Subscribe Us

header ads

கிருலப்பனை கூட்டத்திற்கு செல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமாட்டேன்: ஜனாதிபதி திடீர் முடிவு


கொழும்பு - கிருலப்பனையில் நாளை நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக தான் தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக தீர்மானிக்கும் முழு அதிகாரத்தை ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுதந்திரக் கட்சியின் சில தொகுதி அமைப்பாளர்கள் கிருலப்பனையில் நடைபெறும் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது, கிருலப்பனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த உயர்மட்டப் பிரதிநிதிகள் அனைவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்த சில தினங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது. இதன் போது கட்சியின் ஒழுக்கத்தை பாதுகாப்பது தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக அந்த கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments