Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் ( அவர்களுக்காய் அழுவோம் ) கவிதை தொகுப்பு.



Mohamed Nizous

சரியா சாரிக்கு
சட்டை அமையல்லண்ணு
பெரியதாய் கவலையுறும்
பெண்மணிகாள் கேளுங்கள்
சிரியாவில் சோதரிகள்
சிரித்து நாளாச்சி
ஒரு உடுப்பே உள்ளதம்மா
ஓடுகிறார் உயிர் தப்பி.

செல்ல மகன் சின்ன மகன்
சென்று போன பரீட்சையிலே
நல்ல மார்க்ஸ் எடுக்கலேண்ணு
நச்சரிக்கும் பெற்றோரே
கொல்லப்பட்ட மகன் மகளை
கொண்டு போய் அடக்குகின்ற
பொல்லாத வேதனையில்
புரள் பலஸ்தீன் தெரிகிறதா?

என்னை விட புதிய பைக்
இருக்கிறது அவனிடம்
எண்ணி வருந்துகின்ற
இளைஞனே நினைத்துப் பார்.
கண்ணிழந்து காலிழந்து
கண்ணீரை தினம் சிந்தி
மண்ணிலே வாழுகின்ற
மனிதர்கள் ஈராக்கில்.

பாங்கு சொன்ன பின்னும்
பள்ளிக்குப் போகாமல்
தூங்கி சுகம் காணும்
தோழர்களே கேளுங்கள்.
ஆங்காங்கு பாதையிலே
ஆயிரம் பயங்களுடன்
தூங்கவும் வழியின்றி
துடிக்கிறார் ஹலப்பேயில்.

சாப்பாடு ருசியில்லை
சனியனே என்ன இது?
கூப்பாடு போடுகின்ற
கோபக் காரர்களே!
ஆப்பிரிக்கக் கண்டத்தில்
அன்றாடம் நீருமின்றி
கூப்பிட்டு அழுவதை நீ
கொஞ்சம் நினைத்துப் பார்.

ஆண்டவன் தந்திருக்கும்
அருட்களை எண்ணிப்பார்!
வேண்டாத விடயங்களில்
விசனப் படுவது ஏன்?
மாண்டு மடிகின்ற
மக்களை நினைவிருத்தி
ஆண்டவனிடம் அவரகளுக்காய்
அழுது பிரார்த்திப்போம்.

Post a Comment

0 Comments