கடந்த ஐந்தாறு நாள்களாக ‘இனிமேல் வடை சாப்பிடுவீங்க...?’ என்பதைப் போன்ற ஏளனக் கடுஞ்சொற்களுடன் கீழே உள்ள படங்கள் முகநூல், என்வினவி என சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் தொடர்ந்து வலம் வருகின்றன.
இடக்கை இழந்த ஒருவர் வலதுகையால் மாவு பிசைந்து, கை அக்குளுக்குள் வைத்துத் தட்டி வடை சுடுவது போன்ற அப்படங்கள் எல்லாரையும் வாயிலெடுக்க வைத்தன.
மாற்றுத் திறனாளர்கள் அனைவர்மீதும் மக்களின் அன்பும் இரக்கமும் வற்றிப்போகுமளவு அப்படங்களில் காண்பிக்கப்பட்ட செயல் இருந்தது.
தொடக்கத்தில் நானும்கூட உங்களைப் போன்றே முகம் சுழித்தேன். மனிதன் என்பவன் அடிப்படையில் மிகவும் நல்லவன், நம்பிக்கைக்குரியவன். அதிலும் இழப்பைச் சந்தித்த மனிதன் - உடலிலோ உள்ளத்திலோ - எல்லாரையும்விட ஒருபடி உயர்ந்தவன்.
மனிதர்களைப் பற்றிய இம்மதிப்பீடு இன்றுவரை என்னளவில் வீழ்ச்சியடைந்ததில்லை. அதன்படி பார்க்கையில் இவ்விரண்டு படங்களும் என்னை மிகவும் வருத்தின. நம் நம்பிக்கைக்கு முற்றிலும் எதிராக இவை இருக்கின்றனவே என்ற துயரம் இப்படங்களைப் பார்க்கையில் மீண்டும் மீண்டும் எழுந்தது. நாளைக்குக் கடையை மூடிவிட்டு ஊரைவிட்டு ஓடுகின்றவர்கூட இத்தகு செயலைச் செய்யமாட்டார் என்றே நம்புகிறேன். அப்படியிருக்க இது எப்படி ?
என்னையே அறியாமல் இப்படங்களைத் தனியே எடுத்துப் பெரிதாக்கிப் பார்த்தேன். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
படத்தில் தேநீர் ஆற்றும் பெரியவர்க்குப் பின்னால் இருப்பவர் ‘நடிகர் கஞ்சா கருப்பு.’ ஆம் இப்படம் நடிகர் SIRIKANTH நடித்த சவ்கார்பேட்டை திரைப்படம். அவரைக் கீழுள்ள ஒரு படத்தில் நான் குறியிட்டுக் காட்டியிருக்கிறேன். நீங்களும் பார்க்கலாம்.
ஆக, இது ஏதோ ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சி. வடை சுடுபவர் ஒரு நகைச்சுவை நடிகர். அவர் முகத்தில் இருப்பதும் ஒரு நகைச்சுவை நடிகரின் பாவனை.
மறக்கப்பட்ட ஏதோ ஒரு படத்தில் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட இக்காட்சிப் படங்கள் சமூக வலைத்தளங்களில் இல்லாததையும் பொல்லாததையும் பரப்பி மக்களின் நல்லெண்ணத்தில் நஞ்சைத் தூவுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற ன.
மாற்றுத் திறனாளிகள்மீது வஞ்சம் வைத்திருந்த கீழ்மதியாளன் ஒருவன் இப்படங்களைப் பரப்பியிருக்கிறான்.
இப்படங்களைப் பரப்பியவன் யாராயினும் சரி, அவன்மீது இணையச் சட்டங்களைப் பயன்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றைப் பகிர்ந்தவர்கள் வெளிப்படையாய்த் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
இணையத்தில் அறிவூட்டுபவன் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கிறான். முட்டாளாக்குவதற்கு ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.
நண்பர்களே... கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், சோதித்தறிவதே மெய்’ என்னும் நம் முன்னோர் சொற்களை மறவாதீர்.
--கவிஞர் மகுடேசுவரன்


0 Comments