Subscribe Us

header ads

தேசிய மாநாட்டின் தெவிட்டும் மர்மங்கள்


வணிக ரீதியான நோக்கம் கொண்டியங்கும் பேருந்தில் மக்கள் பயணிக்க வேண்டுமாக இருந்தால் அந்த பேருந்து எங்கே செல்லுமெனும் விடயம் தெளிவாக இருப்பதோடு அதற்கு குறித்த அரச அனுமதிகளும் இருக்க வேண்டும்.பேருந்து எங்கே செல்லுமெனும் விடயம் தெளிவற்று இருக்கும் போது அதில் பயணிகள் யாரும் பயணிக்க விரும்பமாட்டார்கள்.ஒரு குறித்த பேருந்து எங்கே பயணிக்கப் போகிறதெனத் தெரியாமல் பயணிகள் அதில் பயணிப்பார்களாக இருந்தால் அந்த மக்களை யாரும் சாதூரியமானவர்களாக குறிப்பிடமாட்டார்கள்.இன்றுள்ள முஸ்லிம் கட்சிகளிடம் உங்களின் கொள்கைகள்,இலட்சியங்கள் என்ன? என்ற வினாவை எழுப்பினால் எக் கட்சியிடமிருந்தும் தெளிவான பதில்களைப் பெற முடியாது.அவர்கள் அவர்களது இஸ்டப்படி தங்களது கட்சியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.மு.காவினர் மு.காவானது முஸ்லிம்களின் அத்தனை உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான கட்சியாகும்.அதற்கு மட்டிட்ட கொள்கைகள் இல்லை என்ற விதண்டாவாதக் கருத்துக்களை கூற முடியுமே தவிர இது தான் நாங்கள் சாதிக்க நினைக்கும் விடயங்களென கேட்போர் முகத்தில் அள்ளி வீசிட இயலாது.

தேர்தல் காலம் வந்தால் மாத்திரம் கரையோர மாவட்டத்தை அள்ளிப் பிடித்து கக்கத்தில் செருகிக்கொண்டு கிழக்கு பூராகவும் பம்மாத்துகாட்டும்.இது எந்தளவு நடைமுறைச் சாத்தியமானது என்பதைக் கூட சிறிதும் சிந்திக்காமல் முஸ்லிம்களும் உணர்சிகளுக்கு அடிமைப்பட்டு வாக்குகளை அள்ளி வீசுவர்.இறுதியில் எல்லாம் பூச்சியத்தால் பெருக்கிய கதையாகத் தான் முடிவடையும்.மக்கள் ஆதரவற்ற ஒரு கட்சியைப் பற்றி அதிகம் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.மு.காவிற்கு இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் அதன் ஒவ்வொரு எட்டுக்களும் மிகச் சிறப்பான நகர்வுகளாக அமைய வேண்டும்.மாறாக முஸ்லிம்களின் விடயத்தில் பொடு போக்காக செயற்படுவதை சிறிதேனும் ஏற்றுகொள்ள முடியாது.

மு.காவிற்கு வெளியில் சொல்லுமளவு கொள்கைகள் ஏதும் இல்லை என்பதை மேடை போட்டுக் வெளிப்படுத்திய ஒரு நிகழ்வுதான் கடந்த 19-03-2016ம் திகதி சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மு.காவின் தேசிய மாநாடாகும்.குறித்த மாநாடு மு.கா என்ற கட்சியின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.இதனால் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த இலாபம் என்ன என்ற வினாவினை எழுப்பினால் தான் அங்கே விடைகள் வந்த வழி தெரியாது ஓடி ஒழிக்கின்றன.மு.கா இத் தேசிய மாநாட்டை மிக அதிகமான கோடிகளோடு நடாத்தி முடித்திருந்தது.குறித்த மாநாடு நடைபெற்றதற்கு மூன்று மாதங்கள் முன்பே இதற்கான முன்னெடுப்புக்களை மு.கா முடுக்கிவிட்டிருந்தது.ஒரு மாதத்திற்கு முன்பே குறித்த மாநாடு நடைபெற்ற மைதானத்தில் பிரமாண்டமான பார்வையாளர் கூடாரங்களை நிறுவி பம்மாத்து அரசியல் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.மு.கா இத் தேசிய மாநாட்டிற்கு காட்டிய அக்கறையின் ஒரு சிறு பகுதியேனும் சமூக விடயங்களில் காட்டி இருந்தால் இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்ற ஒன்றே இருந்திருக்காது.செலவுக்கேற்ற பயன்கள் இருப்பின் பம்மாத்து விடயங்களை  பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.குறித்த மாநாட்டில் கொள்கை ரீதியான விடயங்களில் தான் சமூகம் பயனடைய வாய்ப்புள்ளது.கொள்கை என்றால் எந்தக் கடையில் கிடைக்கும் என்பது போன்றே மு.காவினர் இத் தேசிய மாநாட்டை நடாத்தி முடித்திருந்தார்கள்.

இம் மாநாடு நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து இவைகளையாவது குறித்த மாநாட்டின் தீர்மானங்களாக பிரகடனப்படுத்துங்கள் என மு.காவினரின் காலில் விழாத குறையாக அவ் அறிக்கையில் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.இவரின் அறிக்கையை ஒரு பொருட்டாக கூட யாரும் கருத்திற் கொண்டதாக இல்லை.மு.காவின் தவிசாளர் மு.கா இத் தேசிய மாநாட்டை பயனற்ற விதத்தில் நடாத்தப் போகிறது என்பதை செவியுற்றே இச் செயலில் இறங்கினாரோ தெரியவில்லை.பஷீர் சேகுதாவூதின் அறிக்கையில் உள் நோக்கங்கள் புதைந்து கிடப்பதான சந்தேகங்கள் உள்ள போதும் நடுநிலையோடு சிந்திக்கும் போது குறித்த நேரத்தில் பஷீர் சேகுதாவூதின் அறிக்கை மக்களை முன்னிறுத்திச் சிந்திப்போருக்கு மிகவும் பயனுள்ளது.இவ் அறிக்கையை கண்ணுற்றாவது தங்களது இம் மாநாட்டில் ஏதாவது கொள்கைப் பிரகடனங்களை, தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமென  மு.காவினருக்கு தோன்றிருக்க வேண்டும்.இவ் அறிக்கையும் மு.காவைச் சிந்திக்க தூண்டிருக்கவில்லை. மாறாக இவ் அறிக்கையைக் கண்டு மு.காவினர் மு.காவின் தவிசாளரை வைதது மாத்திரமே எஞ்சியது.ஒரு கட்சியில் செயலாளர்,தவிசாளர் பதவிகள் மிக முக்கிய பதவிகளாகும்.மு.காவின் தவிசாளரும்,செயலாளரும் ஊரா வீட்டுப் பிள்ளை போல் மு.காவிற்குள்ளிருந்து மு.காவிற்கே அறிக்கை விடுவது மு.கா என்ற கட்சியின் சீரிய கட்டமைப்பை கேள்விக்குற்படுத்துவதோடு நகைப்பிற்குரியதாகவும் மாற்றுகிறது.இன்னுமொரு வகையில் இவர்கள் அறிக்கையை வைத்துக் கூறப் போனால் செயலாளரினதும்  தவிசாளரினது கருத்துக்கள் மு.காவிற்குள் சிறிதும் தாக்கம் செலுத்தாது என்பதையும் புலனாக்குகின்றது.தனது வீட்டில் தனது கதை எடுபடாது போகும் போதே வீதியில் நின்று நியாயம் கேட்க முயல்வார்களல்லவா? தவிசாளர் நெடுங் காலமாகவே ஊரா வீட்டுப் பிள்ளை போல் அறிக்கை விடுவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவ்வாறான தேசிய மாநாடுகளில் தங்களது கொள்கைகளை புதுப்பித்துக்கொள்வதும் எதிர்கால தீர்மானங்களை முன் வைப்பதும்  தாங்கள் சாதித்த விடயங்களை மக்களிடம் பெருமையோடு பகிர்ந்து கொள்வதும் வழமை.இதனையே மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களும் செய்திருந்தார்.அமைச்சர் ஹக்கீம் குறித்த மாநாடு நடைபெறுவதற்கு முன்பு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தாங்கள் சில தீர்மானங்களை இம் மாநாட்டில் நிறைவேற்றப்போவதாக கூறியிருந்தார்.அமைச்சர் ஹக்கீம் தேசிய மாநாட்டில் தான் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்களைக் கண்ட மகிழ்ச்சியில் தாங்கள் நிறைவேற்ற நினைத்திருந்த தீர்மானங்களை மறந்துவிட்டாரோ தெரியவில்லை.மு.கா இத் தேசிய மாநாட்டில் தங்களது தீர்மானங்கள் எதனையும் நிறைவேற்றாது எனும் விடயம் மாநாட்டிற்கு முன்பு வெளிப்படும் போது மாநாட்டிற்கு முன்பே இது தொடர்பான விமர்சனங்கள் தலைதூக்க வாய்ப்புள்ளது.மாநாடு நிறைவுற்றதன் பின்பு இது தொடர்பான விமர்சனங்கள் விண்ணைப் பிளந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.அமைச்சர் ஹக்கீம் இவ்வாறான விமர்சங்கள் முன் கூட்டியே எழுவதைத் தடுக்கும் நோக்கில் இவ் விடயத்தைக் கூறியிருக்க வேண்டும்.கடந்த நவம்பர் ஏழாம் திகதி மு.காவின் கண்டியில் இடம்பெற்றிருந்த இருபத்தாறாவது பேராளர் மாநாடு  கூட மு.காவின் பதின்நான்கு தீர்மானங்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தினால் முன்மொழியப்பட்டிருந்தன.அண்மையில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட மு.காவின் எழுச்சி மாநாட்டில் கூட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.மேலுள்ள விடயங்களை வைத்து மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் மரபுகளை மு.கா பின்பற்றாமலுமில்லை என்பது துல்லியமாகிறது.

அப்படியானால் மு.கா வேண்டுமென்றே தீர்மானங்கள் நிறைவேற்றுவதை விட்டும் தவிர்ந்து கொண்டதா? என்பதே இதனைத் தொடர்ந்தெழுகின்ற வினா.இம் மாநாட்டில் மு.கா நிறைவேற்ற வேண்டியதாக கருதப்படும் தீர்மானங்கள் இன்றைய சூழ் நிலையிலும் மு.கா கடைப்பிடிக்கும் அரசியல் வழி முறைகளாலும் அவ்வளவு இலகுவில் நிறைவேற்றப்படும் என நம்ப முடியாது.தாங்கள் முன்னர் நிறைவேற்றிய எத்தனை தீர்மானங்களை மு.கா நிறைவேற்றியுள்ளது என யாரும் கேட்டாலும் எதற்கும் மு.காவினரால் பதிலளிக்கவும் முடியாது.இம் மாநாட்டிலும் ஏதாவது தீர்மானங்களை நிறைவேற்றியதன் பின்பு ஏதாவது இதுபோன்றதொரு நிகழ்வுக்குள் அதனை நிறைவேற்றாத போது இதனைச் சுட்டிக் காட்டியே மு.காவை பலரும் நையப்புடைவர்.சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான தீர்மானம் மட்டக்களப்பில் இடம்பெற்ற மு.காவின்  எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.இத் தேசிய மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றுவதானாலும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தை அதில் உள்ளடக்கியாக வேண்டும்.குறித்த தீர்மானங்களையே மீண்டும் மீண்டும் நிறைவேற்றுவதில் எதுவித இலாபமுமில்லை.குறித்த தீர்மானங்களை மீண்டும் நிறைவேற்றும் போது இதனோடு சேர்த்து தாங்கள் நிறைவேற்றும் ஏனைய தீர்மானங்களும் பூச்சியப் பெறுமானத்தைப் பெறும்.மீண்டும் மீண்டும் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றுவது நகைப்பிற்குரியதுடன் மு.காவின் இயலாமையை புடைபோட்டுக் காட்டுவதாகவும் அமையும்.எனினும்,இவைகளை பிரதான காரணமாக கணிப்பிட முடியாது.இச் சந்தர்ப்பத்தில் தீர்மானங்களை நிரவேற்றுவதானால் அதில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான சில விடயங்களை நிறைவேற்றியாக வேண்டும்.இது தொடர்பில் மு.காவிடம் உறுதியான நிலைப்பாடு இல்லாததன் காரணமாகவும் இது தொடர்பான காத்திரமான தீர்மானங்களை நிறைவேற்றும் போது அது சில முக்கியமான அதிதிகளின் வருகையை கேள்விக்குட்படுத்த வாய்ப்புள்ளது போன்ற காரணங்களுக்காக இம் மாநாட்டில் மு.கா தீர்மானங்கள் நிறைவேற்றுவதை விட்டும் தவிர்ந்திருக்கலாம்.இவைகளை வைத்து மு.கா எந்த நோக்கத்திற்காக இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது என்பதையும் சிறிது மட்டிட்டுக்கொள்ளலாம்.

குறித்த மாநாட்டில் தங்களது கட்சியின் கொள்கைகளை,தீர்மானங்களை தேசிய மாநாட்டின் பிரதான அங்கமாக பகிரங்கப்படுத்தும் போது அம் மாநாட்டிற்கு வருகை தரும் அதிதிகள் அதனைப் பற்றி ஏதாவது கருத்துத் தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.அதுவே ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும் அதிதிகளின் உரையாற்ற பின்பற்றும் மரபுரீதியான வழி முறையாகும்.ஜனாதிபதி,பிரதமரின் வாக்குறுதிகள்,கருத்துக்கள்  குறித்த விடயங்களை எய்து கொள்வதில் மிகப் பாரிய தாக்கத்தைச் செலுத்தும்.தமிழர்களின் ஏதாவது நிகழ்விற்கு செல்லும் ஜனாதிபதியும்,பிரதமரும் அவர்களது தேவைகளைப் பற்றிக் கதைக்கின்றார்களே முஸ்லிம்களின் இந் நிகழ்விற்கு வந்தவர்கள் ஏன் முஸ்லிம்களின் தேவைகள் பற்றி சிறிதேனும் கதைக்கவில்லை? என்ற வெறுப்பு மிகுந்த வினாக்கள் இவ் மாநாட்டின் பிற்பாடு முஸ்லிம்களிடத்தில் தோற்றம் பெற்றுள்ளது.ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும் அதிதிகள் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன் அப் பகுதி மக்களினது தேவைகளை தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டு அறிந்துகொள்வார்கள்.அங்கு உரையாற்றும் போது அத் தேவைகளை மையப்படுத்தி தங்களது உரைகளை அமைத்து அப் பகுதி மக்களை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.இந் நடைமுறையும் அதிதிகள் உரையின் போது பின்பற்றப்படவில்லை.இங்கு வருகை தந்திருந்த அதிதிகள் இம் மாநாடு இடம்பெற்ற இடத்திற்கு அண்மையில் உள்ள நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தைப் பற்றியாவது கதைத்திருக்கலாம்.குறைந்தது பேரின சமூகத்திடையே எதுவித சிறு விமர்சனங்களும் எழச் சாத்தியமற்ற தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம்,ஒலுவில் துறைமுக காணிப் பிரச்சினை பற்றியாவது கதைத்திருக்கலாம்.இவைகள் பற்றி ஜனாதிபதியும் பிரதமரும் சிறிதும் வாய் திறக்காமை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் கதைக்க ஆர்வமில்லாமல் இருப்பதை புலனாக்குகிறது.

மு.கா இம் மாநாட்டை நடாத்தப் போவதாக அறிவித்தது முதல் மிகவும் பலத்த எதிர்ப்புகள் வந்திருந்தன.சிலர் வெந்த வீட்டில் பிடிங்கிய இலாபம் காண விளைந்த போதும் பலர் மு.கா விட்ட தவறுகளை வைத்து மு.காவின் இத் தேசிய மாநாட்டை தோல்வியுறச் செய்ய முயன்றனர்.இதன் போது ஒலுவில் துறைமுக காணிப் பிரச்சினை,நுரைச்சோலை வீட்டுப் பிரச்சினை,சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றப் பிரச்சினைகள் தான் பிரதானமாக தலை தூக்கி இருந்தன.மு.காவின் மாநாட்டை தோல்வியுறச் செய்ய இப் பிரச்சினைகளைக் கிளறி இருந்தாலும் இப் பிரச்சினைகள் மக்களாலும் மு.காவின் எதிரிகளாலும் திட்டமிட்டு சோடனை செய்யப்பட்டதல்ல.மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் நிலைத்துள்ள பிரச்சினைகளே.இப் பிரச்சனைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடும் மு.காவிற்கே உண்டு.இதனைத் தான் மு.காவின் எதிரிகள் சரியான விதத்தில் பயன்படுத்திக்கொண்டனர்.அதாவது மு.காவின் இயலாமையையும் பொடு போக்கையும் மு.காவின் எதிரிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.இதற்குப் பிறகு மு.கா இப் பகுதிகளில் இது போன்ற ஏதாவது மாநாடுகளை சிறு சல சலப்புமின்றி நடாத்த வேண்டுமென்றால் இக் குறித்த பகுதிகளிலுள்ள பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது இதில் பொதிந்துள்ள படிப்பினையாகும்.

பதினைந்து வருடங்களுக்கும் மேலாக மு.காவின் தலைமைப் பதவி வகிக்கும் அமைச்சர் ஹக்கீம் இதுவரை மூன்று தேசிய மாநாடுகளை மாத்திரமே நடாத்தியுள்ளார்.இவர் தேசிய மாநாடுகளை 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையும் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் மையப்படுத்தி நடாத்திருந்தார்.இவ் இரண்டும் மு.காவின் மிக முக்கியமான சவால் மிகுந்த காலப்பகுதியில் நடைபெற்றுள்ளதால் நிச்சயமாக இதுவும் மிக முக்கியமான ஒன்றை நோக்கியதான காய் நகர்த்தலாகவே இருக்க வேண்டும்.கண்டியில் இடம்பெற்ற மு.காவின் தேசிய மாநாட்டைத் தொடர்ந்து சில நாட்களிலேயே பாலமுனையில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் தேசிய மாநாடு ஒன்று இடம்பெறப்போவதான கதைகள் சிலாகிக்கப்பட்டிருந்தன.இம் மாநாட்டில் உள்ள முக்கிய சுட்டிக் காட்டல் மு.கா தலைவருக்கும் செயலாளருக்குமிடையில் போர் மேகங்கள் கருக்கொண்டிருந்ததாகும்.தற்போது இருவருக்குமிடையில் நேரடியான யுத்தமும் ஆரம்பித்துள்ளது.இந்த வகையில் சிந்திக்கும் போது அக் கண்டி பேராளர் மாநாட்டில் ஏற்பட்ட அதிர்வுகளை மக்கள் சனத்திரளைக் காட்டி அடக்குவதற்கான யுக்தியாக அமைச்சர் ஹக்கீம் இதனைக் கையாள நினைத்திருக்கலாம்.

மு.கா புதியதோர் பாதையில் மிகவும் உத் வேகத்துடன் பயணிக்க புறப்பட்ட ஒரு நிகழ்வாகவும் கண்டி பேராளர் மாநாட்டைப் பார்க்கலாம்.இதன் காரணமாக அமைச்சர் ஹக்கீம் மற்றும் ஹசனலியிற்குமிடையிலான மோதலை மாத்திரம் வைத்து இவ் விடயத்தை அணுகுவது பொருத்தமானதல்ல.அ.இ.ம.கா கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முப்பத்து மூன்றாயிரம் வாக்குகளை தனித்து பெற்றிருந்தது.இவ் வாக்குகளை அ.இ.ம.கா பெற்றமை மு.காவின் எதிரிகளுக்கு வயிற்றில் பாலை வார்த்த செயற்பாடாகிவிட்டது.அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பகுதிகளில் அமைச்சர் தயா கமகே முயன்றாலும் குறித்த சொல்லுமளவு வாக்குகளை திருப்பலாம் என்ற நம்பிக்கை கடந்த தேர்தல் மூலம் ஐ.தே.கவினருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் மு.கா முன்னர் போன்று அம்பாறை தனது கோட்டை எனக் கூறி ஐ.தே.கவிடம் அதி உச்ச சலுகைகளை எதிர்பார்க்க முடியாத நிலையே இருந்தது.மேலும்,எதிர்வரும் தேர்தல்களில் அ.இ.ம.கவும் ஐ.தே.கவும் இணைந்து மு.காவை வீழ்த்த திரை மறைவில் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ப்படுவதாகவும் அறிய முடிகிறது.நானே இலங்கை முஸ்லிம்களின் ராஜா என்னைப் புறக்கணித்து உங்களால் முஸ்லிம்களிடத்தில் நெருங்க முடியாது என்ற செய்தியை அமைச்சர் ஹக்கீம் இம் மாநாட்டினூடாக பேரின கட்சிகளுக்கு  சொல்லியுள்ளார்.இம் மக்கள் திரளைக் கண்ட பேரினக் கட்சிகள் அமைச்சர் ஹக்கீமை என்ன விலை கொடுத்தாவது தன் பக்கம் வைத்துக்கொள்ளவே முயலும்.தற்போது இலங்கை அரசியல் அரங்கில் சிறு பான்மை இனக் கட்சிகளின் வகி பாகமே பிரதானமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா தலைமையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி,தேசிய காங்கிரஸ்,சேகு இஸ்ஸதீன் குழுவினர் மற்றும் மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் மகன் அமான் அஷ்ரப் உட்பட பலர் இணைந்து மு.காவை எதிர்த்து ஒரு கூட்டு உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.இக் கூட்டைச் சேராது தடுக்க அம்பாறையில் மு.காவின் மக்கள் பலத்தின் முன் தாங்கள் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது பொருத்தமானது.மஹிந்தவின் வீழ்ச்சியில் முகவரி அற்றுப் போயுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்மாந்துறை நௌசாத் மற்றும் சிலர் செல்லும் வழி தெரியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.அ.இ.ம.காவில் விரக்தியுற்ற முன்னாள் கல்முனை முதல்வர் சிறாஸ் மீராசாஹிப் போன்றோரும் சற்று குழம்பிபோய்யுள்ளனர்.இவர்களை மு.கா தன் வசப்படுத்த தன்னிடமே மக்கள் பலமுள்ளது என்பதை வெளிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா முப்பத்து மூன்றாயிரம் வாக்குகளைப் பெற்று மு.காவின் கோட்டைக்குள் ஓட்டை போட்டுவிட்டதாக கூறித் திரிகிறது.இவ்வாறான கதைகள் எழுவது மு.காவிற்கு அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.இவைகளின் காரணமாக இச் சந்தர்ப்பத்தில் மு.கா இவ்வாறான தேசிய மாநாடுகளை நடாத்தி  தனது மக்கள் பலத்தை வெளிக்காட்டுவது பொருத்தமானது.

இத் தேசிய மாநாட்டின் இரண்டாம் பகுதியில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் தனதுரையில் நேற்று மு.கவிலிருந்து இருவரை நீக்கிவிட்டேன் இன்று நள்ளிரவுடன் இன்னும் சிலரை நீக்கபோகிறேன் எனக் ஆக்ரோசமாக கூறியிருந்தார்.அவர் உத்தியோக பூர்வமாக மௌலவி இல்யாஸ் மற்றும் மௌலவி கலீல் ஆகியோரையே நீக்கிருந்ததாக பின்பு அறியக்கிடைத்திருந்தது.அமைச்சர் ஹக்கீமினால் மு.காவின் செயலாளர் ஹசனலியும்,தவிசாளர் பஷீர் செகுதாவூதும் நீக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட போதும் அவ்வாறு யாரையும் இது வரை நீக்கியதாக அறிய முடியவில்லை.மக்களைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு அமைச்சர் ஹக்கீம் வார்த்தைகளை அள்ளி வீசி விட்டாரோ தெரியவில்லை.இதற்கு முன்பும் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மஹிந்த அரசில் அமைச்சர் ஹக்கீமிற்குத் தெரியாமல் அமைச்சைப் பெற்ற போது அமைச்சர் ஹக்கீம் அப்படி இப்படி என்று ஆக்ரோசப்பட்டு அடங்கிப் போன வரலாறுகளும் உள்ளன.நீக்கப்போவதாக பகிரங்கமாக கூறிவிட்டு இது வரை அமைச்சர் ஹக்கீம் யாரையும் கட்சியை விட்டு நீக்காமல் இருப்பது அவரது நகர்வுகளின் இயலாமையை புடை போட்டுக்காட்டுகிறது.அமைச்சர் ஹக்கீம் உயர்பீட கூட்டங்களைக் கூட்டாமல் தான் தோன்றித் தனமாக தான் நினைத்தவர்களை நீக்கும் போது அது பாரிய புரட்சிக்கு வித்திட வாய்ப்புள்ளது.இதனால் இவ் விடயத்தை அவர் மிகக் கவனமாகவே கையாள்வார்.

எது எவ்வாறு இருப்பினும் இம் மாநாட்டிற்கு கலந்து கொள்ளாதற்கு வேறு ஏதும் சாட்டுப் போக்குச் சொல்லாது தனது பதவியை குறைத்தமையே என தைரியமாக ஹசனலி கூறி இருப்பது அமைச்சர் ஹக்கீமுடன் சண்டைக்குத் தானும் தயாராகவுள்ளதை புடம் போட்டுக் காட்டுகிறது.இனி எத்தனை தலை உருளப் போகிறதோ என்ற வடிவலின் நகைச்சுவை நினைவூட்டிக்கொண்டு நடக்கப்போவதை காலம் சொல்லும் வரை காத்திருப்போம்.

குறிப்பு: இக் கட்டுரை 01-04-2016ம் திகதி வெள்ளிக்கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

Post a Comment

0 Comments