Subscribe Us

முஹ‌ம்ம‌த் தில்ஷாத். இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் A Team இற்கு தெரிவு


திறமையும், கடின உழைப்பும் ஒரு மனிதனை எந்த எல்லை வரைக்கும் இட்டுச் செல்லும், ஆகாயம் கூட கைக்கெட்டும் தூரம் தான் என்பதை உணர்த்தி விடும் என்பதற்கான அண்மைய உதாரணம் தான், முஹ‌ம்ம‌த் தில்ஷாத். இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் A Team இற்கு தில்ஷாத் தெரிவு செய்யப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட பொழுது இந்த விடயம் தான் மனதில் எழுந்தது. கண்ணுக்குத் தெரியாத அதிகார வலையினால் பின்னப்பட்டுள்ள தென்னாசிய கிரிக்கெட் புலத்தினுல் ஒரு மத்திய தர வர்க்க இளைஞன் எந்த விதமான பின்னணியும் இன்றி முழுக்கவே தன்னுடைய திறமையை மட்டுமே நம்பி முன்னுக்கு வருவது இலேசுப்பட்ட விடயம் அல்ல. ஹாலிவுட் சினிமாக்களில் வரும் சாகசங்களுக்கு நிகரானது அது. தில்ஷாத் அடைந்துள்ள இடம் எனக்கு முக்கியமாக தெரிவது இந்த ஒரு காரணத்தினால் தான்.
கிரிக்கெட்டின் முகம் இன்று வெகுவாக மாறி விட்டது. பகாசுர கார்ப்பரேட் கம்பெனிகள் கிரிக்கெட் போட்டிகளை அச்சு அசலான வியாபாரமாகவே மாற்றி விட்டன. இந்த நிலையில் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் தனது தோளில் அதிக பொறுப்புக்களை சுமக்க வேண்டியிருக்கிறார். இயல்பாகவே இந்த சுமைகளை சுமக்க தகுதியான ஒருவரே எந்த விதமான வர்க்க சார்ந்த பின்னணிகளும் இன்றி அவ்விடத்துக்கு தெரிவு செய்யபட முடியும். தில்ஷாத் இதுவரையில் தான் காட்டிய திறமையை இன்னும் பல மடங்கு மேம்படுத்திக் கொண்டு களத்தில் ஜொலிப்பார் என்று நம்பலாம். அல்லாஹ் அருள் புரியட்டும்.
சின்ன வயதில் இருந்தே ஒரே தெருவில் வளர்ந்த, ஹாஷ்யங்களையும், பகிடிகளையும் பகிர்ந்து கொண்ட உறவுக் கார இளைஞனை "ர்" போட்டு அழைப்பது சங்கடமாக இருக்கிறது. நிச்சயமாக தில்ஷாத் அக்குறணை நகருக்கு பெருமையே அளித்துள்ளான். அதிலும் இந்த நகரம் வியாபாரிகளுக்கு மட்டுமே என்று இருக்கும் தலைவிதியை தில்ஷாத் விளையாட்டு என்பது வெறும் "விளையாட்டு" அல்ல என்பதன் மூலம் உடைத்தெறிந்துள்ளான். கிரிக்கெட்டை விட நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் இது.
வாழ்த்துக்கள் தில்ஷாத். இறையருளால் இன்னும் சிகரங்களை தொடுவாய்.

-LAFEES S.-

Post a Comment

1 Comments

  1. please don't publishize in the religious aspects let him play and don't pressurize bringing in religion into it..and it goes to the other's eyes will bring his downfalls so please watchful

    ReplyDelete