Subscribe Us

header ads

வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல்: எகிப்து விமானம் அவசரமாக தரை இறங்கியது


எகிப்து நாட்டை சேர்ந்த ஈஜிப்ட் ஏர் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசியில் தகவல் வந்ததால் விமானம் அவசரமாக தரை இறங்கியது.


எகிப்து நாட்டை சேர்ந்த ஈஜிப்ட் ஏர் விமானம் (ஏர்பஸ் ஏ 330-220 ரகம்) எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 118 பயணிகளும், 17 சிப்பந்திகளும் இருந்தனர். இந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஈஜிப்ட் ஏர் விமான நிறுவனத்துக்கு தொலைபேசியில் தகவல் வந்தது.

உடனே அந்த விமானத்தின் விமானிக்கு அது குறித்து தெரிவிக்கப்பட்டது. அவரும் உடனடியாக இதுபற்றி உஸ்பெகிஸ்தானில் உள்ள உர்கெஞ்ச் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்து, தங்களது விமானம் அவசரமாக தரை இறங்க அனுமதி பெற்றார்.

அதைத் தொடர்ந்து அவர் விமானத்தை அங்கு அவசரமாக தரை இறக்கினார். பயணிகளும், சிப்பந்திகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அங்கு தயார் நிலையில் இருந்த போலீஸ் படையினரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் அந்த விமானத்தில் ஏறி அங்குலம், அங்குலமாக சோதனை போட்டனர். ஆனால் அதில் வெடிகுண்டோ, பிற வெடி பொருட்களோ இல்லை என தெரியவந்தது. அதன்பிறகே அனைவரும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். எனினும் இந்த சம்பவத்தால் அந்த விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. 

Post a Comment

0 Comments