Subscribe Us

header ads

அனுராதபுர மாவட்டத்தில் இப்படி அதிசயமான ஒரு பாலம்



இப்படி அதிசயமான ஒரு பாலத்தை எவரொருவரும் இதற்கு முதல் கண்டிருக்க முடியாது..

அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள கெக்கிராவை எனும் ஊரிலிருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் ஹபரன வீதியில் அமைந்திருப்பதுதான் கனேவல்பொல என்னும் ஒரு சிறிய முஸ்லீம் கிராமம்.. சுமார் 650 குடும்பங்கள் வாழக்கூடிய இக்கிராமத்தின் ஒரு ஓரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு பெரிய ஆறு அதைதான் படத்தில் பார்க்கிறீர்கள்..

மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் இவ்வாற்றை அந்த நாட்களில் கடந்து அக்கரைக்கு செல்வது என்பது இயலாத காரியம் பல கிலோமீற்றர்கள் சுற்றிவந்தே செல்ல வேண்டும் என்ற நிலை இருந்ததால் பாலமொன்றின் அவசியம் உணரப்பட்டு அந்த பாலத்தை அமைப்பதற்காக வேண்டி பல நலன்விரும்பிகளின் நிதியுதவிகளால் பால வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களாகின்றன.. 

அந்தப் பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதா அல்லது முடிக்கப்படவில்லையா என்பது இன்று கேள்விக்குறியாக இருக்கின்றது. தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் ஆற்றுக்கு நடுவில் இன்று அந்தப் பாலம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது. பாலம் போடுவதற்கு முன்னின்று செயல்பட்டவர்கள் கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் பாலம் கட்டுவதற்காய் ஒதுக்கப்பட்ட நிதியை சுருட்டியிருப்பதை இப்பாலத்தை பார்க்கும் பாமரனும் அறிந்துகொள்வான்.

ஊர் மக்கள் நன்மையடைய வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் பயணம் ஆபத்து நிறைந்ததாக இருக்க கூடாது என்பதற்காவும் அவர்களின் கஷ்ட நிலையை போக்க உதவி புரிந்த ப்ரோபகாரிகளின் உதவிகள் பாதி வழியில் இடைநிறுத்தப்பட்டு துஷ்பிரயோகப்படுத்தப்பட்டிருப்பதானது உதவி செய்த அந்த மக்களையும், உதவியை எதிர்பார்த்திருந்தவர்களையும் சங்கடப்படுத்தும் ஒரு செயல் மட்டுமன்றி ஊர் மக்களின் மனதில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த கூடியது..

முன்னின்று வேலைகளை செய்து முடிக்க கூடிய திடகாத்திரமும் வல்லமையும் கொண்டவர்கள் ஒரு ஊருக்கு கிடைக்க கூடிய நன்மைகளையும், உபகாரங்களையும் கொள்ளையடித்து, மொத்த ஊரையும் இக்கட்டான நிலையில் தள்ளிவிட்டு தாம் மட்டும் சுகபோகமாக வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.. பால நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முதல் இந்த பாலத்திற்கு ஏற்படும் செலவுத்தொகை கணக்கெடுக்கப்பட்டு போதியளவு நிதி சேகரிக்கப்பட்ட பிறகே பால வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.., பின்னர் பல மாதங்கள் தொடக்கம் இந்த பாலம் இடைநடுவில் தொக்கி நிற்பதன் மர்மம் என்ன ? 

இந்த பாலத்தை நிர்மாணிக்க பொறுப்பெடுத்தவர்கள் கேள்விக்கான பதிலை கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும்.., பாலம் ஒரு பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்டால் கூட ஏற்றுக்கொள்ளலாம் இங்கு நடந்திருப்பது வேறு.. இரண்டு முடிவுகளும் இல்லாமல் பாலம் ஆற்றின் நடுவில் ஆரம்பிக்கப்பட்டு இடை நடுவில் கை விடப்பட்டிருக்கிறது.. இதற்கான பதிலை யார் கூறுவது ? 

பொறுப்பானவர்களிடம் பதில் கேட்க போனால் பொருத்தமான பதில் வழங்கப்படாமல் விரட்டுப்படுகிறார்கள் பொது இடத்துக்கு ஒரு பிரச்சினை வரும்போது சம்மந்தப்பட்டவர்கள் கட்டாயம் பதில் கூறியே ஆகவேண்டும்.. இந்த பால நிர்மாணிப்பில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிந்து இந்த பாலத்தை முழுமையான முறையில் பூர்த்தி செய்து மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தவும் உயிராபத்துக்களை தடுக்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்..

-Razana Manaf-


Post a Comment

0 Comments