விட்டன.

ஒபாமா கண்டிப்பு

இந்த சம்பவங்களை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டித்துள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘கருப்பின அமெரிக்கர்கள் அடிக்கடி போலீசாரால் கொல்லப்படுவதற்கு, நியாயமான எண்ணங்களை கொண்ட அனைவரும் கவலைப்பட வேண்டும். இத்தகைய பாரபட்ச மனநிலையை போலீசார் வேரடி மண்ணாக விட்டொழிக்க வேண்டும்’’ என கூறினார்.

இன்னொருபக்கம் ஆல்டன் ஸ்டெர்லிங், பிலாந்தோ காஸ்டைல் ஆகிய இரு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டல்லாஸ் பேரணியில் தாக்குதல்

அந்த வகையில் டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு கண்டன பேரணி ஒன்று நடந்து கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 8.45 மணிக்கு நகர்மன்ற அரங்குக்கு அரை மைல் தொலைவில் பேரணி சென்று கொண்டிருந்தபோது, திடீரென உயரமான ஒரு இடத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய 2 நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் போலீசாரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். இதனால் பேரணியில் பதற்றம் உருவானது. மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கினர்.

5 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

இந்த சம்பவத்தின்போது 5 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குண்டு பாய்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் சிவிலியன். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை, கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதல் குறித்து டல்லாஸ் நகர போலீஸ் தலைவர் டேவிட் பிரவுன் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘குறிபார்த்து சுடுவதில் வல்லவர்களான 2 பேர்தான் போலீஸ் அதிகாரிகளை நோக்கி சுட்டனர். அவர்கள் திடீர் தாக்குதல் பாணியில் சுட்டனர்’’ என கூறினார்.

ஒருவர் கைது, மற்றொருவர் சரண்

பின்னர் தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாகவும், மற்றொருவர் சரண் அடைந்துள்ளதாகவும் டல்லாஸ் போலீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சந்தேகத்துக்கு இடமான மர்ம பொருள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதை வெடிகுண்டு செயலிழப்பு போலீஸ் படையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது போலந்து நாட்டில் வார்சா நகரில் ‘நேட்டோ’ மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments