25 ஆந் தேதியானால் ஆறு இலக்கங்களில் சம்பளம் பெறும் எனது நண்பன் அவன்...இலங்கையின் புகழ் மிக்க தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராய் வேலை...கைநிறையப் பணமும் மனசு நிறைய சந்தோசமுமே வாழ்க்கையாய் இருந்த நண்பனுக்கு "ஆப்பு", திருமணம் என்ற வடிவில் ப்யூட்டி பாலர் போய் மேக்கப் போட்டு,பாரிஸ் ஃபேபியும் பூசி, புடவைகட்டி வந்தது...
கொழும்பில் வீடு, கார்,என்றெல்லாம் வந்த பேரம் பேசல்கள் எல்லாம் கடாசி எறியப்பட்டு சீதனம் ஏதுவும் இன்றி நடந்து முடிந்த திருமணம் அது.
கைக்கடிகாரங்கள் விற்கும் கடையில் ஒரு சாதாரண சேல்ஸ்மேனான நண்பனின் மாமானாருக்கு வீட்டுக்கு வந்த மருமகன் பொன்முட்டையிடும் வாத்து போன்ற ஒரு உணர்வு ஏற்பட,சொந்தமாய் கடை வைக்கும் ஆசை தொற்றிக் கொள்ள நண்பனிடம் 60இலட்சம் ரூபாய் கடன் கேட்கப் போக இவன் மறுக்க பிரச்னையின் ஆணிவேர் வீட்டு மெயின் ஹாலில் நாட்டப்பட்டது..
இந்தக் கடன் கொடுக்க மறுத்த விவகாரம் அந்த வீட்டின் அன்றாட நடவடிக்கைகளில் எல்லாம் தாக்கம் செலுத்தத் தொடங்க,இதைச் சுற்றி உருவான சின்ன சின்னப் பிரச்னைகள் ஒரு மெகா பிரச்னையாக மாற நண்பனின் நிம்மதி,சந்தோசம் எல்லாம் சென்னை வெள்ளம் போல வடிந்து போக கடைசியில் டிவோர்ஸில் போய் முடிந்திருக்கிறது..
பெண்வீட்டாருக்குஆடம்பர கல்யாணச் செலவுகளுக்கு மட்டும் 3 மில்லியன் ரூபாய் செலவாகி இருப்பதாகவும் நண்பரிடம் இருந்து பத்து இலட்சம் ரூபாயைப் பெற்றுத் தந்து டிவோர்ஸ் பெற்றுத் தருமாறு காதியாரை மாமானார் அணுகப் போக இஸ்லாத்தில் இல்லாத இப்படிப் பட்ட ஒரு நட்ட ஈடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
நாட்டில் கிட்னி திருட்டு, போதைப் பொருள் வியாபாரம் போல இப்போது திருமணமும் ஒரு பெரும் பிஸ்னஸாக மாறிப் போய்விட்டது..
கொரியா நாட்டில் வேலை செய்த மாத்தளையைச் சேர்ந்த ஒருவர் தன் சம்பாதிப்பில் கட்டிய இரண்டு மாடி வீடு, பல கோடி ரூபா பெறுமதியான கடைத் தொகுதி அத்தனையையும் தலையணை மந்திரத்திற்கு கட்டுப்பட்டு மனைவி பேருக்கு எழுத அடுத்த மாதம் அவள், இவர் வேணாம் நான் இன்னொருத்தருடன் வாழப் போகிறேன் என்று காதி நீதி மன்றம் போக செட்டில் மென்ட் என்ன என்றால் டிவோர்ஸ் பெற்றுத் தர அந்த பெறுமதியான வீட்டை இந்த உத்தமிக்கு தாரை வார்க்க வேண்டும்.இதில் காதிக்கும் இலஞ்சப் பணம் ஒரு பார்ஸல் நிச்சயம்.இது போல நிறைய சொல்ல முடியாத கதைகள் எக்கச் செக்கம்...
கொழும்பு, கண்டி,மாத்தளை மாவட்டங்களில் ஒரு சில காதியார்களின் திருவிளையாடலுடன் நடக்கும் இத்தகைய பண மோசடிகள் பரபரப்பாய்ப் பேசப் பட்டுக் கொண்டிருக்கின்றன..மாற்று மதத்தவர்களிடையே விவாகரத்துக்கள் நடக்கும் போது மனைவிக்கு ஒரு தொகை நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று டிஸ்ட்ரிக் கோர்ட் அறிவிக்கும்..இது பல மில்லியன்களில் வரும்.
இதைக் கண்டறிந்த சோனக சமூகத்தின். 24 x 7 பெண்ணியம் பேசும் மாணிக்கங்களும் சில லாயர்களும் இதற்கு அரபில் "மதாஹ் "என்று பேர் வைத்து இதை முஸ்லிம் விவாகரத்துக்களிலும் சட்டமாக்கப்பட வேண்டும் என்று போர்க் கொடி தூக்க வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் இவர்களின் உச்சந் தலையில் கொட்டி விரட்டியடித்தது.
சீதனக் கொடுமையால் கரையேற முடியாமல் ஏழைப் பெண்கள் தவித்துக் கொண்டிருக்க சமூகத்தின் இன்னொரு அங்கமான உயர் மத்தியதர வர்க்கம் இஸ்லாமிய விவகாரத்து தொடர்பான போதிய அறிவின்மையால் இப்படிப்பட்ட இலஞ்சப் பேர்வழிகளான காதிகளின் துணையுடன் நடை பெறும் இந்த பகல் கொள்ளையில் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்து நடு ரோட்டில் நிற்கிறது.....
சமூகத்தில் சீதன ஒழிப்பில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த மாபியா கும்பல்களின் இருட்டு முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலும் கொடுக்கப்பட வேண்டும்..
-Zafar Ahamed-


0 Comments