ஏமனில் 800 அல்-கொய்தாவினர் கொல்லப்பட்டனர் என்று அரபு கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
ஏமனில் அல்–கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அரபு நாடுகள் கூட்டமைப்பு வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. அல்-கொய்தா தீவிரவாதிகளால் கடந்த வருடம் பிடிக்கப்பட்ட தென்கிழக்கு மாகாணத்தின் தலைநகரில் நடைபெற்ற சண்டையில் 800 அல்-கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஏமனில் அரசுக்கு ஆதரவான படைகள் ஆயில் முனையம் மற்றும் தீவிரவாதிகளின் வலிமையான பகுதியாக அறியப்பட்ட முக்காலா நகரையும் தன்வசப்படுத்தி உள்ளது.
அரபு கூட்டுப்படையின் கமாண்டர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் “ அரசு கூட்டமைப்பு நடவடிக்கையின் விளைவாக 800க்கும் அதிகமான அல்-கொய்தா தீவிரவாதிகள் மற்றும் அவ்வியக்கத்தின் தலைவர்கள் கொல்லப்பட்டனர், சிலர் தப்பிவிட்டனர்,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏமனில் ஆதிக்கம் செலுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சவுதி அரேபியா தலைமையில் அரபு நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் வான்தாக்குதலை தொடங்கியது. இதற்கிடையே மறுபுறம் அல்-கொய்தா தீவிரவாதிகள் முன்னேறினர். பாதுகாப்பு படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது கவனம் செலுத்திய நிலையில் அல்-கொய்தா தனது படை பலத்தை அதிகரித்து அதிரடி தாக்குதல் நடத்தி, ஒவ்வொரு நகரங்களாக தங்கள்வசம் கொண்டுவந்தனர். ஏமனில் தொடர்ந்து சண்டை நடைபெற்ற நிலையில் ஐ.நா. இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதனையடுத்து கடந்த 11-ம் தேதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இருப்பினும் போர்நிறுத்தம் தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளுக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டது.
அல்-கொய்தா தீவிரவாதிகள் வசம் இருந்த முக்காலா நகரிலும் ராணுவம் நுழைந்தது என்றும் தீவிரவாதிகளுடம் இருந்து எதிர்நடவடிக்கை எதுவும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


0 Comments