Subscribe Us

சவூதி அரேபியாவில், முகாம்களில் இருக்கும் இலங்கையர்களை துரிதமாக இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை


சவூதி அரேபியாவில், முகாம்களில் இருக்கும் இலங்கையர்களை துரிதமாக இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கு சென்று பல்வேறு காரணங்களினால் அநாதரவான நிலையில் இலங்கைக்கு திரும்ப முடியாது, நீண்டகாலமாக, அந்த நாட்டில் உள்ள நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்கள், நாடு திரும்ப அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு ஒன்றை ஏற்படுத்த சவூதி அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா அண்மையில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது அந்த நாட்டு தொழில் மற்றும் உள்துறை விவகார பிரதியமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக சவூதி அரேபியா இந்த இணக்கத்தை வெளியிட்டுள்ளது.
இதனை தவிர சவூதி அரேபியாவில் தொழில் புரியும் இலங்கையர்களின் தகவல்களை அவ்வப்போது பரிமாறிக்கொள்ளவும், இலங்கையரின் நலன்புரி விடயங்களில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும் அந்த நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா, சவூதி அரேபிய சமூக சேவைகள் அமைச்சர் மற்றும் பொது சுகாதார பிரதியமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
சவூதியில் அநாதரவான, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இலங்கை தொழிலாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவது, சவூதியில் இறந்து போகும் இலங்கையர்களின் உடல்களை இலங்கைக்கு விரைவாக எடுத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது என்பன குறித்தும் இந்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

Post a Comment

0 Comments