Subscribe Us

header ads

குளியாப்பிட்டிய சிறுவனின் கல்விக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஜனாதிபதி

இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தியால் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கப்பட்ட சிறுவன், தனது கல்வியை தொடர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் கூறியுள்ளார்.

Image captionகுளியாப்பிட்டியவில் பாதிக்கப்பட்ட சிறுவனுடன் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.
இந்தச் சிறுவனை பார்வையிடுவதற்காக குளியாப்பிட்டியவிலுள்ள அவரது வீட்டுக்கு சென்ற பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அங்கிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டபோதே, அவர் இவ்வாறு கூறினார் என அங்கு சென்றுள்ள எமது செய்தியாளர் பிரசாத் பூர்ணிமால் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிறுவனின் வீட்டுக்குள் சென்று, அவருக்கு உணவு ஊட்டி அவருடன் விளையாடியதை, இந்த சிறுவன் தமது பிள்ளைகளுடன் பள்ளியில் கல்வி கற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பார்த்தனர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Image copyright
Image captionசிறுவனின் கல்விக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறுவனின் தாயாருக்கு ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார் (கோப்புப் படம்).
ஆறு வயதான இந்த சிறுவனின் தந்தை நோயினால் உயிரிழந்த நிலையில், அவர் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என அந்த பிரதேசத்தில் வதந்தி பரவியது.
இதனால் சிறுவனுக்கும் நோய் தொற்று இருக்கலாம் என சந்தேகித்த கிராம மக்கள், அந்தச் சிறுவனுடன் தமது பிள்ளைகள் கல்வி பயில்வதை தவிர்ப்பதற்காக, தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதை நிறுத்தினர்.
கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என பெற்றொருக்கு விளக்கமளித்தபோதிலும், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வில்லை.
இதனால் சிறுவனை, அவர் சேர்க்கப்பட்ட பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்ள மாகாண கல்வி அமைச்சர் தீர்மானித்தார்.
எனினும் சிறுவனின் அடையாள ஆவணங்களை மாற்றி வேறு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் மாகாண கல்வி அமைச்சர் கூறினார்.
தனது மகன் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கப்பட்டதன் மூலம், கல்வி கற்பதற்கான உரிமை மீறப்பட்டுள்ளதாக அவரது தாயார் கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

Post a Comment

0 Comments