அது ஒரு வெள்ளிக்கிழமை. ஜும்மாவுக்கு நேரமாகிவிட்டது என்று விரைவாக நான் நடந்து செல்லும் போது கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல ரெஸ்டுரண்டுக்கு முன்னாள் ஒரு சனக்கூட்டம் தெரிகிறது. ஹபாயாவுடன் இரண்டு பெண்களும் த்ரீ கோட்டர் ஜம்பர் அணிந்து இரு ஆண்களும் நடுவில் நிற்க ஒரு சனக்கூட்டம் அவர்களை மொய்த்திருக்கிறது. இவர்களுக்கு அருகில் கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் இலட்சினையுடன் ஒரு கார் ஒன்றும் நிற்கிறது.
இவர்களை பார்த்த பார்வையிலேயே அரபிகள் என்று புரிந்தது. அது பகல் சாப்பாட்டு நேரம் என்பதால், இந்த உணவகத்திற்கு வந்திருந்த அருகில் உள்ள தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பல இளைஞர்கள் இந்த அரபிகளோடு பெரும் வாய்த்தகராறில் ஈடுபடுவது அந்த இடத்தை அண்மிக்கும் போது தெளிவாக விளங்கியது.
அருகில் சென்று பார்த்தால், அந்த அரபிகள் வேர்த்து விறுவிறுத்து அச்சத்தில் உறைந்து போய் இருக்க சுற்றி இருந்த இளைஞர்கள் ஆங்கிலத்தில் இருக்கும் கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் சரளாமாக பாவித்து திட்டிக்கொண்டிருக்கிறார்கள ்.
என்ன நடந்தது என்று ஒருவனை பிடித்து விசாரித்தேன்.
இந்த அரபிகள் பகல் சாப்பாடிற்காக இந்த ரேஸ்டூரண்டுக்கு வந்திருக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்வதற்காக டேக்சியை பிடிக்காமல், தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வாடகை காரை வரவழைத்திருக்கிறார்கள். ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட காரில் பல பௌத்தர்களின் வாகனங்களில் இருப்பதை போல ஒரு சிறிய புத்தர் சிலை ஒன்றை டேஷ் போட்டில் (Dashboard) ஓட்ட வைத்திருக்கிறார் அந்த சாரதி. இந்த சிலையை அகற்றினால்தான் நான் காரில் ஏறுவேன் என்று அந்த சிலையை அகற்ற முனைந்திருக்கிறான் அந்த அரபு இளைஞர்களில் ஒருவன். உடனே அதை தடுத்த அந்த சாரதி அவனுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சத்தம் போடவும் கூட்டம் கூடிவிட்டது.
உங்கள் நாட்டிற்குள் நாங்கள் வந்து உங்கள் மதத்திற்குரிய விடயத்தில் இப்படி தலையிட்டு இருந்தால் எங்கள் தலையை இந்நேரம் கொய்து இருப்பீர்கள் என்றும் எந்த காரணம் கொண்டும் புத்தர் சிலையை அகற்ற முடியாது, உடனே பொட்டி படுக்கையை கட்டிக்கொண்டு நாட்டுக்கு போங்கடா என்றும் , நாங்கள் உங்களுக்கு இங்கிருந்து போவதற்கு ஒரு டேக்சியை கூட நிறுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று ஆளாளுக்கு சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர் தங்களது செல்போனில் இந்த சண்டையை வீடியோ பண்ணிக்கொண்டும் இருந்தார்கள்.
புத்தர் சிலையை அகற்ற முடியாது என்ற அவர்களின் ஆத்திரத்தில் முழுக்க முழுக்க நியாயம் இருந்தது. ஏனெனில் ஒரு நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த நாட்டின் கலாச்சார, மத மற்றும் பண்பாட்டு விழுமியங்களை பழக்க வழக்கங்களை அறிந்து அதற்கு மதிப்பு கொடுக்க தெரிந்திருக்க வேண்டும். இது முடியாதவர்கள் சொந்த நாட்டிற்குள் சுற்றுலா போய்கொள்ளவேண்டியதுதான்.
குறிப்பாக சுற்றுலா என்ற பெயரில் இங்கு வரும் அரபிகள், ஏற்கனவே கொழுந்துவிட்டு பின்னர் அடங்கிபோயிருக்கும் இனவாத தணலுக்குள் பெற்றோலை ஊற்றிவிட்டு மெதுவாக உங்கள் நாட்டுக்கு எஸ்கேப்பாவதை விட நீங்கள் இந்த நாட்டுக்கு வராமல் இருப்பதே மேல்.
-Dilshan Mohamed-


0 Comments