இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதற்காக இலங்கை வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வந்தனர்.
பல்லேகலில் நடந்த பயிற்சி ஆட்டத்தின்போது இலங்கை அணியின் தொடக்க வீரர் கவுசல் சில்வா காயம் அடைந்தார். பீல்டிங்கின்போது அவரது தலையில் பந்து தாக்கியது.
தினேஷ் சண்டிமால் அடித்த பந்து ‘ஷாட்லெக்’ பகுதியில் நின்ற அவரது தலையில் பட்டது. கவுசல் பீல்டிங்கின்போது தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தார். அப்படி இருந்தும் அவரது தலையில் பந்து தாக்கியது.
உடனடியாக அவர் விமானம் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் சில பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 வயதான கவுசல்சில்வா 24 டெஸ்டில் விளையாடி 1,404 ரன் எடுத்துள்ளார். சராசரி 31 ஆகும். 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி ஆடுகளத்தில் பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.


0 Comments